
இந்த வீதி வழியே போக
அனைவருக்கும் பிடிக்கிறது
ஒரு திருமண ஊர்வலம்
ஒரு இறுதி ஊர்வலம்
ஒரு அரசியல் ஊர்வலம்
ஒரு விழிப்புணர் ஊர்வலம்
மற்றும் ஊர்வலத்திற்காகவேயான
ஊர்வலங்கள்
இந்த வீதி வழியே போகவே
அனைவருக்கும் பிடிக்கிறது
இரு சக்கர வாகனம்
மகிழுந்து
குழந்தைகள்
பெரியவர்கள்
நடுத்தரவயதுடையவர்கள்
முதியவர்கள்
அனைவரும் போகிறார்கள்
வழக்கமாக
அதிகாலையிலேயே
உன்மத்தம் கொண்டு
மண்ணில் புரண்டு முத்தமிட்டு
விச் விச் சப்தத்தால்
இந்த வீதியை துயிலெழுப்பி
தென்னையில் சறுக்கும்
அடையாளம் தெரியாத
விரை சக்கரத்தில்
நேற்று நசுங்கி கூழாகிபோன
இந்த வீதிக்குப் பிடித்த
அந்த சாம்பல் நிற
இளம் அணிலைத்தவிர
