இனிக்கும் தமிழ் – 187/ டி வி ராதாகிருஷ்ணன்

கற்றது கைம்மண் அளவ

————————————–
ஔவையாரின் தனிப்பாடல்
கற்றதுகைம் மண்ணளவு கல்லா துலகளவென்(று)
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்த
வெறும்பந்த யங்கூற வேண்டாம் புலவீர்
எறும்புந்தன் கையாலெண் சாண்
ஒளவையின் பாடல்கள் அத்தனை எளிமையானவை, இனிமையானவை, நடைமுறைக்கு, அன்றாட
வாழ்க்கைக்கு வழி காட்டுபவை.
கொஞ்சம் படித்து விட்டு ,ஏதோ எல்லாம் தனக்குத்தான் தெரியும் என்று
பேசுபவர்களைக் கண்டு ஒளவை மேற்கண்ட பாடலை சொல்லுகிறாள்…
“கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகளவு. கலைமகளும் தினமும் படித்துக்
கொண்டு இருக்கிறாள். சும்மா நான் ரொம்பக் கற்றவனா, நீ ரொம்பக் கற்றவனா
என்று வாதம் செய்து கொண்டு இருக்காதீர்கள். எறும்பும் (உங்களைப் போல)
தன்னுடைய கையால் எட்டுச் சாண் உயரம் இருக்கும்”
நமக்கு ஏதோ ஒரு துறையில் ஏதோ கொஞ்சம் தெரியும்.ஒருவருக்கு சமையல்
தெரியலாம், சங்கீதம் தெரியலாம், படம் வரையத் தெரியலாம், நன்றாக விளையாடத்
தெரியலாம். நமக்கு அதில் எதைப் பற்றியும் ஏதும் தெரியாமல் இருக்கலாம்
ஒவ்வொருவரும், அவர்கள்..அவர்கள் துறையில் தெரிந்தவர்கள் தான்
இதைச் சொல்ல வந்த ஒளவை, மூன்று பெரிய விஷயங்களை போகிற போக்கில் சொல்லி
விட்டு ப் போகிறாள்.
முதலாவது விஷயம் -, இந்த உலகில் கடல் எவ்வளவு பெரியது. அந்த கடலின்
கரையிலும், கடலின் அடியிலும் எவ்வளவு மண் இருக்கும். இந்த உலகம் எல்லாமே
மண்ணால் நிறைந்ததுதான். அவ்வளவு மண்ணில், ஒரு பிடி மண் எடுத்தால் எவ்வளவு
இருக்கும். இந்த பூமியை மட்டும் ஏன் கொள்ள வேண்டும். இந்த அண்ட
சராசரங்களை எடுத்துக் கொண்டால் அதில் எவ்வளவு மண் இருக்கும். கற்பனை கூட
செய்ய முடியாது. அந்த கோடானு கோடி அண்டத்தில், ஒரு பிடி மண்ணை கையில்
எடுத்தால் எவ்வளவு இருக்குமோ அவ்வளவு நாம் படித்தது. படிக்காதது இந்த
அண்டத்தில் உள்ள மண்ணின் அளவு. ஒரு கைப்பிடி மண் அளவே தெரிந்து
கொண்டு..எல்லாம் தெரிந்த்து போல நடந்து கொள்கிறோம்.ஆணவப்படுகிறோம்
இரண்டாவது விஷயம் -, கல்விக்கு அதிபதியாக சரஸ்வதியை சொன்ன நம்
முன்னவர்கள், அவள் கூட அனைத்தையும் படித்து முடித்து விடவில்லையாம்.
இன்னும் படித்துக் கொண்டுதான் இருக்கிறாளாம். கல்விக் கடவுளே கல்வியை
முற்றுமாக அறிந்து கொள்ளவில்லை என்றால் கல்வியின் அகல ஆழத்தை நாம்
அறிந்து கொள்ள வேண்டும்.
மூன்றாவது விஷயம் – , சரஸ்வதி ஏதோ நேரம் கிடைக்காமல் , கிடைத்த நேரத்தில்
படிக்கவில்லை. ஓதுகிறாளாம். ஓதுதல் என்றால் திருப்பி திருப்பி சொல்லுதல்.
மனனம் செய்தல். புரியும்படி சொல்லுதல்.
கையில் ஓலைச்சுவடி இல்லா கல்விக் கடவுள் சரஸ்வதியை பார்த்திருக்கிறீர்களா?
நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், நாம் படித்ததை நாலு பேர் தெரியச்
சொன்னால் தானே நமக்குத் பெருமை. இல்லை என்றால் நாம் படித்தது யாருக்குத்
தெரியும் என்று நினைத்து எந்நேரமும், எல்லா விஷயங்களிலும் நம்மை பெரிதாக
எண்ணி,ஏதாவது கருத்து சொல்லிக் கொண்டே இருப்போம்.
வள்ளுவர் சொல்கிறார், அடக்கமாக இருந்தால் பெரிய புகழ் வந்து சேரும் என்று.
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.
என்பது வள்ளுவம்.
அடக்கம் அளவற்ற பெருமையை தருமாம்