கம்பன் கவியமுதம்—-74/வளவ. துரையன்

அனைவர்க்கும் மகிழ்ச்சி
ஆர்த்தனர் முறைமுறை அன்பினால் உடல்
போர்த்தன புளகம்வேர் பொடித்த நீள்நிதி
தூர்த்தனர் எதிர் எதிர் சொல்லினார்க்கு எலாம்
தீர்த்தன் என்று அறிந்ததோ அவர்தம் சிந்தையே [294]

[புளகம்=மயிர்கூச்செறிதல்]

தயரதனுக்குப் பிள்ளைகள் பிறந்ததால் அயோத்தி மக்கள் அடைந்த மகிழ்ச்சியைக் கம்பன் இப்பாடலில் கூறுகிறான். அவர்கள் மகிழ்ச்சியால் ஆரவாரித்தார்கள். உடம்பெல்லாம் மயிர்க் கூச்செறிந்தார்கள். உடல் முழுதும் வியர்வைத்துளிகள் வந்து தோன்றின.  எதிரே வந்து யார்யார் இச்செய்தியைச் சொன்னார்களோ அவர்களுக்கெல்லாம் அவர்கள் பல பொருள்களைத் தானமாகக் கொடுத்தார்கள். கம்பன் தானாக ஒரு கூற்றை இங்கு வைக்கிறான். அவர்கள் ஏன் இந்த மகிழ்ச்சியை அடைந்தார்கள் எனும் கேள்வியை எழுப்பி ஒருவேளை இராமனாகப் பிறந்தவன் திருமாலே என்பதை அவர்கள் அறிந்துகொண்டார்கள் போலும் என விடையும் சொல்கிறான். மேலும் ஆரவாரித்தார்கள் என்பதால் வாக்கும், அன்பினால் என்பதால் மனமும், உடல் புளகம் போர்த்தது என்பதால் மெய்யும் என எல்லாமே மகிழ்ச்சியடைந்தனவாம்.