கருணை இல்லம்/நாகேந்திர பாரதி

அந்த வீடியோவைப் பார்த்தவுடன் நாகப்பனுக்குக் கண் கலங்கியது. வயது முதுமை ஒருவரை இப்படியும் படுத்தும் என்பதைக் கண்கூடாகப் பார்க்கும் பொழுது தான் முதுமையை பற்றிய ஒரு பயம் வருகிறது. என்ன செய்வது. அப்பொழுது கண்மாய்க்குப் பத்துத் தரம் நடந்து, தலையிலும் இடுப்பிலும் குடத்தைச் சுமந்து வந்த அம்மாவின் ஞாபகம் வந்தது . அதே அம்மா இப்போது எழுந்து உட்காரக் கூட முடியாமல் அவளைத் தாங்கிப் பிடித்தபடி ஜூஸ் புகட்டிக் கொண்டிருக்கிறாள் அந்தக் கருணை இல்லத் தலைவி. தான் கருணையுடன் அவன் அம்மாவைப் பார்த்துக் கொள்ளும் விபரத்தை அடிக்கடி வீடியோவில் அனுப்பி வைப்பாள் அந்தத் தலைவி சுமதி.

மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை அந்த இல்லத்திற்கு அனுப்பினாலும் இப்படிப் பரிவோடு பார்த்துக் கொண்டு , தேவைப்பட்டால் நர்ஸ் , டாக்டர் உதவியும் அளித்து , டயப்பர் மாற்ற , தூக்கிச் சென்று குளிக்க வைக்க பல பேர் துணையும் வைத்துக் கொண்டு , பேச்சுத்துணைக்கும் சேர்ந்து பேசிக்கொண்டு இருக்கும் இந்த இல்லம் அம்மாவுக்கு வசதி என்று தானே அங்கே சேர்த்துள்ளான் . வீட்டில் அவரவர் வேலை அவருக்கு. பேச்சுத் துணை இருக்காது. ஓரிரு வேலையாட்கள் போதாது கவனிக்க . அதுவும் இருபத்து நாலு மணி நேரம் மருத்துவ உதவியோடு வீட்டில் கிடைக்குமா.

ஆனால் சொந்தங்கள் என்ன சொல்கிறார்கள். ‘அம்மாவை வீட்டில் வைத்து பார்த்துக்கிறதுக்கு மனசு இல்ல, கருணை இல்லத்தில் சேர்த்துட்டான்’ என்று வாய்கிழியப் பேசுகின்ற சொந்தங்களில் ஒருவர் கூட ஒரு தரம் கூட அம்மா மூன்று மாதங்கள் இருந்த அந்த ஆஸ்பத்திரியில் வந்து பார்க்கவில்லை. .இப்பொழுது பேசுவதில் குறைச்சல் இல்லை என்று எண்ணிக்கொண்டான் .பல லட்ச ரூபாய் செலவழித்து டாக்டர் எவ்வளவோ டெஸ்ட்டுகள் எடுத்துப் பார்த்து ,இனிமேல் பார்க்க முடியாது என்று சொல்லியபின் என்ன செய்வது. வாழ்வின் நாட்கள் நகர்ந்து கடைசிக் காலம் வரும்போது , இந்தக் கருணை இல்லங்களின் அவசியம் எவ்வளவு தேவை என்று எண்ணியவனின் எண்ணங்கள் பின்னோக்கி நகர்ந்தன.

‘குறுந்தாயி , உனக்கு நெல்லு காயப்போட எங்க வீட்டு வாசல்தான் கிடைத்ததா’ என்று கோபத்துடன் கத்திய படி வந்த மங்கம்மாவை அலட்சியமாகப் பார்த்தபடி குறுந்தாயி அவளது பிள்ளைகளோடு சேர்ந்து கோரப்பாயில் காயப் போட்டிருந்த நெல்லைச் சுருட்டி எடுத்துக்கொண்டு முளைக்கொட்டுத் திண்ணைப் பக்கம் சென்றாள் .

‘ஏதோ இந்த கிராமத்து ரோடு முழுக்க இவுகளோட மாதிரி ‘என்று முணுமுணுத்தபடி சென்றவளிடம் ‘அப்படி என்னடி முணுமுணுக்கிற, அதி காலையில எந்திரிச்சு கூட்டிப் பெருக்கி சாணி தெளித்து கோலம் போட்டு வச்சிருந்தா, அதுக்கு மேல வந்து கோரப் பாயைப் போட்டு நெல்லு காய வைப்பீகளாக்கும்’ என்று கத்திவிட்டு , கண்மாய்க்குத் தலையிலும் இடுப்பிலும் குடங்களைத் தூக்கிக் கொண்டு தண்ணீர் எடுக்கக் கிளம்பினாள் மங்கம்மா.

அவ்வப்போது நடக்கின்ற வாடிக்கைதான் இது. நெல்லை அவித்துக் காயப் போடுவதற்கு இடம் தேடுவதிலே அந்த கிராமத்து பெண்களுக்கு எல்லாம் இவர்கள் வீட்டு முன் உள்ள பெரிய பொட்டல் மேல்தான் கண். நன்கு வெயில் வந்து காய்வதற்கு ஏற்ற இடம். குடத்தோடு கிளம்பிய மங்கம்மா, அப்பொழுதுதான் வரப்பில் வந்து கொண்டிருந்த நாகப்பனைப் பார்த்தாள் . ‘வாடா வா வா ‘ என்றபடி தன் மகனை வரவேற்று வீட்டுக்குத் திரும்பி உள்ளே கூட்டிப் போனவள் அவனைத் தடவிக் கொடுத்து . ‘முந்தி பார்த்ததுக்கு இப்ப இளைச்சு போயிட்ட, வருஷத்துக்கு இரண்டு மூணு தடவை தான் வர்றே. வீட்டு வேலை, ரெண்டு புள்ளைகளைப் பாத்துக்கிறதிலேயே என் நேரம் ஓடிடுது அடுத்தடுத்து இரண்டு பிள்ளைகள் பிறந்துட்டதனால உன்னை தாத்தா வீட்டில் கொடுத்து வளர்க்கச் சொல்ல வேண்டியதாய் போச்சு. அம்மா மேல பாசம் இல்லாமல் போயிடுவேன்னு பயமாவும் இருக்கு’ என்றபடி பார்த்த அம்மாவை, வரவழைத்துக் கொண்ட பாசத்துடன் பார்த்தான் நாகப்பன்.

‘சரி , இரு , நான் போயி தண்ணீ எடுத்திட்டு வந்துர்றேன். அப்பா வந்ததும் மீன் பிடிச்சிட்டு வந்து , மீன் குழம்பு வச்சு தர்றேன். சாப்பிட்டுப் போ எப்பவும் போல வந்த உடனே அவசரமா ஓடாத ‘ . அவனுக்கு என்னமோ அந்த கிராமத்தில் இருப்பதைவிட தாத்தா வீட்டில் சின்ன டவுனில் இருப்பதுதான் பிடித்திருந்தது . சிறுபிள்ளையிலிருந்து வளர்த்த தாத்தா அம்மாச்சி அல்லவா, கூடவே அவனைக் கவனித்துக் கொள்ள சின்னம்மாக்கள் வேறு .

ஆனால் அம்மாச்சி தான் எப்படியும் வருஷத்துக்கு ரெண்டு மூணு தடவையாவது அவனை வலுக்கட்டாயமாகக் கிராமத்துக்கு அனுப்பி வைப்பாள் . தன் பொண்ணு மேல இருக்கிற பாசம். பேரப் புள்ளைக்கு அம்மா பாசம் போயிடக்கூடாதுன்னு அனுப்பி வைப்பாள் . அவளும் ஒரு தாய்தானே. ஏற்கனவே , பொண்ணைக் கிராமத்தில் கட்டிக் கொடுத்த கவலை. செல்லமா வளர்த்த பொண்ணு , வயக்காட்டு வேலை, கண்மாய்க்குத் தண்ணீ எடுக்கப் போறதுன்னு கஷ்டப்படுறதைப் பார்த்திருக்காளே.

‘என்ன பண்றது . மாப்பிள்ளை பாசக்காரர் . கட்டிக் கொடுத்தாச்சு. மத்தப் பொண்ணுங்களுக்கு டவுன் மாப்பிள்ளைகள். கிராமத்து மாப்பிள்ளைன்னாலும் பொண்ணை நல்லா பார்த்துக்கிறார் . இதோட வருஷத்துக்கு ஒண்ணா மூணு புள்ளை பெத்துட்டா. எல்லாம் இங்கே வந்து தான் பிரசவம் பார்த்து அனுப்பினோம் . அவ நல்ல இருக்கணும் ‘ என்று சாமியை வேண்டிக்கொள்வாள் அடிக்கடி.

பொண்ணுக்கு வேண்டியது எல்லாம் மூட்டை கட்டி அப்பப்போ போயி கொடுத்துட்டுதான் வருவாள்.
அடுத்தடுத்த புள்ளைங்க வந்துட்டதாலே வளர்க்க முடியாம கஷ்டப் படுவாளேன்னுதான் இவனைத் தங்கள் வீட்டிலேயே வச்சு படிக்க வச்சு பார்த்துக்கிடுறாள். அம்மா பாசம் பேரனுக்கு போயிடக்கூடாதுன்னு தான் அவனையும் அப்பப்போ கிராமத்துக்கு அனுப்பி வைப்பாள். அவனும் ஏதோ ஒரு ஒப்புக்கு வந்து இருந்து விட்டு, அப்பா , அம்மா, தம்பி , தங்கையோடு பேசிவிட்டுச் செல்வான் .அவனுடைய நட்பு வட்டாரம் அன்பு வட்டாரம் எல்லாமே அங்கே தாத்தா அம்மாச்சி இருக்கின்ற அந்த ஊரில் தான் .

இப்பொழுது தான் வயக்காட்டில் இருந்து களைத்துப் போய் வந்த அப்பா ‘இரு பதநீ வாங்கிட்டு வர்றேன். , நுங்கும் வெட்டிட்டு வர்றேன்’ என்றபடி திரும்பினார். சென்று சிறிது நேரத்தில் அவர்கள் வயக்காட்டு வரப்பு ஓரத்தில் இருந்த பனை மரத்திலிருந்து அப்போதுதான் இறக்கிக் கொண்டிருந்த பதனியை வாங்கிக்கொண்டு அந்த மரமேறியை நுங்கு வெட்டித் தரச் சொல்லி வாங்கிக் கொண்டு வந்து நுங்கை பதமாகச் சீவி , நாகப்பன் கட்டை விரலை விட்டு கம்பரித்துச் சாப்பிடும் அழகை பார்த்து ரசித்தனர் அவன் பெற்றோர். கூடவே தம்பி தங்கையும் நுங்கு சாப்பிட, ‘நான் போகணும் அப்பா ‘ என்றபடி கிளம்பி விட்டான். தடுக்க முடியவில்லை. அவர் கூடவே மெயின் ரோட்டுக்கு வந்து அவனைத் தாத்தா வீட்டுக்கு பஸ் ஏற்றிவிட்டு திரும்பினார் .

அவரும் அவ்வப்பொழுது மாமனார் வீட்டுக்கு வந்து அவனைப் பக்கத்து டவுனுக்குச் சினிமாவுக்குக் கூட்டி சென்று ரெண்டு ஷோ பார்த்துவிட்டு , அங்கேயே சொந்தக்காரர் வீட்டுத் திண்ணையில் படுத்துத் தூங்கி விட்டு , அதிகாலை பஸ்ஸைப் பிடித்துத் திரும்புவது வழக்கம். எனவே அவனுக்கு அம்மாவை விட அப்பாவின் மேல் ஒட்டுதலும் பாசமும் ஜாஸ்தி தான் .

அவன் படித்து முடித்து வேலை பார்த்து அப்பா அம்மாவை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு என்று தனியாக ஒரு இடத்தில் வீடு அமைத்துக் கொடுத்து, பிறகு அப்பா இறந்த பின்பு அம்மாவைக் கவனித்து , முதுமையில் வந்த நோய்க்காக ஆஸ்பத்திரியில் சேர்த்து அவரே முடியாது என்று சொன்ன பிறகு, அம்மாவைப் பார்த்துக் கொள்வதற்கு என்று அந்த முதுமைப் பிரச்னைகளைக் கவனித்துக் கொள்ளும் சரியான இடத்தில் தான் சேர்த்துள்ளான் .

அவன் உடன் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னை . அம்மாவைப் பார்த்துக் கொள்ள முடியவில்லை. அந்த அம்மா தான் அந்த மங்கம்மா தான் இப்பொழுது அந்த இல்லத்தில் படுக்கையில் படுத்து இருக்கிறார் .ரெம்ப நேரம் உட்கார முடியாது. அவரது முதுகைத் தாங்கியபடி அவருக்கு ஜூஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார் அந்த விடுதியின் தலைவி சுமதி.

‘ சின்ன புள்ளையிலேயே இருந்து கூடவே இருந்து வளர்க்கல, அதனாலே வீட்ல வச்சு பார்க்க முடியாத அளவுக்கு பாசம் போயிடுச்சா உனக்கு’ என்று போனில் அவனைத் திட்டுகின்ற அம்மாவிடம் என்ன சொல்வது. ‘ ஆமாம் என்று உண்மையைச் சொல்வதா , இந்த வயதில் அவளைப் பார்த்துக்கொள்ள வசதி உள்ள இடத்தில்தானே விட்டிருக்கிறோம். எண்பத்தி ஐந்து வயதுக்கு மேல் ஆகிவிட்டது நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் அவளுக்குக் கூடவே இருந்து பராமரிக்கவும் அவருடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கவும் ஆட்கள் இருக்கக்கூடிய இடம்தானே தேவை இப்போது . சேர்ந்து இருந்து ஏதாவது பிரச்னை வந்து மனஸ்தாபத்தோடு ஒட்டாமல் வீட்டில் இருக்கும் எத்தனை முதியோர்களை அவன் பார்த்திருக்கிறான். அந்தக் கருணை இல்லம்தானே அவளுக்கு பொருத்தமான இடம் .