அங்கிங்கெனாதபடி/ஆர் வத்ஸலா

எதை வேண்டுமானாலும்
எங்கு வேண்டுமானாலும்
வைக்கலாமென்று
என் மூளை முடிவெடுத்து விட்டிருக்கிறது
எனக்கே தெரியாமல்

ஒரு நாள் முழுவதும்
தேடிய
வீட்டு பத்திரம்
பத்திரமாய் இருந்தது
குளிர் சாதன பெட்டியில்

வேறொரு நாள்
காலையில் தோசைக்கரைத்த சட்னி
காணாமல் போய்
மிளகாய் பொடியால் ஒப்பேற்றிய பின்
மாலை திருமண வரவேற்புக்கு கிளம்புகையில்
இரும்பு அலமாரி லாக்கரிலிருந்து

கல் வளையலை எடுக்கையில்
அதனுருகில் வெள்ளந்தியாக
அமர்ந்திருந்தது
கிண்ணத்துடன் சட்னி
பாதி பிராணனுடன்

பின்னொரு நாள்
வெளியே போகு முன்
கதவை பூட்ட
வீட்டு சாவி கொத்தை
வீடு முழுக்க தேடிய பின்
கண்டு பிடித்தோம்
அது சாவி கொத்து மாட்டும் கொக்கியில்தான்
தொங்கிக் கொண்டிருந்தது
அத்தனை நேரமும்
வழக்கத்திற்கு மாறாக
என்று

One Comment on “அங்கிங்கெனாதபடி/ஆர் வத்ஸலா”

Comments are closed.