அவள் அப்படித்தான் 2/அழகியசிங்கர்

சினிமா விமர்சனம்

செவ்வாய்க்கிழமை (18.07.2023) நானும், மனைவியும் ஒரு படம் பார்த்தோம்.
படம் பெயர் ‘அவள் அப்படித்தான் 2 ‘
எனக்கு உடனே ருத்திரையாவின் ‘அவள் அப்படித்தான்’ படம் ஞாபகத்திற்கு வந்தது.

என் நண்பர் சிதம்பரம் இயக்கிய படம். அவர்தான் கதை இயக்கம் இந்தப் படத்திற்கு.

முக்கியமாக கதாநாயகியைச் சுற்றி வரும் படம் இது.

கணவன் மனைவிக்கும் இடையே நிகழும் சண்டை.

மஞ்சு ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராகப் பணி புரிகிறாள்.
ஒருநாள் பள்ளிக்கூடம் சென்ற மஞ்சு வீடு திரும்பவில்லை. ஆனால் மறுநாள் காலையில் வருகிறாள். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறாள்.
வீட்டில் என்ன காரணம் என்று தெரிவிக்கவில்லை.
அவள் கணவன்
இரவு அவள் திரும்பவில்லை என்ற விஷயம் அறிந்தவுடன் ஒரு நண்பருடன் இரவு முழுவதும் தேடி களைத்துப் போகிறான். பலரிடம் விசாரிக்கிறான். மனைவி பணிபுரியும் பள்ளிக்கூடத்திற்கு போய் விசாரிக்கிறான். அவளுக்கு திரும்பத் திரும்ப போன் செய்கிறான். போனை எடுக்கவில்லை. அவன் பதட்டம் உச்சத்தை அடைகிறது.
மஞ்சு காலையில் சாதாரணமாக வருவதைப் பார்த்தவுடன் படு கோபமடைந்து விடுகிறான்.தூங்காமல் அலைந்தது ஞாபகம் வருகிறது.
அவளைப் பார்த்து ஆவேசமாக பேசுகிறான்.
மஞ்சு அவனிடம் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

மஞ்சு எதாவது சொல்லிவிட மாட்டாளா என்ற ஏக்கத்தை ஏற்படுத்தி இந்தப் படத்தின் இயக்குநர் ஏற்படுத்தி விடுகிறார்.
யாரிடமும் எதையும் சொல்லக்கூடாது அவள் பிடிவாதமாக இருக்கிறாள்.
அந்தப் பிடிவாதம்தான் கடைசிவரை அவள் கணவனை விட்டுப் பிரியும்படி நேர்கிறது.
பொதுவாக இதுமாதிரி நிலையை திருமணம் செய்துகொண்ட ஆண்களும் பெண்களும் விரும்ப மாட்டார்கள்.
இந்தப் படம் ஒரே விஷயத்திற்குள் சுற்றி சுற்றி வருகிறது. படம் பார்க்கும் பெரும்பாலான ஆண்கள் எல்லோரும் எந்தப் பெண்ணும் தனக்கு இதுமாதிரி மனைவியாக வரக்கூடாது என்று நினைத்துக் கொள்வான். அதேபோல் சில பெண்களும் ஆணின் பிடிவாதத்திற்கு விட்டுக் கொடுக்கக் கூடாது என்று நினைத்து கொள்வார்கள். பிடிவாதத்தை மையப் படுத்துவதுதான் இந்தப்படம். தினமும் கணவன் மனைவிக்குள் பிடிவாதத்தால் சச்சரவு ஏற்படத்தான் செய்கிறது. இப்படி சின்ன சின்ன சச்சரவுகள் பூதாகரமாக போய் விடுவதுண்டு. சிதம்பரத்தின் இந்தப் படம் நல்ல உதாரணம்.
இந்தப் படத்தின் பின்னணி இசை கொஞ்சம் சங்கடப்படுத்துகிறது. வசனத்தை சில இடங்களில் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
ஒரு தீவிர சினிமாவைப் பார்க்க அளவுகடந்த பொறுமை அவசியம்.
பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் பார்த்த குடிசைப் படம் இந்தப் படத்தைப் பார்க்கும்போது ஞாபகத்திற்கு வந்தது. இந்தப் படங்கள் வந்த வேகத்தில் பார்வையாளர் கவனத்திலிருந்து மறைந்து விடும் அவலம் தொடரத்தான் செய்யும்.

இன்று இந்தப் படம் தேவி கலா, பேபி ஆல்பர்ட் தியேட்டர்களில் காலையில் காட்சிப் படுத்துகிறார்கள்.