நெகிழ்ச்சியுடன் கென்ய நாட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறது காவ்லி குடும்பம்! /அம்ரா பாண்டியன்

வங்கிகளில் கோடிகளில் கடன் வாங்கி வெளிநாடுகளில் அலையும் இந்தியத் தொழிலதிபர்கள்…30 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய ரூ.200 கடனை அடைக்க இந்தியாவில் கடைக்காரரைத் தேடி அலைந்து கண்டுபிடித்த கென்யா எம்.பி!

கோடிகளில் வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பும் நம்ம ஊரு தொழிலதிபர்கள் ஒரு பக்கம் இருக்க, முப்பது வருடத்துக்கு முன் வாங்கிய 200 ரூபாய் கடனை அடைக்க, இந்தியா வந்த கென்ய நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் கடைக்காரரைத் தேடி கண்டடைந்து, கொடுக்க முற்பட்ட செயல் நம்மை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது.

கென்ய நாட்டின் நியாரிபரி சாச்சே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரிச்சார்ட் டோங்கி. இவர், 1985 முதல்1989 ஆண்டுகள் வரை மகாராஷ்ட்டிரா மாநிலம் ஔரங்காபாத்தில் உள்ள மவுலானா ஆசாத் கல்லூரியில், மேலாண்மைப் படிப்பு படித்தார். அப்போது, வாங்கடே நகரில் மளிகைக்கடை வைத்திருந்த காசிநாத் காவ்லியிடம் பழக்கம் ஏற்பட்டது. அவர்தான் ரிச்சர்ட் தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்ததோடு மேலும் பல உதவிகளையும் செய்தார்.

அவர் கடையில் கடைசியில் ரூ.200-க்கு காய்கறிகள், கடனாக வாங்கியிருந்தார் ரிச்சர்ட். மிகச் சிரமமாக இருந்ததால் அப்போது அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை அவரால்.
படிப்பு முடிந்ததும் அந்தக் கடனைக் கொடுக்காமலேயே, கென்யா திரும்பி விட்டார் . அங்கு அரசியலில் ஈடுபட்டார். பின் இப்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஆகவும் ஆகி விட்டார்.

படித்துக் கொண்டிருந்தபோதே, காவ்லிக்குக் கொடுக்க வேண்டிய ரூ.200 கடன், அவர் மனதை குடைந்து கொண்டிருந்தது. அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வார். ஆனால், அதற்கான வாய்ப்பு அமையவில்லை.

30 ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் கென்ய பிரதிநிதிகள் குழு சமீபத்தில் நமது பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இந்தியா வந்தது. அதில் கென்ய அரசின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை துணைத் தலைவராக இருக்கும் ரிச்சர்டும் இடம்பெற்றிருந்தார். அரசு ரீதியான கூட்டம் முடிந்ததும் தனது மனைவி மிட்செலுடன் ஔவுரங்காபாத்துக்குச் சென்றார். அப்போது ’காசிநாத் காக்கா’ என்றழைக்கப்பட்ட காவ்லியைத் தேடினார். முதலில் அகப்படவில்லை.இரண்டு நாட்களாகத் தேடி, கடைசியில் திங்கட்கிழமை அன்று கண்டுபிடித்தார். அவர் முன்னால் போய் நின்று, ’’நான்தான் ரிச்சர்ட் டோங்கி’’ என்று மகிழ்ச்சியுடன் சொன்னதும் 70 வயதான காவ்லிக்கு ஏதும் புரியவில்லை. ’உங்ககிட்ட 200 ரூபாய் காய்கறிகள் கடனை வச்சுட்டுப் போனேனே, அந்த டோங்கி’ என்றதும் கண்கலங்கி விட்டார் காவ்லி. இருவரும் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர். அவர் வீட்டில், பழைய நண்பருக்கு தடல் புடல் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

பின்னர், முப்பது ஆண்டுகளாகத் தன்னை வருத்திக்கொண்டிருந்த ரூ.200 கடனை கொடுத்தார் ரிச்சர்ட். வாங்கிக்கொள்ள மறுத்தார் காவ்லி. வற்புறுத்தித் தந்தும் வாங்க மறுத்ததால் அவரது பிள்ளைகளுக்குப் பரிசாக சில யூரோக்களைக் கொடுத்தார் ரிச்சர்ட்.

இதுபற்றி காவ்லி கூறும்போது, ‘’அவர், நான் தான் ரிச்சர்ட் டோங்கி என்று சொன்னதும் எனக்கு முதலில் யாரென்று தெரியவில்லை. அவர் அந்த 200 ரூபாய் பற்றிச் சொன்னதும். அவர் நேர்மை என் கண்களை கலங்க வைத்து விட்டது’’ என்கிறார்.

’’இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன்’’ என்று கண்ணீருடன் கூறிய ரிச்சர்ட் டோங்கி, சிறிது நேரத்துக்குப் பிறகு, ‘’அவர் எனக்கு அதிகமான உதவிகளைச் செய்திருக்கிறார். அவர் கடனை அடைக்க வேண்டும் நினைத்துக்கொண்டே இருந்தேன். அவரைச் சந்திப்பேன் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். நேர்மையாக இருக்க, இந்தியர்கள்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள் என்பதை ஒப்புக்கொள்வேன்’’ என்கிறார்.

அவர் மனைவி மிச்செல் கூறும்போது, ‘’டோங்கி, பலமுறை காவ்லி பற்றி எங்கள் குடும்பத்தினரிடம் சொல்லியிருக்கிறார்” என்றார்.ரிச்சர்டுக்குப் பாரம்பரிய தொப்பியையும் அவர் மனைவுக்குப் புடவைகளையும் வாங்கிக் கொடுத்து மன நெகிழ்ச்சியுடன் கென்ய நாட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறது காவ்லி குடும்பம்!

One Comment on “நெகிழ்ச்சியுடன் கென்ய நாட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறது காவ்லி குடும்பம்! /அம்ரா பாண்டியன்”

Comments are closed.