“மரியாதையான முரண்”/குமரன்

அன்று வங்கியில் கூட்டம் அதிகம். மேலாளர் என்ற முறையில் வாடிக்கையாளர்கள் அவன் கேபினுக்கு வந்து கொண்டே இருந்தனர். மொழி தெரியாத இடம். ஆனாலும் ஓரளவுக்கு இந்தி தெரிந்ததனால் சமாளித்துக் கொண்டிருந்தான். அப்போது கிளை தொழிற்ச்சங்கப் பிரதிநிதி , ஜெய், மிகவும் வேகமாக வந்தார். வந்தவர் இவனிடம், காம்ரேட், இன்று ஆர்ம்ட் கார்டு லீவு, யாரையாவது போடுங்கள், இல்லாவிட்டால் நாங்க கேஷ் கவுண்டர்ல வேலை செய்ய மாட்டோம் என்றார். அவன் வேறு யாரையாவது போடுகிறேன் என்றான். உடனே அவர், இது ஹையர் அலவன்ஸ் வேலை. அதனால அடுத்த சீனியராத்தான் போடனும் என்றார். அவனும் சரி பார்க்கிறேன் என்றான். அவர் போய் விட்ட பிறகு அடுத்த சீனியர் யார் என்று பார்த்ததில் கல்பா மேம்சாப் (இங்கு ஆண்களை “சாப்” என்றும் பெண்களை “மேம்சாப்” என்ற மரியாதையான அடைமொழியுடன் கூப்பிடுவது வழக்கம்) என்ற கடைநிலை ஊழியர் பெயர்தான் இருந்தது.
இந்த ஊரில் ஆர்ம்ட் கார்டு என்பவர் வங்கி வாசலிலே நிற்க வேண்டும். வருபவர்களை கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால் பணப்பட்டுவாடா கவுண்டரில காசாளர்கள் பணி புரிய மாட்டார்கள். எனவே அவன் அடுத்த சீனியர் கல்பா தான் என்று தீர்மானித்து அலுவலகப்பணி புத்தகத்தில் கையெழுத்து வாங்கி அந்தப்பணியை அவரிடம் ஒப்படைக்குமாறு கூறி துணை மேலாளரிடம் சொல்லி விட்டு அவன் வேலையில் மூழ்கினான். சிறிது நேரத்தில் கல்பா அந்த இடத்தில் உட்கார்ந்துக் கொண்டு இருந்ததை பார்த்தான்.சில நொடிகளில், ஜெய், கிளைப்பிரதிநிதி அவனிடத்தில் வந்து, எப்படி துப்பாக்கியே இல்லாமல் எங்க காம்ரேட் இந்தப்பணியை செய்ய முடியும் என்று கேட்டார். அவன் “சரிதான் ஆனா, அவரிடம் லைசென்ஸ் இல்லை மற்றும் என்ன செய்வது, வேற ஆள் இல்லையே” என்றான். “இல்லை, நீங்கள் மண்டல அலுவலகத்திலிருந்து ஒரு ஆர்ம்ட் கார்டை பெற்றிருக்க வேண்டும் என்று வாதிட்டார். அவனும், “சரிதான், கேட்டுட்டேன், ஆனா மண்டல அலுவலகத்திலும் ஆள் இல்லை என்கிறார்களே” என்றான். இன்னொரு தடவை இப்படி நடந்தால் நாங்கள் வேலை செய்ய மாட்டோம் என்று மிரட்டலான குரலில் கூறினார். ஜெய்யை எப்படியோ சமாளித்து வேலையைப் பார்க்குமாறு செய்தான். அப்பாடி என்றிருந்தது அவனுக்கு.

அன்றைய மாலை எல்லாம் முடிந்த பிறகு கிளையின் வாசல் முன் ஒரு தர்ணா போராட்டம். ஏனென்றால் மண்டல அலுவலகத்தில் ஒரு தலைமை அலுவலர் ஒரு கடைநிலை ஊழியரை ஒருமையில் ஒருவரிடம் ஒருமையில் கூப்பிட்டதும் மரியாதைக்குறைவாக நடந்து கொண்டார் என்பதுதான் பிரச்னை. அவரை கண்டித்துதான் போராட்டம். தர்ணாவில் அனைவரும் கூடி கோஷம் எழுப்பினர். ஜெய் சாப் இன்று நடந்த பிரச்னையையும் எல்லோரிடமும் விளக்கி கூறினார். இனிமேல் இது மாதிரியெல்லாம் விட்டு கொடுக்க முடியாது என்று உணர்ச்சியோடு கூறி விட்டு தொழிலாளர்கள் ஒற்றுமை மற்றும் மேனேஜ்மென்ட் தொழிலாளர்க்குரிய மரியாதையை தர வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

எல்லோரும் கிளம்பிய பிறகு, அவனும் கிளை மேலாளரும் தேனீர் அருந்தி விட்டு வரலாம் என்று கிளம்பினார்கள்.

அப்போது மெதுவாக ஜெய் சாப், அவனுடைய அறைக்கு வந்தார். நேராக அவனிடம் ” எப்படி நீங்கள் கல்பாவை எப்போதும் கல்பா மேம்சாப் என்று அழைக்கிறீர்கள், அவள் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவள் அல்லவா” என்றும் “அப்படி என்றால் எங்கள் பெண்களும் அவளும் ஒன்றா” என்று கூறி விட்டு இனிமேல் அப்படியெல்லாம் கூப்பிடக்கூடாது என்று கட்டளையிட்டு சென்றார்.

5 Comments on ““மரியாதையான முரண்”/குமரன்”

  1. தொழிற்சங்கத்தில் யாராவது ஓரிருவர் இப்படி சாதிப்பாகுபாடு பார்ப்பவர்கள் இருக்கலாம். அதுவும்
    குறிப்பாக வடநாடு என்பதால் சாத்தியக்கூறுகள் அதிகம். ஆனால் தொழிற்சங்க களத்தில்தான் சாதி வேற்றுமைகள் மறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். அது குறித்தும் நீங்கள் எழுதியிருப்பீர்கள்.

  2. தொழிற்சங்க உறுப்பினர்கள் மத்தியில் இலைமறைக்காயாக இருக்கிறது. அதையும் புரிய வைக்கிற வேலையையும் செய்து கொண்டிருப்பது கம்யூனிஸ்ட்கள் மட்டுமே!

  3. உண்மை. மறுபக்கம்… ஒடுக்கப்படுவது, கீழ்த்தரமாக நடத்தப்படுவது, மரியாதை இல்லாமல் நடந்து கொள்வது இது ஜாதி, மதம் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. அதிகாரம், ஆளுமை, பணம், உடல் பலம் இதுபோல் பல பலமாய் உள்ளவர்களும் கையாளுவது.நம்மாள ஒருவரை நாலு சாத்து சாத்த முடிந்தால் சாத்துவதே நான் கடந்து வந்த பாதை. நான் பார்த்த வாழ்க்கை. நான் அனுபவித்த வாழ்க்கை.

Comments are closed.