
(1)
அரும்பாய் நறுக்கின
சிறு வெங்காயத்துடன்,
பார்க்கவே பரவசமாயிருக்கும்
பஞ்சு ஊத்தப்பம்.
கேட்காதே; இந்த அசட்டு கேள்வியை;
தோசைக்கு உண்டோ இணை?
(2)
சிறு இரும்பு சட்டி எடுத்து;
சதம்ப நல்லெண்ணெயுடன் நெய் வார்த்து;
மூடிவைத்து சாவதானாமாய்
வேகவைத்த “இலுப்பசட்டி”
தோசைக்கு உண்டோ இணை?
(3)
பஞ்சு போல் புளியா தோசை;
பதவிசாய் எள்ளு மிளகாய்பொடியில்
நல்லெண்ணெய்
குழைத்து, சற்றே ஆற வைத்த
தோசைக்கு உண்டோ இணை?
(4)
தயிருடன், முந்திரி
சீரகம் பச்சைமிளகாய்
கருவேப்பிலை, பெருங்காய அலங்காரத்துடன்
நெய்யில் வீசி வார்க்கும் ரவா
தோசைக்கு உண்டோ இணை?
(5)
கம்புடன் அரிசியும்
உளுந்தும் சேர்த்து,
சற்றே புளித்தபின் முறுகலாக வார்க்க:
“கம கம” என்றே ஊரே மணக்கும்;
தோசைக்கு உண்டோ இணை?
20-7-2023
