மரப்பாச்சி பொம்மை.!/வே.கல்யாணகுமார்


மரப்பாச்சி பொம்மைக்குத் தொட்டில்கட்டி.. மடியிலே கிடத்தி அதற்குப் பாலூட்டி.. விதவிதமாய் அலங்கரித்து அழகுபார்த்து.. விளையாட கொடுத்தானே மரப்பாச்சி பொம்மை!
பிரிவறியா இளம்பருவம் பேசிமகிந்தோம் அதனுடனே.. கூட்டாஞ் சோறாக்கி ஊட்டிவிட்டோம்.. கொல்லைப்பக்கம் மணலால் வீடுகட்டி சொப்புவைத்து விளையாடக் கொடுத்தானே மரப்பாச்சி பொம்மை!
இன்றில்லை.. காட்சிப் பொருளாய்.. கண்ணாடிப் பெட்டிக்குள்.. காகிதப் புத்தகத்தில் கலைப் பொருளாய்.. மேலே பரணியில் சிதைந்த பழம்பொருளாய்.. அடையாளம் இழந்தாலும்.. அழியாமல் நினைவாகி.. அற்றைநாள் பொக்கிஷமாய் யாரோ ஒருவன் செதுக்கிவைத்து கொடுத்தான் மரப்பாச்சி பொம்மை!