அங்கும் இங்கும் 3/அழகியசிங்கர்

ஒரு கதை ஒரு கவிதை கூட்டம் நடத்துவதாக இருந்தேன். திடீரென்று தமிழச்சி தங்கபாண்டியன் வீட்டு திருமண வரவேற்பு விழா ஞாபகத்திற்கு வந்தது. கதை கவிதைக் கூட்டத்தை அடுத்த வாரம் தொடரலாம் என்று விட்டுவிட்டேன்.

வரவேற்பு நிகழ்ச்சியில் கூட்டம் என்றால் அப்படி ஒரு கூட்டம். மணமக்களை வாழ்த்த பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. பல எழுத்தாள நண்பர்களைப் பார்த்தேன். என் பக்கத்தில் இரா முருகன் இருந்ததால் பேசிக்கொண்டே வந்தேன். நான் இதுவரை அவருடைய மூன்று நாவல்களை வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாகப் படிக்க நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்து விட்டேன். திறமையான எழுத்தாளர். நான் தற்போது ஆங்கில நாவல்கள் சிலவற்றைப் படித்துக் கொண்டு வருகிறேன். ஒன்று ITALO CALVINO எழுதிய IF ON A WINTER’S NIGHT A TRAVELER இன்னொன்று அதேபோல் If Tomorrow comes என்று பரபரப்பாகப் பேசப்படும் எழுத்தாளரின்
புத்தகமும், அதேபோல் KISS – ED MCBAIN புத்தகமும் 96 பக்கங்கள் வரை படித்துவிட்டேன். கேட்பவரே என்கிற லக்ஷ்மி மணிவண்ணனின் கவிதைத் தொகுதியும், பழனிவேளின் தவளை வீடும், குவளைக் கண்ணனின் பிள்ளை விளையாட்டும், இன்னும் பல புத்தகங்கள்.

மேடையில் வீற்றிருந்த தமிழச்சி தங்கபாண்டியன் என்னை ஞாபகப்படுத்திக்கொண்டு வரவேற்றது பெரிய விஷயமாக இருந்தது. ஏன்என்றால் மூச்சு விடக்கூட முடியாதபடி கூட்டம்.

விருந்து முடிந்தவுடன் வெளியே செல்லும் முன் ஒரு தாம்புலப் பை கொடுத்தார்கள். அதில் பெட்டகம் நம் கையில் என்ற புத்தகம் இருந்தது. உபயோகமான மருத்துவக் குறிப்புகள் கொண்ட புத்தகம். உண்மையிலே இது ஒரு பெட்டகம். எப்போதும் பத்திரமாக பாதுகாக்க வேண்டிய புத்தகம்.

அதில் வெற்றிக்கு 20 கட்டளைகள் என்ற பகுதியில் :

முடியாது, நடக்காது போன்ற வார்த்தைகளை சொல்லவே கூடாது என்று எழுதியிருந்தது.