மூன்று கவிதைகள்/நாகேந்தர பாரதி

கவிதை வாசிக்கலாம் வாங்க (8வது கூட்டம் ) ஜூம் நிகழ்வில் வாசித்த கவிதைகள்
——-
புத்தகப் புழுக்கள்

——————————————–—

வண்ணத்துப் பூச்சிகளாய் மாறும்
வகை தெரிந்த புழுக்கள்

அடைந்து கிடைக்கும் நேரம் – இவை
அடை காக்கும் நேரம்

படித்து முடித்தவை எல்லாம்
பதியம் போட்டவை

கிளர்ந்து எழும்போது – இவை
பறந்து விரியும் போது

படித்த பொருளை எல்லாம் – இவை
பகிர்ந்து மகிழும் போது

வீட்டுக்கும் நாட்டுக்கும்
வெளிச்சம் காட்டுபவை

————

நரையும் திரையும்
————————————–
————

ஓடும் காலத்தோடு
சேர்ந்து ஓடி

திரும்பிப் பார்த்தால்
எங்கும் இருட்டு

வந்த பாதையின்
வெளிச்சம் எங்கே

பசுமை எங்கே
பனித்துளி எங்கே

தென்றல் எங்கே
தேனமு தெங்கே

நரையும் திரையும்
கூடிய உடலில்

நினைத்துப் பார்க்க
நெஞ்சம் மட்டும்
—————-

புனை உலகம்
———————————-
–—

பூண்ட வாசனை போனால்
புழுவின் வாசம் வரும்

பூச்சுக் கலைந்து போனால்
பூச்சி நெளியும் முகம்

உடலில் மட்டும் அல்ல
உள்ளம் கூடப் புனைவே

சிரிப்புப் பேச்சின் உள்ளே
சினத்தின் சாயல் ஒளியும்

செய்யும் செயலின் உள்ளே
சேர்ந்த வஞ்சம் வழியும்

ஆறாம் அறிவு உதவ
அவரை உணர்ந்து நடப்போம்

2 Comments on “மூன்று கவிதைகள்/நாகேந்தர பாரதி”

  1. நினைத்துப் பார்க்க நெஞ்சம் மட்டுமே!
    அருமை சார்!

    அடைந்து கிடக்கும் அடைகாக்கும் காலம்! அருமை!
    👏👏👌

Comments are closed.