இரு கவிதைகள் /ந பானுமதி

கேளாச் செவிகள்

எத்தனை எத்தனை செவிகள் அத்தனையிலும் காற்று
அள்ளிச் சேர்க்கும் என் ஒப்பனை அற்ற வார்த்தைகள்
ஆனால் அதனை கேட்பார் இல்லை கேட்பார் இல்லை
அக்காதுகள் கொண்டுள்ள கதவுகள் மனதினுள் என்று
அறிந்துள்ள எனக்கு அந்த
கதவுகளை தட்ட தெரியவில்லை முட்ட முடியவில்லை
இருந்தும் ஆசைகள் அலைமோதும் வார்த்தைகள்
முகவரியற்று முனைந்து முனைந்து தேடும் தேடும்
தேடிக் கொண்டே இருக்கும்.

தருணம்

தெப்பக்குளத்தில் அழகான ஊர்வலம்
மின்னும் விளக்கொளியில்
அலைகளின் மேல் சதுரங்க நாட்டியம்
நீரில் அசையும் அக்கோலங்கள்
பார்த்த பரவசத்தில்
காணும் உன் பாவங்கள்
மூக்குத்தி மின்னல் தெறிக்க அருகில் நின்றவளிடம்
ஏதோ சொன்னாய் ஏதோ சொன்னாய்
எனக்கும் அவனுக்கும் ஒரே பார்வை என்று
நீ சொல்லி இருக்கலாம்
நானும் நீயும் யாரோ எவரோ அத்தருணத்தின்
அழகு மட்டும் வாழ்நாள் முழுவதும் போதும் எனக்கு
தெப்பக்குளத்தில் ஊருக்கு உற்சவம்
சின்னதொரு தருணத்தில் வாழ்வின் உற்சவம்

One Comment on “இரு கவிதைகள் /ந பானுமதி”

Comments are closed.