முண்டகோபநிஷதம் அறிவோம்/எஸ்ஸார்சி

அத்யாயம் 2 பகுதி 1.

1.கொழுந்துவிட்டெரியும் தீயிலிருந்து
ஆயிரம் தீப்பொறிகள் எழுவதுபோல்
அழிவில்லா பிர்மத்திடமிருந்து
அனேக ஜீவர்கள் தோன்றி
அந்த பிர்மத்திடமே திரும்புகின்றனர்.
இதுவே உண்மை.

  1. அது ஒளிர்வது ,
    உருவமில்லாதது,
    இருப்பதுவும் இல்லாததுவும்,
    பிறவிஎடுக்காதது
    பிராணன் இல்லாதது
    மனம் என்ற ஒன்றில்லாதது
    தூயது, பெரிதினும் பெரிது,
    அழிவில்லாதது.

3.பிர்மத்திடமிருந்தே உயிர் மனம்
அனைத்து உறுப்புக்கள்,
ஆகாயம்,காற்று, தீ, நீர்,
எல்லாரையும் தாங்கும் நிலம்
இவை இவை பிறக்கின்றன.

  1. தீ அவன் தலை,
    சூரிய சந்திரர் கண்கள்
    நான்கு பருவங்கள் திசைகள்
    அவன் செவி, பேச்சு
    சொல்லப்பட்டவேதம்,
    காற்று அவன் மூச்சு,
    அவன் இதயம் இவ்வண்டம்,
    அவனே எல்லா உயிர்களிலும்
    உள் உறைகிறான்.
  2. புவியும் சொர்க்கமும்
    அவனிடமிருந்து உண்டாகின்றன.
    இவை இரண்டிற்கும்
    முதல் தீ சூரியனிடமிருந்து,
    இரண்டாவது தீயோ மேகம்
    சந்திரனிடமிருந்து,
    மூன்றாவது தீ ஆகின செடிகொடிகள்
    அந்த மேகத்திடமிருந்து,
    செடிகொடிகளிருந்து
    மனிதன் என்கிற நான்காவது தீ
    விந்து என்பது ஐந்தாவது தீ
    அவனிடமிருந்து அது பெண்ணிற்கு.
    இப்படியாய் அனேக உயிரினங்கள்
    புருஷனிடமிருந்து தோன்றுகின்றன.

6 . பிர்மத்திடமிருந்தே எல்லாமும்
ரிக் சாம யஜுர் தீட்சை
அனைத்து யாகங்கள் மிருக பலி
புரோகித தட்சணை,
ஆண்டு,யாகம் செய்வோன்
சந்திரன் சுத்தி செய்ய, சூரியன் ஒளி தர,
பெரும் பெரும் உலகங்கள்..

7.பிர்மத்திடமிருந்தே கடவுளின்
பல்வேறு நிலைகள்.
தேவர்கள் மனிதர்கள் கால் நடைகள்
பறவைகள் பிராண அபானங்கள்
அரிசி பார்லி
உண்மை தவம் பக்தி புனிதம் ஆளுகை.
இவை எழுகின்றன.

8.பிர்மத்திடமிருந்தே ஏழு பிராணங்கள்,
ஏழு தீ, ஏழு எரிபொருள்,
ஏழு வழிபாடு,
இதயத்தில் வதியும்
பிராணன் வியாபிக்கும் ஏழு உலகங்கள்
அனைத்தும் ஏழு ஏழு
என்பதாய்த்தொடர்கின்றன..

9.பிர்மத்திடமிருந்தே
சமுத்திரங்கள் மலைகள்
பல்வித ஆறுகள், வருடாந்திர தாவரங்கள்
அவற்றின் ரசங்கள்
சூக்கும பஞ்ச பூதங்களால்
சூழ்ந்த இவ்உடலை நிர்வகிப்பது
இவை இவை இப்படி
நிகழ்கின்றன ஓ இளைஞனே

10.பேரண்டத்தில் புருஷனே எல்லாமும். யாகம் தவம் பிரமன் அழியா உன்னதங்கள் இதயத்தில் மறைந்துள்ளது இவை அறிந்தோன் இங்கேயே அறியாமையை நீக்குபவன் என்பதாக அது.

அத்யாயம் 2 பகுதி 2

1 ஒளிர்வது அருகிருப்பது
இதயத்தில் உலவுவது
பெரிதினும் பெரிது
அனைத்திற்கும் ஆதாரமானது.
இயங்கும் அனைத்திற்கும்
சுவாசிக்கும்அனைத்திற்கும்
கண் இமைக்கும்
அனைத்த்திற்கும் பிர்மத்தினுள்
மய்யமாய் உறைவது .
உருவமுள்ளதும் உருவமில்லாததும்
எல்லோராலும் மதிக்கப்படுவதும்
மனித அறிவுக்கு எட்டாததும்
அனைத்திற்கும் உயர்ந்ததும் அது.

  1. பிரகாசமானது சிறிதினும் சிறிது
    அனைத்து உலகங்களும்
    அதன் மீது அமைந்தேயிருப்பது,
    அழியா பிர்மம் உறைவது.
    அதுவே பிராணன் பேச்சு மனம்
    அது உண்மை அழிவில்லாதது
    ஓ இளைஞனே . அதனையே பெறுவோம். 3 பேராயுதமான உப நிசத்
    என்கிற வில் கொண்டு,
    தொடர்த் தியானம் என்கிற கூர் அம்பு பூட்டி பிர்மத்தின் மீதே
    மனத்தைச்செலுத்துகின்ற
    நாண் இழுத்து
    அழிவில்லாத பிர்மம்
    என்கிற இலக்கை
    அடைவாய் ஒ இளைஞனே!
  2. ஒம் எனும் ப்ரணவம் வில்,
    ஆன்மா என்பது அம்பு
    பிர்மம் என்பதிலக்கு.
    தன்னைக்கட்டுப்படுத்திய மனிதன்
    அதனை எய்தவேண்டும்.
    அம்பும் இலக்கும் ஒன்றாகி
    அனைத்தும் பிர்மமம்
    எனவே முடியும்.

5.மேலுலகம் பூவுலகு
ஆகாயம் மனம் பிராணன்கள்
அனைத்தும் பிர்மத்தில்
மய்யம் கொண்டுள்ளன
அதுவே அனைத்திற்கும் ஆன்மா.
மற்ற பேச்சுக்களை விட்டொழியுங்கள்,
என்றும் அழிவில்லாத ஒன்றிற்கு
இதுவே பாலம் என்றாகிறது.

  1. நரம்புகள் சந்திக்கும் இதயத்தில்
    அது பலவகையானும் இயங்குகிறது.
    சக்கரத்தில் ஆரக்கம்பிகள் போலத்தான்.
    ஓம் என்பதை தன்னுள் ஆக்கித்
    தியானியுங்கள்.
    இருண்ட பகுதிக்கு
    அப்பால் சென்றுவிடுவீர்கள்.
    உங்களுக்கு வாழ்த்துகள்.
  2. அனைத்தும் அறிந்த,
    விளக்கமாய் தெரிந்த
    உலகெங்கும் ஒளிருகின்ற
    ஆகாயத்தில் உறைகின்ற
    ஆன்மா பிர்ம உலகத்தில் .

ஆன்மா உங்கள் மனம்போல்
உடலுக்கும் வாழ்க்கைக்கும்
வழிகாட்டியாகும்.
ஆன்மா உணவில் உறைவது,
இதயத்திற்கு அருகில் இருப்பது.
அருளில் நிறைந்த
அழியாத ஆன்மாவை
புத்திசாலி உயரிய
அறிவோடு காண்கிறான்.

8.நுண்ணியன் பெரிதினும் பெரியோன்
அவனை தரிசித்தால்
இதய முடிச்சுக்கள் அவிழும்
அய்யங்கள் அகலும்
கர்மாக்கள் அழியும்.

  1. கறை எதுவுமற்ற
    பிரிவுகளற்ற பிர்மன்
    தங்கத்தகடு போர்த்திக்கொண்ட
    மூடிக்குக்கீழாக உள்ளது.
    தூயது ஒளியின் ஒளி.
    ஆத்மாவை அறிந்தவர்கள்
    இதை அறிவார்கள்.
  2. அங்கு சூரியன் ஒளிராது
    நிலா விண்மீன்கள் ஒளிராது
    மின்னல்கள் அக்னி எதுவுமிராது
    அது ஒளிரும்போது
    அதன் பின்னே அனைத்தும் ஒளிரும்.
    அதன் ஒளியால்
    அனைத்தும் ஒளிர்கின்றது.
  3. அழியா பிர்மம் முன்னால்,
    அந்த பிர்மம் பின்னால்,
    வலப்பக்கம் இடப்பக்கம்,
    மேலாக கீழாக
    எல்லா இடங்களிலும் அதுவே.
    பிர்மமே எல்லாமுமாய்.
    அதுவே மிகமிக உயர்ந்தது.

One Comment on “முண்டகோபநிஷதம் அறிவோம்/எஸ்ஸார்சி”

Comments are closed.