செ.புனிதஜோதி கவிதை

ஏய் சண்டியே
ஏய் கொற்றவையே
ஏய் காளியே
ருத்தரகோலத்தில்
நின்றது போதுமடி

எங்கள் ஆதிதாயின்
வேட்டையாடிய
வீரம் எங்கே?

மதத்திற்கும்,கட்சிக்கும்
சாதிக்கும் , ஆணாதிக்கஆட்சிக்கும்
எங்கள் உடல் தான் தீனி

புணர்தலில்
மூர்ச்சையாகி,மூர்ச்சையாகி
மீண்டெழுந்தது போதும்

அரசவைக்குள்
நிகழ்ந்த துகில்உரிப்பை
இன்றைய
துச்சாதனர்கள்
நடுத்தெருவிலும்
நிகழ்த்திக்காட்டியுள்ளனர்

ஏய் சண்டியே
இனி மண்டையோட்டு மாலை
வேண்டாமடி
குறியில் குறியை
அறுக்கும் வாள் வைத்து
படைத்துவிடு

எத்தனைமுறை
ஆசிபா
நிர்பயா
பழங்குடி பெண்கள்
என
தொடர்கதையைப்
பேச

கலியுக சண்டியின்
அவதாரமாய் மாறு
எங்களை மாற்று