பொருநை_ஆற்றூர் #1/முத்துக்குமார் சங்கரன்

காலையில் எழுந்ததும் இரண்டு வெற்றிலையில் நான்கைந்து மிளகும் உலர் திராட்சையும் வைத்து மெல்லும் பழக்கம் எனக்கு இருப்பதால் எந்த ஊர் சென்றாலும் வெற்றிலையைத் தேடி அலைவேன். வெற்றிலை பாக்குக் கடைகள் என்று சொல்லப்படும் சிறு கடைகளே இப்போது அரிதாகி விட்டன. .

“ஒன்னும் இல்லன்னாலும் வெத்தலை பாக்கு கடை வச்சு பிழைத்துக் கொள்வேன்” என்று அந்தக் காலத்தில் சொல்வார்கள். தெருவுக்கு நான்கு வெற்றிலை பாக்கு கடைகள் இருக்கும்.

யாராவது விருந்தினர் வந்தாலோ, ஏதேனும் கை மருந்துக்குத் தேவைப்பட்டாலோ, அம்மா வெற்றிலை வாங்கி வரச் சொல்லி விரட்டி விடுவார். கடையில் போய்க் கேட்டதும் கடைக்காரர் திருப்பிக் கேட்பார்

“ஆத்தூர் வெத்திலையா, உடன்குடி வெத்திலையா, வெள்ளை வெத்திலையா”

ஆத்தூர் வெற்றிலையும் உடன்குடி வெற்றிலையும் வகைக்கொரு தாம்பாளத்தில் ஈரத் துணி மூடி அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். வெள்ளை வெத்திலை ஒரு கண்ணாடிப் பெட்டியில் ஒய்யாரமாக இருக்கும்.

எந்த வெற்றிலை என்று அம்மாவிடம் கேட்டு வர வேண்டிய அவசியமே இல்லை. ஆத்தூர் வெற்றிலை மட்டும் தான் வாங்க வேண்டும். காரணம் ஆத்தூர் என் அம்மாவின் சொந்த ஊர். அதே காரணத்தால் என் மனைவி அனுவுக்கும் சொந்த ஊர். ஆத்தூர் சூர்யநாராயணன் ஏகாம்பரம் என்பது என் தாத்தாவின் பெயர். அந்தக் காலத்தில் ஆத்தூரில் சொந்த வீடும் ஏதோ கொஞ்சம் வயலும் இருந்திருக்கின்றன. எனக்கு விவரம் தெரிந்து குத்தகைக்காரரிடம் இருந்து பாட்டம் வந்து கொண்டு தான் இருந்தது. ஆனால் இப்போது ஆத்தூரோடு உள்ள தொடர்பாக சோமசுந்தரேஷ்வரர் கோவில் திருவிழாவில் எட்டாம் திருநாள் பரிவேட்டை மண்டகப்படி கட்டளை மட்டும் இருக்கிறது. எனது தாய் மாமா A.E.அருணாசலம் அவர்கள் அதை நிறைவேற்றி வருகிறார்.

தாத்தாவுக்குத் தூத்துக்குடியில் வியாபாரம் என்பதால் ஆச்சி தான் தூத்துக்குடியில் இருந்து ஆத்தூருக்குச் சென்று விவசாயப் பணிகளைக் கவனித்துக் கொள்வாராம். எங்க ஆச்சி ரொம்ப சிக்கனம். சில தடவை வெள்ளென எழுந்து நடந்தே கூட ஆத்தூருக்குப் போய் இருக்கிறாராம். ஆச்சி தாத்தாவுக்கு வயதான பிறகு குத்தகைக்கு விட்டு விட்டு ஒதுங்கி விட்டார்கள்.

என் மாமா இறந்தபோது அவர் சாம்பலைக் கரைப்பதற்காக முக்காணி ஆற்றில் போய் இறங்கிக் கரைத்து வந்தேன். அதன் பிறகு வங்கிப் பணிக்காகவோ தொழிற்சங்கப் பணிக்காகவோ புன்னைக்காயல், ஆத்தூர், ஆறுமுகநேரி, ஏரல் என்று சுற்றிச் சுற்றி வந்த போது பாலத்தைக் கடக்கும் போது ஏக்கத்தோடு எட்டிப் பார்த்ததோடு சரி. ஆனால் வெற்றிலையைப் பார்க்கும் போதெல்லாம் ஆத்தூர் ஞாபகம் வந்துவிடுவதைத் தடுக்க முடியவில்லை.

ஆத்தூர் நெல் வயல்கள், வெற்றிலைக் கொடிக்கால்கள் மற்றும் வாழைத் தோட்டங்கள் நிறைந்திருக்கும் பசுமையான சிறு நகரம். இங்கு தாமிரபரணி நதி பாய்ந்து இப்பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாசனத்திற்குப் பயன்படுத்தப்படும் நீரின் பெரும் பகுதியை வழங்கி வளமாக்குகிறது.

கங்கை நதிப்புரத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம் என்று பாரதியார் காவேரி வெற்றிலையைப் பற்றிப் பாடி விட்டார்.

பொருநை வெற்றிலையும் தனி ருசி தான். தாமிரபரணி பாசனத்தில் ஆத்தூர் பகுதியில் விளையும் வெற்றிலை அதிக காரத்தன்மை மற்றும் செரிமான சக்தியை ஊக்குவிக்கும் தன்மை கொண்டது. பொதுவாகவே வெற்றிலைகளில் புரதம், கொழுப்பு நார்ச்சத்து, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற சத்துக்களும் ஏராளமாக உள்ளன. ஆனால் சின்னப் பிள்ளைகளைச் சாப்பிட விட மாட்டார்கள். பெரிசுகள் எல்லாம் வெற்றிலை போட்டு நாக்கு நீட்டி “நன்றாக சிவந்து இருக்கிறதா என்று பார்த்துச் சொல்லு’ என்று பிள்ளைகளிடம் கேட்கும் போது பிள்ளைகளுக்கும் கொஞ்சம் ஆசை வரத்தான் செய்யும் ஆனால் “சின்னப் பிள்ளைங்க வெத்தலை போட்டா மாடு முட்டும்” என்று சொல்லிப் பயமுறுத்தி விடுவார்கள்.

சிறுவர்கள் ‘கண்ணைப்பொத்தி’ விளையாடும் போது பாடும் பாடல்களில் மட்டும் தான் வெற்றிலைக்கு இடமம் உண்டு.

“மாது மாது மன்னவன் தம்பி

கோது கோது கொழுந்து வெற்றிலை வெள்ளைக்காரன் சொல்லிக் கொடுத்தான் சொல்லாதே சொல்லாதே

தட்டிக்கோ தாச்சிக்கோ

தட்டி வெத்தில போட்டுக்கோ

போட்ட எடத்தில துப்பிக்கோ”

“ஐயாத்துரைக்கு கல்யாணம்

அவரவர் வீட்டில் சாப்பாடு

கொட்டுமேளம் கோயிலிலே

வெத்தலை பாக்கு கடையிலே சுண்ணாம்பு சூளையிலே” என்று பாடி விளையாடுவார்கள்.