
என் பெற்றோர்
பொதுவுடைமை வாதிகளோ
கடவுள் மறுப்பாளர்களோ
அல்ல
என்றாலும் என் முதல் முடியிறக்கம்
மும்பை மாதுங்காவில்
அப்பாவின் வாடிக்கை
சலூனில் தான்
சிக்கனத்தை உத்தேசித்து
நான்கு வயதிலிருந்து
குட்டியூண்டு
இரட்டை பின்னல்
சலூன் செலவை விட
சிக்கனமாக
எண்ணை கரை தெரியாத கருப்பு ரிப்பனுடன்
எட்டு வயதிலிருந்து
பெரிய பெண்
என்பதை வலியுறுத்தும் ஒற்றை பின்னல்
ரிப்பன் செலவை
பாதியாக்கி
திருமணமான பின்
கவலையில் முடி கொட்ட
டவுனில்
தேவராஜ முதலி தெரு சவுரி சரணம்
கவலைகள் கூட
முடி நரைக்க
மறுபடியும்
அளித்தது தஞ்சம்
அதே தெரு
நரைத்த சவுரி
கல்லூரியின் புது முதல்வரின்
நிர்பந்தத்தில்
உருவாகியது
எலுமிச்சை அளவு
கொண்டை
சென்னையின்
ஈர பதம் கலந்த வெக்கைக்கேற்ப
சுகமாக
ஐம்பது வயதில்
நீச்சல் கற்கையில்
நேர நெருக்கடி காரணமாக
புரட்சிகரமாக
“பாய் கட்” செய்து கொண்டு வந்த என்னை
முதலில் பார்த்த
வயதான உறவினர்கள்
டைபாய்டு வந்ததென
எண்ணினாலும்
ஒரு சில சக ஊழியர்கள்
நமுட்டு சிரிப்பு
சிரித்தாலும்
முடி சுதந்திரம்
இனிக்கிறது
இன்றும்
