
இந்திய விடுதலை இயக்கத்தின் காந்திய முகாமைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம்.தாமாகவே, காந்தி, வந்தேமாதரம் ஆகிய பத்திரிகைகளை, தமிழ்நாடு பத்திரிகையில் உதவியாசிரியராக இருந்து பெற்ற பயிற்சிக்குப் பின்,ஆரம்பித்து நடத்தியவர்; அவர் எழுதிய தலையங்கங்கள், வரலாற்றுச் சிறப்புக் கொண்டவை.
‘பேனாமன்னர்’ என்று அவர் புகழப்பட்டார். இரண்டாம் உலகயுத்தத்தின் போது, போர்க்காலப் பணவீக்கத்துக்கு ஏற்றபடி சம்பளம் தராமையால், உதவி ஆசிரியர்கள் ராஜிநாமா செய்தனர். தமக்குக் கீழே உள்ள ஊழியர்களின் நலனிலேயே கருத்துக் கொண்ட சொக்கலிங்கம், தாம் பாதிக்கப்படாத நிலை இருந்தும் கூட, அவர்களுடன் சேர்ந்து தாமும் ராஜிநாமா செய்தார். செய்ததுடன், தாமாகவே தினசரி என்ற நாளேட்டையும் தொடங்கினார்.இருந்தும், பொருளியல் நெருக்கடியினால் சில ஆண்டுகளே அது வெளிவர முடிந்திருக்கிறது. 1973-இல் தென்காசித் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராகத் தேர்தலில் நின்று வெற்றி பெற்று,சென்னை மாகாண சட்டப்பேரவையின் உறுப்பினராக ஆகியிருக்கிறார். இவ்வளவும், அவரது பத்திரிக்கை இயக்க- அரசியல் இயக்கப் பரிமாணங்கள்.
தமிழில், சுபாஷ் சந்திரபோஸ், நேரு, காமராஜ் போன்றோரின் சரிதைகளை அவர் எழுதினார். இதற்கும் மேல் போய், காமராஜரைத் தூண்டி,ஒரு பெரிய அரசியல் தலைவராவதற்குரிய ஊக்கத்தையே இவர்தான் கொடுத்தார் என்பது, இன்று பலருக்கும் தெரியாதது. சத்தியமூர்த்தி வீட்டில், பணிவிடையாளராகவும் காந்தீயத் தொண்டராகவும் இருந்த காமராஜரிடம் மறைந்திருந்த தலைமைக் குணங்களை, ஊடுருவி அறிந்த மேதை சொக்கலிங்கம். இவரின் தூண்டுதல்களுக்கு முதலில் செவிசாய்க்காமல், ராஜகோபாலச் சாரி முதலியோரைப் போலத் தமக்கு ஆங்கில அறிவு, பட்டப் படிப்பு-ஏதும் இல்லாததை காமராஜர் கூறியும்கூட,இந்திய தேசீயத்தின் நாடியை உணர்ந்திருந்த சொக்கலிங்கம், மக்களின் பிரதிநிதியாவதற்கு அவசியமானவை இவை அல்ல என்று சுட்டிக் காட்டி, காமராஜரைத் தைரியப்படுத்தியிருக்கிறார் முதலில் அகில இந்தியத் தளத்தில் ராஜகோபாலாச்சாரி வகித்த பெருந்தலைமையை, காமராஜர் பின்னாடி வகித்தமைக்குப் பின்னணியாக, சொக்கலிங்கத்தின் ஆளுமை நின்றிருக்கிறது. கு. ஸ்ரீநிவாஸனுடன் சேர்ந்து அவர் ஆரம்பித்த பத்திரிகை தான் மணிக்கொடி. இதன் ஆசிரியராகப் பொறுப்பளிக்கப்
பட்டிருந்தவர் வ.ரா. பாண்டிச்சேரியில் ஸ்ரீ அரபிந்தோவின் ஆசிரமத்தில் இருந்த காலத்தில்,அங்கே வந்து போய்க்கொண்டிருந்த சி.சுப்ரமணிய பாரதியுடன் பழகி,அவருடைய கவித்துவத்துக்கும் நவ இந்தியப்பார்வைக்கும் ஆட்பட்டவர் வ.ரா. இதனால் அப்போது தொடர்ந்து வந்து கொண்டிருந்த தமது காந்தியில், பாரதி பற்றித் தொடராக, சொக்கலிங்கம் வ.ரா.வை எழுதவைத்ததின் விளைவுதான்,பின்பு, மகாகவி பாரதி என்ற நூலாயிற்று. சொக்கலிங்கத்தின் சிறுகதைகள், அல்லி விஜயம் என்ற நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அவர் ஒரு புனைபெயரில் எழுதிய நாடகம் ஒன்றை, அழகிரிசாமி இளைஞராக இருந்தபோது தமது ஊரில் மேடையேற்றியதும், பிறகு சொக்கலிங்கத்திடம் உதவி ஆசிரியராகப் பணிசெய்து கொண் டிருந்தபோது, ஒரு சந்தர்ப்பத்தில் அதே புனைப்பெயர் கொண்ட விஷயம் ஒன்றைப் பார்த்து விட்டு, இது யார் என்று அவரிடமே விசாரித்தறிந்து வியந்ததும், ரஸமான விபரம்.
லியோ டால்ஸ்டாயின் War and Peace நாவலை, சுருக்காமல் தமிழ்ப் படுத்தியிருக்கிறார் சொக்கலிங்கம். இவ்விடத்தில், அவரது தமிழியல் சாதனை மீண்டும் பிரவேசிக்கிறது. இந்நூல் இன்று அச்சில் இல்லை. காந்தி முதலிய தலைவர்களை அவர் சந்தித்த விபரங்களும் இவற்றின் வழியாக அரிய தகவல்களும், எனது முதல் சந்திப்பு என்ற அவரது நூலில் கிடைக்கின்றன. மறையும் போது சொக்கலிங்கத்துக்கு வயது 67 தான். பிறப்பு 1899, மறைவு 1966.

எழுத்து,நாடு இதம்.