பால் செலானின் சாத்தியமற்ற கவிதைகள்/எம்.டி.முத்துக்குமாரசாமி


—-
பால் செலான் ( பிறப்பு 1920, ஏப்ரல் 20) ரோமானியாவிலுள்ள செர்னிவிஸ்டி என்ற ஊரில் பிறந்த ஜெர்மானிய கவி, மற்றும் மொழிபெயர்ப்பாளர். பால் ஆண்ட்செல் என்ற தன் இயற்பெயரை பால் செலான் என்ற புனை பெயருக்கு மாற்றிக்கொண்டார். பால் செலான் பிறந்த ஊர் இப்போது உக்ரெய்ன் தேசத்தில் இருக்கிறது.
பால் செலானின் கவிதைகள் யூத அழித்தொழிப்புக்கு எதிரான கவிதைகளாகக் கருதப்படுகின்றன.

நாஜிக்களின் அரச பயங்கரவாதத்தினால் அறுபது லட்சம் யூதர்கள் திட்டமிடப்பட்டு அழித்தொழிக்கப்பட்டனர். Holocaust என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் யூத அழித்தொழிப்பு நாஜிக்கள் 1933 இல் ஜெர்மனியில் ஆட்சிக்கு வந்தபோது தொடங்கியது. நாஜிக்கள் யூதர்களுக்கு எதிரான சட்டங்கள் இயற்றினர், யூதர்களை சிறைப்பிடித்து வதை முகாம்களில் அடைத்து வைத்தனர். வதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்ட யூதர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்; அவர்களின் மேல் பல மருத்துவ பரிசோதனைகள் நிகழ்த்தப்பட்டன. அவர்கள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டனர். இப்போது போலந்து நாட்டில் இருக்கும் ஆஸ்ட்விட்ஸ் எனும் நகரில் வெகுமக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டபோது ஜெர்மானிய தத்துவ அறிஞராகிய தியோடர் அடோர்னோ ஆஸ்ட்விட்சுக்கு அப்புறம் கவிதை எப்படி சாத்தியம் என்று கேள்வி எழுப்பினார்.
பால் செலானின் கவிதைகள் யூத இன அழித்தொழிப்புக்குப் பின்னாலான சாத்தியமற்ற கவிதைகளாக இருக்கின்றன. அவை சாத்தியமற்ற கவிதைகள் என்பதினால் அவை மனித மனதின் இருண்ட பகுதிகளை தயவுதாட்சண்யமின்றி சொல்கின்றன. பால் செலானின் படிமக்கோவைகள் முற்றிலும் புதிய மொழிச் சேர்க்கையினால் உருவாகின்றன. பால் செலானின் கவிதைகள் மொழியின் அதிகாரத்தையும் நுட்பமாக ஆராய்கின்றன. பல இலக்கிய விமர்சகர்கள் பால் செலானின் கவிதைகளை சர்ரியலிச கவிதைகள் என வகைப்படுத்துகிறார்கள். பல முக்கியமான இலக்கிய விமர்சகர்கள் பால் செலானை மானுட குல பிரக்க்ஞையின் அற விழிப்பில் தோன்றிய தன்னிகரற்ற கவி என அடையாளப்படுத்துகிறார்கள். பால் செலானின் கவிதைகளில் ஜெர்மானிய ரொமாண்டிசிசமும் யூத மெய்யியலும் கலந்திருப்பதாகவும் பலரும் வாசித்துச் சொல்கின்றனர்.

நான் மிகவும் வியந்து பார்க்கும் ஜெர்மானிய ஓவியரும் சிற்பியுமான் அன்ஸ்லெம் கீஃபர் (Anslem Keifer) பால் செலானின் கவிதைகளுக்கு என பல ஓவியங்களையும் சிற்பங்களையும் சமர்ப்பித்திருக்கிறார்.

பால் செலானின் மலைப்பிரதேச உரையாடல்கள் என்ற கவிதை என்னை மிகவும் பாதித்த கவிதைகளில் ஒன்று. ஜெர்மானிய கவிகள் ரில்கே, ஹோல்டர்லின், செலான் என என் மனதினடியில் ஒரு நீரோட்டம் ஓடுகிறது. அதில் என் கைகளும் கால்களும் நனைந்திருப்பதை எழுதவேண்டுமென எப்போதுமே எண்ணி வந்திருக்கிறேன். அதை செயல்படுத்தும் விதமாய் இன்றிலிருந்து பால் செலானின் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்குகிறேன்.