ம்ருதாமத்/S.L. நாணு

ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்தது அந்த வீடு. சுற்றி செடி கொடிகள் கத்தி பார்க்காமல் தாராளமாகவே எழும்பியிருந்தன. வளைந்திருந்த முள் வேலியில் தர்மத்துக்கு ஒட்டிக் கொண்டிருந்த மரக் கதவை ஜாக்ருதையாக ஒதுக்கி விட்டு ஜோசப் உள்ளே நடந்தான்..
ஐம்பதடியில் அந்த வீடு தென்பட்டது. நூறு நூற்றியிருபது வருடங்களைக் கடந்திருக்க வேண்டும் என்று அவனுக்குப் பட்டது.. தொட்டால் உதிர்ந்து விடுமோ என்ற பயமும் முளைத்தது.
அருகே சென்ற போது கதவு திறந்திருப்பதை கவனித்தான்.
லேசாக எட்டிப் பார்த்து..
“சார்”
குரல் கொடுத்தும் பதிலில்லை.
மறுபடியும் கொஞ்சம் குரல் உசத்தி முயற்சித்தான்.
சில விநாடிகள் மௌனம்.
பிறகு தள்ளாடியபடி ஒரு உருவம் தென்பட்டது..
சுமார் எண்பத்தைந்து தொண்ணூறு வயதிருக்கலாம்.. கொஞ்சம் அளவுக்கதிகமான அசௌகர்ய உயரம்.. ஒடிசல் தேகம்.. சற்றே கூன் தெரிந்தது.. எண்ணை பார்க்காத நீண்ட வெள்ளை முடி கட்டுப்பாடில்லாமல் ஊசலாடியது. முகத்தில் வயோதிகத்தின் சுருக்கக் கோடுகள்.. பிரேமின் கரம் உடைந்து நாடாவின் உபயத்தில் காதில் மாட்டப்பட்டிருக்கும் மூக்குக்கண்ணாடி.. அந்தக் கண்ணாடியைப் பார்த்தாலே பார்ப்பவர்களின் பார்வை மங்கும்.. காரணம் கஞ்சத்தனம் இல்லாமல் ஏகத்துக்கும் பவர்.. எப்போதோ வெள்ளையாக இருந்திருக்க வேண்டிய முழுக்கைச் சட்டை.. இப்போது அழுக்கு பழுப்பு நிறத்தில் பேண்டுக்குள் நேர்த்தியில்லாமல் திணிக்கப்படிருக்க.. எப்போது வேண்டுமானாலும் நழுவலாம் என்று பயமுறுத்திக் கொண்டிருந்த பேண்டை இடுப்பைச் சுற்றி கட்டப்பட்டிருந்த கயிறு பத்திரப் படுத்த..
மெதுவாக அவனைப் பார்த்தார்..
“யாரு?”
ஜோசப் கொஞ்சம் அருகில் வந்து..
“சாரங்கன்…”
“ம்.. நீங்க?”
“கேப்ரியல் அனுப்பிச்சார்”
கேப்ரியலின் பெயரைக் கேட்டதும் கிழவரின் கண்களில் ஒரு சொடுக்கு மின்னல் தெரிந்தது..
“வாங்க”
வீட்டுக்குள் நுழைந்ததும் ஏதோ ஒரு ரசாயன கலவையின் வாசம் ஜோசபின் நாசியைத் தாக்கியது. கைகுட்டையால் மூடிக்கொண்டு சுற்று முற்றும் பார்த்தான்.
பத்துக்கு எட்டு அறை. பூர்வீகம் இழந்திருந்த இளநீல சுவர். இடது பக்க ஓரத்தில் ஒரு மர நாற்காலி.. ரொம்பவே சேதப்பட்ட நிலையில்.. பக்கதில் ஒரு கதவு.. சமையலறைக்கோ குளியலறைக்கோ போகும் வழியாக இருக்கலாம். அதைத் தொட்டுத் தொங்கும் அழுக்குத் துணி.. சிவப்புக் கரை அப்பிக் கொண்டு.. எதிர்பக்கம் சிறு மேஜை.. அதில் கண்ணாடிக் குப்பிகள்.. நிறமற்ற திரவங்களை உள்வாங்கிக் கொண்டு.. மேஜைக்கு மேலே கருப்புச் சட்டத்துக்குள் ரசத்துக்காக ஏங்கும் கண்ணாடி.. அதையடுத்து ஜன்னல்.. கண்ணாடிக் கதவில் சில சட்டங்கள் காயப்பட்டு.. ஜன்னலுக்குக் கீழே இன்னொரு சேதப்பட்ட மர நாற்காலி..
இது ஒரு சாதாரண வீடாக ஜோசபுக்குப் படவில்லை.. திகில்.. மர்ம கதைகளில் வரும் அமானுஷ்யம் கலந்த இடம் போலிருந்தது.. அடி மனதில் ஒரு வித கலக்கம் படர்வதை உணர்ந்தான். போயும் போயும் இந்த வீட்டுக்குத் தானா கேப்ரியல் தன்னை அனுப்ப வேண்டும்..
ஜோசப் கேப்ரியலிடம் வேலைக்குச் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன.. அதுவும் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் எடுபிடியாக…. அந்த வட்டாரத்தில் அந்த நிறுவனத்தின் தயாரிப்பு ரொம்பவே பிரசித்தம்.. காரணம் கேப்ரியல் தயாரிக்கும் பூச்சிக் கொல்லி மருந்தின் வீரியம்.. ஒரு முறை வயலில் தெளித்தால் போதும்.. எந்தப் பூச்சியும் அண்டாது.. அப்படி அண்டினாலும் அதற்கு அடுத்த விநாடி என்று ஒன்று இருக்காது.
கேப்ரியலின் இந்த பூச்சிக்கொல்லி மருந்தின் ரகசியத்தைத் தெரிந்துக் கொள்ள பலர் முயன்றிருக்கின்றனர். ஆனால் அதன் ரசாயன ரகசியத்தை அவன் இன்னமும் ரகசியமாகவே வைத்திருக்கிறான்.. வேலைக்கு சேர்ந்த இந்த இரண்டு வருடங்களில் ஜோசப் தெரிந்துக் கொண்ட ஒரே வார்த்தை.. ம்ருதாமத்.. அதுவும் அது கேப்ரியல் எப்போதாவது உச்சரிக்கும் வார்த்தை.. ம்ருதாமத் என்றால் என்ன.. அது எங்கிருந்து வருகிறது.. அதை வைத்துக் கொண்டு கேப்ரியல் என்ன பண்ணுகிறான் என்று அவனுக்கு எதுவும் விளங்கவில்லை.
எடுபிடியாக மட்டுமல்ல.. கேப்ரியல் உயிரை வைத்திருக்கும் ஒரே தங்கை சிலியாவை பள்ளிக்கு அழைத்துச் செல்வது.. டியூஷன் வகுப்புக்கு அழைத்துச் செல்வது எல்லாம் ஜோசப் தான்.
இப்படித் தான் ஒரு நாள் ஜோசப் அலறிக் கொண்டு வந்தான்.
“எஜமான்.. சிலியாவைக் காணோமுங்க”
கேப்ரியல் பதறினான்..
“என்னடா சொல்றே?”
“ஆமா எஜமான்.. வழக்கமா டியூஷன் கிளாஸ் முடிஞ்சு வாத்தியார் வீட்டு வாசல்ல மத்த பசங்களோட நின்னுட்டிருப்பா.. நான் போய் கூட்டியாருவேன்.. இன்னிக்கு மத்த பசங்க இருந்தாங்க.. ஆனா சிலியாவைக் காணும்.. கேட்டா அவங்களுக்கும் எதுவும் தெரியலை”
“அடப் பாவி.. சிலியாவை ஜாக்ருதையா கூட்டியாரதை விட்டு உனக்கு வேற என்னடா வேலை?”
“வந்து.. இங்க பேக்டரில..”
“போடா..”
கேப்ரியல் டியூஷன் வகுப்பு நடத்தும் ஆசிரியர் வீட்டுக்கு ஓடினான்.. சிலியாவின் வகுப்புத் தோழிகளை விசாரித்தான்.. எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.. இரண்டு நாட்கள் கழித்து சிலியாவின் சேதமடைந்த உடல் அந்த ஊர் ஏரியில் மிதந்தது..
கேப்ரிய்ல் உடைந்து போனான்..
மீள முடியாமல் இன்றுவரை தவித்துக் கொண்டிருக்கிறான்..
அந்த சம்பவத்திலிருந்து மூடிக்கிடந்த பூச்சிக்கொல்லி நிறுவனத்தை மற்றவர்களின் வற்புருத்தலின் பேரில் கேப்ரியல் மறுபடியும் இயக்க ஆரம்பித்தான். ஆனால் அவனால் முன்போல் கவனம் செலுத்த முடியவில்லை. இந்த நிலையில் தான் ஜோசப்பை அழைத்து..
“இதுவரை யார் கிட்டயும் இந்த வேலையை ஒப்படைக்கலை.. இப்ப உன்னை நம்பி ஒப்படைக்கறேன்.. போ.. நான் சொல்ற இடத்துக்குப் போய் ம்ருதாமத் வாங்கிட்டு வா”
“என்ன..”
“பூச்சிக்கொல்லி மருந்துல சேர்க்க வேண்டிய முக்கியமான வஸ்து.. என் பார்முலா.. ம்ருதாமத்.. அப்படின்னா சம்ஸ்க்ருதத்துல நீல நிற கற்களாலான துகள்கள் கூடிய..”
“புரியலை”
“சாரங்கன்கிட்ட நான் அனுப்பினேன்னு சொல்லு.. ம்ருதாமத் கேட்டேன்னு சொல்லு.. அவர் புரிஞ்சுப்பார்..”
“சரி..”
”கூடவே மௌத்னு சொல்லு”
“வந்து.. லெட்டர் ஏதாவது.. இல்லை போன் நம்பர்..”
”உகும்.. சாரங்கன் லெட்டர்லாம் விரும்ப மாட்டார்.. அவர்கிட்ட போனும் கிடையாது.. அந்த இடத்தை விட்டு அவர் எங்கேயும் போக மாட்டார்..”
கேப்ரியல் கொடுத்த முகவரி ஊருக்கு வெளியே ரொம்பவே தொலைவில் ஒதுக்குப்புறமாக இருந்தது. சுத்தி வனாந்தரம் போல் மரங்கள்.. பின்னால் மலை வளைவுகள்..
ஒருவழியாக ஒத்தையடிப் பாதைபோல் இருந்த அந்த மண்குவியலில் கொஞ்சம் சிரமத்துடன் நடந்து சாரங்கனின் வீட்டை அடைந்து..
”உட்காருங்க”
சாரங்கன் சொன்னவுடன் ஜோசப் தயங்கியபடி சேதமடைந்திருந்த அந்த நாற்காலியில் மெதுவாக உட்கார்ந்தான்..
“கேப்ரியல் என்ன சொன்னான்?”
“ம்ருதாமத் வேணுமாம்..”
“ம்ம்.. மறுபடியும் தொழில் ஆரம்பிச்சிட்டானா?”
”ஆமா.. எல்லாரும் கேட்டுக்கிட்டதுனால..”
“வேற ஏதாவது சொன்னானா?”
“இல்லையே.. ஆ.. சொன்னாரு.. அது என்ன.. வந்து.. ஆ.. மௌத்”
சாரங்கன் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்.
பிறகு மெதுவாக எழுந்து..
“இருங்க.. ஏற்பாடு பண்ணறேன்”
என்று பக்கத்துக் கதவு வழியாக உள்ளே போனார்.. சில நிமிடங்களில் திரும்பி..
“தயாராக அரை மணி ஆகும்.. ரசாயனம் கலந்திட்டிருக்கு.. தூளாகணும்.. கேப்ரியலோட பூச்சிக்கொல்லியோட வெற்றிக்குக் காரணமே நான் தயாரிக்கிற இந்த ம்ருதாமத் தான்.. ரொம்பவே சக்திவாய்ந்த விஷம்.. யாருக்கும் தெரியாத ரகசியம்.. உங்களை நம்பி கேப்ரியல் எப்படி இதைச் சொன்னான்னு புரியலை”
”நான் அவர் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன்”
”ஓ.. ஜூஸ் சாப்பிடறீங்களா?”
“வந்து.. “
”தயங்காதீங்க.. கடைல வாங்கின ஜூஸ் இல்லை.. வாங்க இங்க கடையும் கிடையாது.. சுத்தியிருக்கிற தோட்டத்துல கிடைக்கிற பழங்கள்னால நானே அப்பப்ப தயார் பண்றது.. இப்ப ஏதோ சொல்றாங்களே.. ஆர்கானிக்.. இது கலப்படமில்லாத ஆர்கானிக் ஜூஸ் தான்.. தைரியமா சாப்பிடலாம்”
ஜோசப்பின் பதிலுக்குக் காத்திராமல் மெதுவாக எழுந்து மறுபடியும் கதவு வழியாக உள்ளே போனார்.. சில நிமிடங்களில் இரண்டு டம்ளர்களில் ஜூஸுடன் வந்து ஒன்றை ஜோசப்பிடம் நீட்டி.. அவரும் எதிரே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார்.
“பதினஞ்சு வயசுல கேப்ரியல் எங்கிட்ட வந்தான்.. மொதல்ல பார்த்த உடனேயே அவனை எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு.. அவனுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கக் கத்துக் கொடுத்தேன்.. என்னுடைய கண்டுபிடிப்பான ம்ருதாமத் பத்திச் சொன்னேன்.. அதை உபயோகிச்சு இன்னிக்கு அவன்..”
“… …”
“கேப்ரியல் ரொம்ப நல்லவன்.. கர்த்தர் நல்லவங்களை தானே சோதிக்கிறார்.. பாவம் சிலியா தான் அவன் உலகம்.. அந்த உலகமே..”
ஜோசபுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. கொஞ்சம் கொஞ்சமாக ஜூஸைக் குடித்தான்.. முழுதும் குடித்து முடிப்பதற்குள் தரையில் சரிந்தான்..
சாரங்கன் கண்களை மூடிக் கொண்டார்..
இரண்டு நாட்களுக்கு முன்னால் கேப்ரியல் அங்கு வந்து சொன்னது நினைவுக்கு வந்தது..
“என் சிலிவியாவோட அலமாரியை இத்தனை மாசங்கள் கழிச்சு நேத்து தான் திறந்தேன்.. அவ ஸ்கூல் நோட்டோட கடைசி பக்கங்கள்ள அவ எழுதியிருந்தா.. ஜோசப் அங்கிள் ரொம்ப மோசம்.. தினம் தினம் தப்பு பண்ணறார்.. வெளில சொல்லக் கூடாதுன்னு மிரட்டறார்.. எனக்குப் பிடிக்கலை.. பிடிக்கலை..”
சொல்லி முடிப்பதற்குள் கேப்ரியல் கதறினான்..
”பெரியப்பா அவனை.. அவனை…”
ஜோசப் அடங்கிப் போயிருந்தான்..
”ம்ருதாமத்”
சாரங்கனின் வாய் மெதுவாக முணுமுணுத்தது..