அமெரிக்காவுக்கு கல்யாணம் ஆகி/நியாண்டர் செல்வன்

அமெரிக்காவுக்கு கல்யாணம் ஆகி வந்த ஒரு நண்பர் தன் மனைவியின் தம்பிக்கு விசிட்டர் விசா ஸ்பான்சர் செய்தார். அதன்பின் நடந்த கதையை விவரித்தார்

“அவனுக்கு படிப்பே வராது. அதனால தான் விசிட்டர் விசா எளிதில் கிடைத்தது. ஆனால் உடம்பு முழுக்க மூளை. அமெரிக்காவுக்கு வந்தவன் என்னை பார்க்க வரவே இல்லை. நேராக ப்ளாரிடா போய் அங்கே ஒரு மோட்டலில் சட்டவிரோதமாக வேலைக்கு சேர்ந்துவிட்டான். அந்த வேலையை எப்படி பிடித்தான் என்றே தெரியவில்லை

அங்கே அவனுக்கு இலவச உணவு, இலவச தங்குமிடம். டபிள் ஷிப்ட் எல்லாம் வேலை பார்த்து காசு தேத்திக்கொண்டு இந்தியா போவான். ஒரு வருடத்தில் ஆறு மாதம் அமெரிக்காவில் ஆறு மாதம் இந்தியாவில்

அமெரிக்காவில் பெரிய வேலையில் இருப்பதாக பொய் சொல்லி நல்ல வரதட்சிணையுடன் கல்யாணமும் பண்ணிக்கொண்டான். அவன் கல்யாணத்துக்கு நான் போயே ஆகவேண்டும். அங்கே அவன் மனைவி அவனது கம்பனியை பற்றி என்னிடமே கேட்க நான் பொய் சொல்ல வேண்டி இருந்தது. எனக்கு எப்படி இருக்கும்?

அதன்பின் காடாறு மாதம், நாடாறு மாதம் கதை தொடர்ந்தது. ஒருமுறை ப்ளாரிடா போனபோது அவனை பார்க்கபோனேன். அவன் போனே எடுக்கலை. அதனால் வருவதாக சொல்ல முடியவில்லை. மோட்டலுக்கு போனால்…

“போனால்..”

“அங்கே ஒரு மெக்சிக பெண்ணை வைத்து குடித்தனம் நடத்திகொண்டிருக்கிறான். எனக்கு எப்படி இருக்கும்?”

“அடபாவி..”

என்னை அவளிடம் “பிரதர் இன் லா” என அறிமுகபடுத்தினான்

“அப்புறம்?”

“வீட்டுக்கு போய் என் மனைவியை பிடித்து கண்டபடி திட்டினேன். வேறு என்ன பண்ண?”

“பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்பிடறான். கவலப்படாதீங்க” என்றேன்

“இந்தியாவில் இவன் சம்சாரத்துக்கோ அல்லது இங்கே இவன் கீப்புக்கோ தெரிந்தால் என் நிலையை யோசிச்சு
பாருங்க. இவனுக்கு பல்லு இருக்கும். பகோடாவும் திம்பான். அவங்க என் பல்லை கழட்டிட மாட்டாங்களா? அமெரிக்க விசாவும், வேலையும் வைத்திருக்கும் நானே ஒழுக்கமா இருக்கேன். இவன் சும்மா விசிட்டர் விசாவை வெச்சிட்டே ரெண்டு சம்சாரத்தோட ஜே, ஜேனு இருக்கான்”

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க?

One Comment on “அமெரிக்காவுக்கு கல்யாணம் ஆகி/நியாண்டர் செல்வன்”

  1. ஹா ஹா. இதில் கதாநாயகனுக்கு ஒழுக்கமாக இருப்பதில் வருத்தமா அல்லது அவன் மச்சினன் போல நம்மால் இருக்க முடியவில்லையே என்ற ஆதங்கமா?
    நல்லா இருக்கு கதை

Comments are closed.