கிளெமென்டைன் வான் ராடிக்ஸ் கவிதை

தமிழில் : க.மோகனரங்கன்

நீ நேசித்த முதல் பெண்
நான் அல்ல.
திறந்த வாய் மூடாமல்
வியப்புடன் நான் பார்த்த
முதல் ஆணும் நீ இல்லை.
ஒரு கத்தியின் கூரிய முனைகள் போல
நாமிருவரும் இழப்புகளை
அறிவோம்;
நாம் இருவருமே தோலை விடவும்
திசுக்களில் அதிக வடு கொண்ட உதடுகளோடு வாழ்ந்தோம்.
நமது காதல் முன்னறிவிப்பு ஏதுமின்றியே
நள்ளிரவில் வந்தது.
அன்பு வேண்டுமென இரைஞ்சுவதை
நாம் கைவிட்டபோது
நமது காதல் வந்தது.
அது அதிசயத்தின்
ஒரு பகுதியாக இருக்கக்கூடும் என்று எண்ணுகிறேன்
இப்படித்தான் நாம் குணமடைகிறோம்.
நான் உன்னை மன்னிப்பைப் போல முத்தமிடுகையில்
நான்தான் நம்பிக்கை என்பது போல
என்னை நீ தாங்கி பிடிப்பாய்.
நாம் கைகளைப் பிணைத்துக்
கொள்வோம்,
ஒரு புத்தகத்திற்குள்
பொத்தி வைத்திடும் பூக்களைப் போல
நமக்கு இடையே
வாக்குறுதிகளை
காத்து வைப்போம்
உனது சருமத்தில் வழியும்
வியர்வையின் உப்புக்கு
நான் ஈரேழ்வரிப் பாடல்கள் எழுதுவேன்
உன் மூக்கிலிருக்கும் வடுவிற்கு நாவல்கள் எழுதுவேன்.
கடைசிக் கடைசியாக
உன்னை கண்டறிந்ததும்
உணர்ந்த விதத்தை
விவரித்திட நான் முயன்ற
அனைத்து வார்த்தைகளையும் கொண்டொரு
அகராதியை படைப்பேன்.

உனது தழும்புகளைக் கண்டு
இனியும் நான் அஞ்சப்போவதில்லை.

சிலசமயங்களில்
உன்னுடைய சிதிலமுற்ற நேர்த்தியினூடாக
உன்னைக் காண நேரிடுவது இன்னும் கடினம்
என்று எனக்குத் தெரியும்.
ஆனால் தயவுசெய்து தெரிந்து கொள்:
சூரியனை விட பிரகாசமாக
நீ எரியும் பகல்களிலும்
அல்லது
உனது உடல் ஆயிரம் கேள்விகளாக உடைந்து
என் மடியில் நீ சரியும் இரவுகளிலும்
நான் இதுவரை பார்த்ததிலே மிகவும் அழகு நீதான்.
அமைதியான பொழுதாக
நீ இருக்கும் போதும்
நான் உன்னை நேசிப்பேன்.
சூறாவளியாக நீ மாறும்போதும்
நான் உன்னை நேசிப்பேன்.