அஞ்சலட்டை கிளப்பிவிட்டஅலை அலையான நினைவலைகள்/ரேவதி பாலு

அஞ்சலட்டை என்றாலே என் தாத்தா தான், தாய் வழி தாத்தா தான், முதலில் நினைவுக்கு வருவார் . அவர் நாக்பூரில் தபால் தந்தி இலாக்காவில் வேலையில் இருந்தார். என் தாயார் திருமணத்திற்கு முன்பு நாக்பூரில் இருந்தார் . திருமணம் ஆகி சென்னைக்கு வந்த பின் தன் மகளின் பிரிவு தாங்காமல் வாரம் இரு முறை அஞ்சல் அட்டையில் கடிதம் போடுவார். அந்த அட்டை முழுவதும் நுணுக்கி நுணுக்கி எழுதி உருகி உருகி கடிதம் வருமாம். அப்பா சொல்லுவார். எங்க அம்மாவுக்கும் ஒரு 25, 30 அஞ்சல் அட்டைகள் பெறுநர் பகுதியில் தன்னுடைய விலாசத்தையும் எழுதி அவரிடம் கொடுத்து அனுப்பி வாரம் இருமுறை சௌக்கியமாக இருக்கிறேன் என்று இரண்டு வரி எழுதி போடும்படி சொல்லு வாராம். இந்த தாத்தா அப்பாவின் அப்பா (அவரை நாக்பூர் தாத்தா என்றும் இவரை எக்மோர் தாத்தா என்றும் சொல்லுவோம்) வீடு அதற்கு நேர் எதிர்மறை. ஒருவரிடமிருந்து கடிதம் வராதவரை அவர்கள் சௌக்கியமாக இருக்கிறார்கள் என்று அவர்களே நினைத்துக் கொள்வார்களாம். ஏதாவது விஷயம் இருந்தால் தான் கடிதமே போடுவார்களாம். இரும்பு எஸ் கம்பி ஒன்று உத்திரத்தில் இருந்து தொங்கிக் கொண்டிருக்குமாம். அதில் அந்த அஞ்சலட்டைகளை குத்தி வைத்திருப்பார்களாம் அம்மா சொல்வார்கள். பின் நாட்களில் அம்மா பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி இருக்கும்போது குழந்தை பிறந்த தகவல் எழுதி தாத்தாவுக்கு கடிதம் போடும் வேலை எனக்கு வந்தது. தாத்தா எங்கேயோ வடக்கே இருப்பதால் தன் பெண்ணிற்கு என்ன ஆச்சோ என்ற பரிதவிப்பு அவருக்கு அதிகமாக இருக்கும். கடிதம் தாமதமாக வந்தால் மிகவும் கோபம் வரும். அனேகமாக நான் தான் அவரிடம் அடிக்கடி திட்டு வாங்குவேன். அதிலும் கடைசியாக என் அம்மாவிற்கு இரட்டை பிள்ளைகள் பிறந்து ஆஸ்பத்திரியில் இருந்த போது என்னை தாத்தாவுக்கு தகவல் தெரிவிக்க சொன்னாள்அம்மா. நான் வீட்டில் பெரிய பெண் என்பதால் வீட்டு வேலை பள்ளி படிப்பு ஆஸ்பத்திரிக்கு போகும் அலைச்சல் இதற்கு நடுவே கடிதம் எழுத மிகவும் தாமதம் ஆகிவிட்டது. அம்மா வீட்டுக்கு வருமுன் ஒரு அஞ்சல் அட்டை எழுதி தபாலில் சேர்த்து விட்டேன். அந்த நேரத்தில் தாத்தா ரிட்டயர் ஆகி ராணிப்பேட்டை வந்து விட்டார். ஒரு சுப விஷயத்தை தெரிவிக்கும் போது அட்டை ஓரத்தில் குங்குமம் தடவி அனுப்ப வேண்டுமாம்.

நானும் அப்போது சிறு பெண் தானே. எனக்கு அதெல்லாம் தெரியவில்லை. முத்து முத்தாக இரட்டப்புள்ள பெத்து இருக்கா என் பொண்ணு குங்குமம் தடவாமல் நீ கடிதம் எழுதிட்டியே என்று ஊரில் இருந்து வந்து என்னிடம் பழி சண்டை போட்டார் தாத்தா.

பின்னாளில் நான் எழுதிய ஒரு சிறுகதையில் அந்த வீட்டுக்கு வரும் மாட்டு பெண்ணிற்கு அவள் பெற்றோரிடம் இருந்து வரும் அஞ்சலட்டைகளை ஒரு பிடிபோன கூடையில் வைத்து பரணில் வைத்திருப்பாள். ஒரு நாள் மாமனார் பரணை ஒழிக்கும் போது பாசத்தை பொழிந்து அவள் பெற்றோர் எழுதிய கடிதங்கள் மேலே இருந்து கொட்டி அவள் மேல் அபிஷேகமானது என்று எழுதி இருக்கிறேன். அப்பாவுக்கு( எழுத்தாளர் ரசவாதி )திரு லாசர அவர்கள் ஒரு அஞ்சல் அட்டையில் நுணுக்கி நுணுக்கி எழுதிய கடிதத்தை இன்னமும் பொக்கிஷமாக நாங்கள் வைத்துக் கொண்டிருக்கிறோம்.

One Comment on “அஞ்சலட்டை கிளப்பிவிட்டஅலை அலையான நினைவலைகள்/ரேவதி பாலு”

Comments are closed.