
(1)
சொல்லாமல் கொள்ளாமல் ஏறிவிட்டது விலைவாசி
சொல்லிவிட்டா எகிறும் இந்த விலைவாசி
கொள்ளி போல் உக்கிரம் காட்டும்
ஏறும் அகவிலை குறையாதா?
(2)
சொல்லாமல் கொள்ளாமல் ஏறிவிட்டது விலைவாசி.
சொல்லாமல் கொள்ளாமல் விடுப்பில் செல்லும்
செல்லம்மா; கொண்டவன் கண்ணில் இயலாமை!
என்றுதான் மாறுமோ இந்நிலை?
(3)
சொல்லாமல் கொள்ளாமல் ஏறிவிட்டது விலைவாசி;
தங்கமும் வெள்ளியும் எட்டா இடம்!
பட்டு கூறை புடவை; எப்படி
வாங்க? இந்த நிலையில்?
(4)
சொல்லாமல் கொள்ளாமல் ஏறிவிட்டது விலைவாசி.
சொல்லாமல் கொள்ளாமல் வந்த விருந்தினர்…
பக்கத்து வீட்டிலிருந்து ஒரு விண்ணப்பம்..
ஐயாயிரம் கிடைக்குமா; கைமாத்தாக?
(5)
சொல்லாமல் கொள்ளாமல் ஏறிவிட்டது விலைவாசி.
ஏறட்டும்! ஏறட்டும்!ஏறினால் என்ன!
இறங்கினால் என்ன! இருப்பது போதும்
எங்களுக்கு இதுவே அதிகம்.
(6)
சொல்லாமல் கொள்ளாமல் ஏறிவிட்டது விலைவாசி.
சொல்லாமல் கொள்ளாமல் வரன் தகைந்தாயிற்று;
தாலிக்குப் பொன்னும்,காது,மூக்கு
பொத்தவும் ஏது வழி?
(7)
சொல்லாமல் கொள்ளாமல் ஏறிவிட்டது விலைவாசி.
கெஞ்சிக் கேட்டும் பஞ்சப்படி ஏறவில்லை.
இப்படியே போனால் நாடாரும் முகஞ்சுளிப்பார்;
நானும் வேலை பார்க்கணும்.
(8)
சொல்லாமல் கொள்ளாமல் ஏறிவிட்டது விலைவாசி.
கோடை மழை; ஆடிக் காற்று;
அப்பாவின் கோபம்;
அம்மாவின் கடுப்பு;
எது அதற்கு ஈடு?
(9)
சொல்லாமல் கொள்ளாமல்
ஏறிவிட்டது விலைவாசி.
சொல்லாமல் கொள்ளாமல்
எகிறும் மின்கட்டணம்;
மருத்துவ செலவு;
கைபேசி கட்டணம்;
என்னதான் இனி செய்ய?
(10)
சொல்லாமல் கொள்ளாமல்
ஏறிவிட்டது விலைவாசி.
பள்ளிக் கட்டணம்
எள்ளி சிரிக்குது!
புத்தக விலை
ஏறா மலை!
கழுத்தில் நிலையா தலை!
5-7-2023
