
சமீபத்தில் இறந்த, இந்த செக்கோஸ்லாவாக்கிய எழுத்தாளர் பற்றி தமிழில் தொன்னூறுகளில், பலர் பேசினார்கள்.
காரணம் அவர்கள் நாட்டின் மீது சோவியத் படையெடுப்பு. அப்போது சோவியத் ஆதர்வாளர்கள் தமிழகத்தில் பலர் இருந்தனர். சோவியத் அதிகாரபூர்வ இலக்கியவாதிகள் காஃப்காவை (Kafka) ஏற்கவில்லை. ஆனால் குந்தெரா பெரிய எழுதாளராய் காஃப்காவை எற்றார். கடைசியாகத் தன் நாட்டைவிட்டு அவர் வேளியேறி பாரிஸில் வாழ்ந்தார். அவர் ஏன் காஃப்காவை ஏற்கிறார் என்று எழுதிய கட்டுரையின் சுருக்கம் தமிழில் படிகள் என்ற இதழில் வெளிவந்தது. அதனை வெளியிட அதிகம் தைரியம் வேண்டும். தமிழக சோவியத் ரசிகர்கள் கோபப்பட்டனர். அப்போது சிறு இதழ்கள் பல வந்துகொண்டிருந்தன. வாதவிவாதங்கள் நடந்தன. இப்போது தமிழில் புதிதாய் எழுதவந்திருக்கும் பலருக்கு மிலான் குந்தெராவைத் தெரியாது. அவர் எழுதும் நாவல்கள் பற்றி அறிமுகமில்லை. அம்மாமி தொடர்போல கோமாளித்தனமாக அவர் எழுதமாட்டார். பெரிய உலக இலக்கிய விவாதத்தின் தொடர்ச்சியாக தமிழில் அன்று எழுதினார்கள். அப்படிப்பட்ட இலக்கிய வாதங்கள் இன்று பெரும்பாலும் இல்லை. மொழிபெயர்ப்புகள் வெறுமனே தமிழ்பிரசுர முதலாளிகளை நம்பி வந்துகொண்டிருக்கின்றன. அவ்வளவுதான். எதற்கு மொழிபெயர்க்கிறார்கள் என்று தெரியாது. நாவல் எழுத்து கூட சாதாரணமாகி விட்டது. இலக்கிய விவாதமற்ற சூழலில் நல்ல உலகத்தரமான நாவல் வராது.
அன்று அனைத்துலக தரத்தை நோக்கி இலக்கியம் முகம்காட்டி மேலே ஏறியது. . குந்தெராவின் The Unbearble Lightness of Being என்ற நாவல் நான்கைந்து வர்த்தைகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. வர்த்தைகளைவைத்து நாவலா ? அவருடைய “நாவல் கலை” என்ற கட்டுரைத்தொகுப்பு அப்போது நாகர்ஜுனன் போன்றோர் கையில் எப்போதும் இருக்கும். மொத்தத்தில் தமிழில் இலக்கியம் இன்று இறங்குமுகமாக உள்ளது. சூழல் சரியில்லை. தேசிய அளவிலான இலக்கிய நிறுவனங்களும் சரியில்லை. மீண்டும் காத்திரமான சிறுபத்திரிகைகள் தோன்றுவதை எதிர்பார்ப்போம்.
