
கவி பால் செலான் ஏப்ரல் 19, 1970 அன்று பாரிஸ் நகரில் ஓடும் சீன் நதியில் மூழ்கித் தற்கொலை செய்துகொண்டார். பால் செலானின் வீட்டில் பிறகு அவர் தத்துவ அறிஞர் ஹைடெக்கருக்கு எழுதிய முடிக்கப்படாத கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பால் செலான் பொறுப்புணர்வுக்கான மனோ உறுதியின் (will to responsibility) முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசியிருந்தார். ஆரம்பகால நாஜி ஆதரவாளரான ஹைடெக்கருக்கும் நாஜிக்களால் சொல்லொணா துயரங்களுக்கு, யூத அழித்தொழிப்புக்கும் ஆளான ஜெர்மானிய பால் செலானுக்கும் இடையிலான ‘உரையாடல்கள்’ தத்துவத்திலும் கவிதையிலும் இன்றளவும் விவாதிக்கப்படுபவை.
பால் செலானின் தந்தை நாஜிக்களின் வதை முகாமில் உயிரிழந்தார்; தாய் நாஜிக்களின் வதைமுகாம் ஒன்றில் நாஜி அதிகாரி ஒருவரால் கழுத்தில் சுடப்பட்டு கொல்லப்பட்டார். பால் செலானே தன் இளமையில் பல வருடங்களை நாஜி வதை உழைப்பு முகாமில் கழித்தவர்தான். அதிலிருந்து தப்பி நாடற்றவராக வியன்னா, புகாரெஸ்ட் ஆகிய நகரங்களில் வாழ்ந்து தன் வாழ்நாளின் பிற்பகுதியை பாரீஸ் நகரில் கழித்தார்.
பால் செலானின் தந்தை ஹீப்ரூ மொழிக் கல்வியை அவருக்கு வழங்கினார் எனினும் அவருடைய தாய் ஜெர்மானிய இலக்கியத்தின் மேலும் பல் வேறு உலக இலக்கியங்களின் மேல் கொண்டிருந்த பற்றும் வாசிப்புமே செலானை பாதித்து அவரை மொழிபெயர்ப்பாளராகவும் கவிஞராகவும் உருவாக்கியது. முக்கியமான கவிஞர்கள் 43 பேரின் கவிதைகளை மொழிபெயர்த்த செலான் அதற்கான உந்துதலாகத் தன் தாயையே குறிப்பிட்டார். பால் செலானின் கவிதைகளிலும் அவருடைய தாயார் பல்வேறு நிறங்களாக, இயற்கையின் பகுதியாக, அழியாப்படிமங்களாகத் தொடர்ந்து இடம் பெறுகிறார். வியன்னாவிலும், புகாரெஸ்டிலும் வாழும்போது தன்னுடைய முதல் கவிதைத் தொகுதிகளை வெளியிட்ட பால் செலானுக்கு அப்போதைய மேற்கு ஜெர்மனியின் எழுத்தாளர்களோடு தொடர்பு ஏற்பட்டபோது அவரிடம் தொடர்ந்து பலரும் பாதிக்கப்பட்ட யூதராகிய நீங்கள் ஏன் ஜெர்மானிய மொழியில் எழுதுகிறீர்கள் என்று கேட்டார்கள். தன் தாயிடமிருந்து உயர் ஜெர்மானிய இலக்கிய மொழியைக் கற்றுக்கொண்டதாகப் பதில் சொன்ன பால் செலான் ஒருவன் தன் தாய்மொழியில்தான் உண்மையை எழுதமுடியும் என்றும் பதிலளித்தார்.
ஆனாலும் பால் செலான் தனக்கான ஜெர்மானிய மொழியைக் கண்டுபிடிக்க வேண்டியதாக இருந்தது. ரஷ்யன், ரோமானியன், கிரேக்கம், ஹீப்ரு, யிட்டிஷ், ஃப்ரெஞ்ச் என பல மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்த செலான் தொடர்ந்து ஜெர்மானிய் மொழியில் எழுதியது அவர் அவருடைய கவித்துவ உணர்வுகளுக்கு நேர்மையாக இருந்ததாகக் கருதப்படுகிறது. அவர் ஃப்ரெஞ்ச் மொழியில் கவிதைகள் எழுதியபோதும் ஃப்ரெஞ்சில் அவ்வபோது எழுதும் ஜெர்மானிய கவி என்றே அறியப்பட்டார். நாஜிக்களால் உருவாக்கப்பட்ட ஜெர்மானிய மொழிக்கொள்கை என்பது ஜெர்மானிய மொழியை செம்மொழி எனவும் அதி தூய்மையானது எனவும் நிலைநிறுத்தத் தலைப்பட்டது. ‘ஜெர்மானிய உணர்வு’ என்பதே கவிதைகளில் தலையாயது என்று பேசிக்கொண்டிருந்த கொலைகாரர்களிடமிருந்து ஜெர்மானிய மொழியை காப்பாற்றிக் கடைத்தேற்றுவதும் அதே சமயம் தனக்கான தனித்துவமான கவித்துவ மொழியைக் கண்டுபிடிப்பதும் பால் செலானின் சவால்களாக இருந்தன. பால் செலானின் கவிதைகளின் மொழியைப் பற்றி எழுதிய விமர்சகர் பாம்பாஷ்” செலானின் கவிதைகள் மொழியை அதன் எல்லைக்குத் தள்ளிச் சொல்ல முடியாததைச் சொல்ல முயற்சிக்கின்றன; அவை ‘சாத்தியமற்றதற்கான நீதி’ என்று தெரிதா அழைப்பதை நிலை நிறுத்த முயற்சிக்கின்றன.”
1958 இல் ப்ரெமென் பரிசுக்கான ஏற்புரையில் பால் செலான் யூத அழித்தொழிப்புக்கு பின்னாலான தனக்கும் ஜெர்மானிய மொழிக்குமான உறவைப் பற்றி குறிப்பிடுகையில், “ ஆமாம், மொழி தொடர்ந்து இருந்தது, தொலைந்து போய்விடவில்லை, எல்லாவற்றிற்கும் அப்பாலும், எல்லாவற்றையும் மீறி. ஆனால் இந்த மொழியானது அதன் பதிலளிக்கா தன்மையினை கடந்து செல்ல வேண்டும்.”
உலகில் வெகு குறைவான கவிஞர்களும் தத்துவவாதிகளுமே மொழியில் பால் செலான் அளவுக்கு துல்லியமாக வேலைசெய்தார்கள் என்று சொல்லமுடியும். உண்மையை வெளிச்சொல்வதற்கான மொழியின் ஆற்றலை பால் செலான் உறுதியாக நம்பியது மட்டுமேதான் அவருக்கும் ஹைடெக்கருக்கருக்குமான ‘உரையாடலை’ சாத்தியப்படுத்தியிருக்கமுடியும். ஏனெனில் ஹைடெக்கரும் உண்மையை வெளிப்படுத்தும் தன்மையை கவிதைமொழியின் பண்பாக அடையாளம் காட்டினார்.
பால் செலானுக்கும் மார்டின் ஹைடெக்கருக்குமான ‘உரையாடல்’ என்னவாக இருந்தது?
—- தொடரும்
