பொருநை_ஆற்றூர் – 3/முத்துக்குமார் சங்கரன்

ஆத்தூர் என்கிற பெயரிலேயே வேறு சில ஊர்களும் உண்டு என்பது தெரியும் எங்கள் ஆத்தூருக்கே எத்தனை பெயர்கள் உண்டு தெரியுமா? ஆத்தூர் சோமசுந்தரர் திருக்கோவில் சுமார் ஆயிரத்தி ஐநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்த ஊரின் பழைய பெயர் ஆரை என்பதாகும்.

. இங்கு ஆலமரம் ஒன்றின் கீழ் பசு தானே பால் சொரிய அந்தப் பால் சுயம்பு லிங்கமாக உருவெடுத்ததாக நம்பப்படுகிறது அதனால் இங்கே ஆலமரம் தல விருட்சமாக வணங்கப்படுகிறது. ஆற்றின் கரையில் இருப்பதால் ஆற்றூர் என்றிருந்து பின்னர் ஆத்தூர் என மாறியதாகவும் ஆலமரம் சார்ந்து உருவானதால் ஆலத்தூர் என்றிருந்ததே ஆத்தூர் என்று மாறியதாகவும் சொல்லப்படுவதுண்டு.

தேவர்களின் குருவான பிரகஸ்பதியால் சபிக்கப் பெற்ற சோமன் என்கிற சந்திர தேவர் பூவுலகிற்கு வந்து தாமிரபரணி நதி தீரத்தில் அமைந்துள்ள ஒரு சோலையில் தீர்த்தம் ஒன்றை உருவாக்கி அதில் நீராடி அங்கே சிவபெருமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும் அதனால் அந்த இடத்திற்கு “சோமேஸ்வரம்” என்றும்
சந்திரன் உருவாக்கிய தீர்த்தம் “சந்திரபுஷ்கரணி” எனவும் அழைக்கப்பட்டதாகவும் இந்தக் கோயிலின் தலபுராணம் கூறுகிறது‌

ஆத்தூர் “குடநாடு” எனும் பிரிவிற்குள் அடங்கியிருந்தது. சீமாறன் சீவல்லபன் காலத்திலிருந்து (கி.பி 835) இப்பிரிவிலேயே அடங்கியிருந்தது என்று அறிகிறோம். குடநாட்டு பிரமதேயம் ஆற்றூர் என்று கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

சோழர்கள் ஆட்சிக்காலத்தில் ஆத்தூருக்கு சேந்தமங்கலம் என்ற பெயரும் இருந்தது. ஆத்தூர் சேந்தமங்கலத்து ஶ்ரீ சோமநாதர் என்று இவ்வூர் இறைவன் சுந்தர சோழ பாண்டியனின் கல்வெட்டில் குறிக்கப்படுகிறார். தென்திருப்பூவணம் உடையார் என்றும் சோமநாதர் அழைக்கப்பட்டார் என்று சோழ அரசப்பிரதிநிதிகள் கல்வெட்டால் தெரிய வருகிறது.

“அவனிபசேகரமங்கலம்” என்ற பழம்பெயரும் ஆத்தூருக்கு உண்டு.
பாண்டியன் சீமாறன் சீவல்லபன் அவனிபசேகரன் என்ற பட்டப்பெயரால் அழைக்கப்பட்டான். அவன் பெயராலேயே ஆத்தூர் கி.பி.9ஆம் நூற்றாண்டில் அவனிபசேகரமங்கலம் என்று அழைக்கப்பட்டதாக கல்வெட்டால் அறிகிறோம். திருச்செந்தூர் கல்வெட்டிலும் ஆத்தூரை அவனிபசேகரமங்கலம் என்ற பெயர் கொண்டே குறிப்பிட்டுள்ளது.

ஆத்தூர். கல்வெட்டுகளில் இறைவன் ‘ சோமதேவரான தென்திரிபுவனம் உடையார். என்றும் இறைவி‘ சோமசுந்தரி அம்மன் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

முதலாவது ராஜ ராஜன் காலத்தில் கோவிலின் மூலவர் கருவறை கற்றளியாக அமைக்கப்பட்டது பிற்காலப் பாண்டியர் காலத்தில் சோமசுந்தரி அம்பாள் கருவறை கற்றளியாக அமைக்கப் பட்டது. கற்றளி என்பது கற்களால் கட்டப்பெற்ற கோயில்களைக் குறிப்பதாகும். இவை கற்கோயில்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இம்முறையில் கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிக் கட்டப்பெற்றன. இம்முறையில் சுண்ணக் கலவை கூட பயன்படுத்தப் படவில்லை. இவ்வாறு கற்றளிகள் அமைப்பது கி.பி ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து தொடங்கப் பெற்றது. செங்கற்கள் கொண்டு அமைக்கப் பெற்ற கோயில்களும், மரக் கோயில்களும் கி.பி.ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து அரசர்களால் கற்றளிகளாக மாற்றப்பட்டன.

திருச்செந்தூர் முருகன் கோவிலிலும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலிலும் உள்ளதைப் போன்றே இங்கும் சோமநாத சுவாமி சன்னதியின் வடக்கு சுற்றில் பள்ளி கொண்ட பெருமாளுக்கு தனி சன்னதி இருக்கிறது. இவர் விண்ணகர் பள்ளி கொண்டருளிய தேவர் என்றும் திருநாராயணவிண்ணகர் என்றும் அழைக்கப்படுபவர். .. ராஜராஜன் காலத்திலிருந்து இந்த சன்னதி இருப்பதாக கோயிலின் நுழை வாயிலில் உள்ள கல்வெட்டு ஒன்றை சான்றாக்கிச் சொல்கிறார்கள்
விஜயநகர ஆட்சி, நாயக்கர் ஆட்சி காலத்தில் மண்டபங்கள் பிரகாரங்கள் அமைக்கப்பட்டன. சோமசுந்தரர் ஆலயத்தில் நாயக்க மன்னர்கள் காலத்திலேயே இங்கு பெருமாள் சன்னிதி அமையப் பெற்றதாகச் சொல்வாருமுண்டு..

மிகப் பழைமையான சிவாலயங்களில் மட்டுமே இருக்கக் கூடிய சப்த மாதாக்கள் சன்னிதி இவ்லாலயத்தில் இருக்கிறது. குழந்தைப் பேறு இல்லாதவர்கள் சப்த மாதாக்களுக்கும் வெற்றிலை, இளநீர், பழம் வைத்து வழிபடும் வழக்கம் இருந்திருக்கிறது. கர்ப்பிணிப் பெண் நின்ற நிலையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் சிற்பம் ஒன்று தாராச்சுரத்தில் உள்ளதைப் போல் இந்தக் கோவிலிலும் இருக்கிறது.

இந்தக் கோயிலில், சித்திர புத்திரர் சிலை அமைந்துள்ளது. உள்ளது. நயினார் நோன்பு ஆற்றுப்பாசனம் உள்ள இடங்கள் எல்லாவற்றிலும் தவறாமல் கடைபிடிக்கப்படுகிறது. அந்தக் காலத்தில் சித்திரை முழு நிலவு நாளில் இரவு முழுக்க சித்திர புத்திர நாயனார் கதையைப் படித்துவிட்டு, மறுநாள் காலை உணவில் அவல், அகத்திக்கீரை, எள் போன்றவை உணவில் சேர்த்துக்கொண்டு விரதம் முடிப்பார்கள்.

பத்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இக்கோயிலில் காணப்படுகின்றன.
(தொடரும்) –