நிழலிடத்தில் நிற்கும் பெண்மணியின் பாடல்/பால் செலான்



தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி


————
மௌனமான ஒருவர் வந்து துலிப் மலர்களைத் தலைகொய்யும்போது:
யார் வெல்கிறார்கள்?
யார் தோற்கிறார்கள்?
யார் ஜன்னலை நோக்கி நடக்கிறார்கள்?
யார் முதலில் அவளுடைய பெயரைப் பேசுகிறார்கள்?

அவன் என் கூந்தலை அணிபவன்.
அவன் அதை ஒருவர் இறந்தோரை தன் கைகளில் அணிவது போல அணிகிறான்.
ஆகாயம் நான் அவனைக் காதலித்த வருடத்தில் என் கூந்தலை அணிந்த அளவு, அவனும் அணிகிறான்
அவன் அதை வீண் தற்பெருமைக்காக அணிகிறான்.

அந்த ஒருவன் வெற்றி பெறுகிறான்
தோல்வியுறுவதில்லை
ஜன்னலை நோக்கி நடப்பதில்லை
அவன் அவள் பெயரைப் பேசுவதில்லை.

அந்த ஒருவனே என் கண்களைக் கொண்டிருக்கிறான்
அவன் அவற்றை கதவுகள் அடைக்கப்பட்ட நாட்களிலிருந்து வைத்திருக்கிறான்
அவன் அவற்றை விரல்களில் அணியும் மோதிரங்களைப் போல அணிந்திருக்கிறான்.
அவன் அவற்றைக் காமத்தைப் போலவும் கடினமான நீலமணிகளைப் போலவும் அணிந்திருக்கிறான்
இலையுதிர்காலத்திலிருந்து அவன் எனது சகோதரனாய் இருக்கிறான்
அவன் இரவுகளையும் பகல்களையும் எண்ணிக்கொண்டிருக்கிறான்.

அந்த ஒருவன் வெற்றி பெறுகிறான்
தோல்வியுறுவதில்லை
ஜன்னலை நோக்கி நடப்பதில்லை
அவனே அவள் பெயரைக் கடைசியாகப் பேசுபவன்.

அந்த ஒருவன் நான் சொன்னவற்றை வைத்திருக்கிறான்
அவன் அவற்றை தன் கைகளுக்கு அடியில் பொதி போல சுமந்திருக்கிறான்
அவன் அவற்றை ஒரு கடிகாரம் தன் படுமோசமான மணி நேரத்தைச் சுமந்திருப்பது போல சுமந்திருக்கிறான்
வாசற்படிலிருந்து வாசற்படிக்கு அவன் அவற்றை சுமந்துசெல்கிறான் அவன் அவற்றை என்றுமே தூக்கி வீசுவதில்லை.

அந்த ஒருவன் வெற்றி பெறுவதில்லை
அவன் தோல்வியுறுகிறான்
அவன் முதலாவதாக அவளுடைய பெயரைப் பேசுபவன்.

தலைகொய்யப்பட்ட துலிப் மலர்களோடு.