பிசுபிசுப்பின் மணம்/க.சமயவேல்

அவ்வளவு எளிதில்லை
ஒரு பச்சைத் தென்னையோலையை வெட்டுவது
அல்லது விருந்தினருக்காக ஒரு வாழை இலையை அறுப்பது
போலவே மினுங்கிக்கொண்டு வளைந்து வளைந்து போகும்
ஒரு பூரானை அடிப்பது
மிரட்சியுடன் ஒரு மஞ்சள் சாரை நெளுநெளுவென்று ஊர்ந்துசென்று
திடீரென காணாமல் போவதை பார்த்துக்கொண்டு நிற்பது
எல்லாம் அவ்வளவு சுலபமில்லை.
பேரண்ட வெளியில் எங்கோ மிதக்கும் விண்கல்லுக்கு
நானொரு சிற்றெறும்பு.
கருப்பெறும்பு என்றும் கூறலாம்.
பெயருண்டு பதவியுண்டு கட்சியுண்டு மாளிகையுண்டு ஆடிக் காருண்டு
வெள்ளை வேட்டி சட்டை நூறுண்டு
என்பதெல்லாம் ஒரு விஷயமா என்ன
அதிலும் நான் அவன் இவன் உவன் என்பதெல்லாம்
எவ்வளவு பெரிய கேலிக்கூத்து !
இந்த எறும்பு ஏன் ஊர்கிறது என
எந்தக் கட்டை விரலும் உன்னை நசுக்கிவிடலாம்.
உன் நசுங்கிய உடலின், ரத்தத்தின்,
பிசுபிசுப்பின் மணத்தை நீயே வியக்கக்கூடும்.
■ 07072023