மரத்தை வணங்காத செடி/ஸிந்துஜா

    அவன் அவரை எப்போதும் சற்று விரோதமாகவே பார்த்தான். அவனுக்கு அவரது அந்தக் குறிப்பிட்ட குணம் எப்போதும் எரிச்சலை மூட்டிற்று.
மனிதர்களுக்குள் எதற்கு இத்தினை பாகுபாடு என்று அவனது இளம் மனது அடிக்கடி கேள்வியை எழுப்பியது. இத்தினைக்கும் அவர்கள் இருவருக்குள்ளும் நெருங்கிய சொந்தம் இருந்தது. மாமா.மருமகன்.
அவனுக்கு வருகிற சித்திரையில் பதினான்கு  வயது முடியப்  போகிறது. அவனது மாமாவுக்கு  போன மாதம்தான் நாற்பத்து  ஐந்தாவது பிறந்த நாள் என்று வைத்தி நகர் சிவன் கோயிலில் அர்ச்சனை செய்தார்கள். அன்று காம்பவுண்டில் இருந்த அத்தினை குடும்பங்களுக்கும் அவன் மாமி  வீட்டில் செய்திருந்த சர்க்கரைப் பொங்கலையும் வடைகளையும் பாக்கட்டில் போட்டு அவனைக் கொண்டு போய்க் கொடுத்து விட்டு வரச்  சொன்னாள்.
மாமா  ஜவகர் ஸ்கூலில் எட்மாஸ்டராக இருக்கிறார். ரொம்பக் கண்டிப்புக்காரர் என்று பேர். ஸ்கூலில் படிக்கிற பையன்கள் அவரை ஸ்கூலுக்கு உள்ளேயும் வெளியேயும் நேருக்கு நேர் பார்க்கப் பயப்படுவார்கள். அவனோடு படிக்கும் ஜெபமணி "உங்க மாமா  கண்ணை நேர பாக்கறதுக்கே பயமா இருகுடா" என்று ஒருநாள் அவனிடம் சொன்னான். "நீ நேருக்க அவரைப் பாத்து பேசியிருக்கியா என்னிக்காச்சும்?" என்று இன்னொரு நாள் கேட்டான். இவன் ஜெபமணியின்  முகத்தை உற்றுப் பார்த்தான். கேலி எதுவும் தெரியவில்லை. " டேய்  ஸ்கூல்லதாண்ட அவரு எட்மாஸ்டரு. வீட்டுல எனக்கு மாமாடா"என்று சிரித்தான். ஜெபமணியும் ஆசுவாசம் அடைந்த மாதிரி சிரித்தான். ஜெபமணி அம்மாதிரி கேட்டதில் தப்பு இல்லை. ஸ்கூலுக்கு வெளியேயும் அவரை மற்றவர்கள் கண்டிப்புக்கார எட்மாஸ்டராகவே பார்த்தார்கள்.
ஒரு நாள் ஒன்பதாம் கிளாஸ் படிக்கும் கண்ணாயிரம் அவன் வீட்டருகில் மற்ற பசங்களுடன் கோலி விளையாடிக் கொண்டிருந்தான்.  அப்போது ஸ்கூலில் அரைப் பரிட்சை நடந்து கொண்டிருந்தது. அன்று அந்தத் தெரு வழியே எட்மாஸ்டரும் அவர் கூடவே தமிழ் ஆசிரியரும் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் அருகே வரும் வரை கண்ணாயிரம் கவனிக்கவில்லை.  பேந்தா போடுவதில் குறியாயிருந்தான். அவன் கூட விளையாடிக் கொண்டிருந்த காமேச்வரன்தான் அவர்களை முதலில் பார்த்தது. "டேய் எட்மாஸ்டர்டா" என்று கத்திக் கொண்டு கோலி குண்டுகளை அங்கேயே விட்டு விட்டு ஓடிப் போய் விட்டான்.
கண்ணாயிரம் சுதாரித்து நிமிர்ந்து பார்த்த போது எட்மாஸ்ட ர் அவனைப் பார்த்து கையசைத்துக் கூப்பிட்டார்.

கண்ணாயிரம் நடுங்கிக்கொண்டே அவரருகே சென்றான்.
“எத்தனாங் கிளாசுடா?” என்று கேட்டார்.
“ஒம்பதாவது சார்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கண்ணாயிரத்துக்கு டிரவுசர் நனைந்து விட்டது.
அதைப் பார்த்து அவர் “சே சே ” என்று உறுமினார். காதைத் திருகி “இதென்னடா கச்சடா விளையாட்டு? நாளைக்கு பரீட்சையை வச்சுக்கிட்டு இதுதான் உனக்கு ஸ்கூல்ல சொல்லிக் குடுத்தாங்களா?” என்று கோபமாகக் கேட்டார்.
“ஓடு ஓடு வீட்டுக்குப் போய் ஒழுங்கா படிக்கிறதை பாரு.”
மறுநாள் காலை ஸ்கூல் பிரேயர் நடக்கும் போது அவர் கண்ணாயிரத்தைக் கூப்பிட்டு பிரேயர் முடிந்ததும் கால் மணி நேரம் கிரவுண்டில் வெயிலில் மண்டி போட்டு இருக்கும்படி தண்டனை கொடுத்தார். அன்று நடந்த கணக்குப்பரிட்சையில் கண்ணாயிரம் பெயில் மார்க் வாங்கினான். அன்று பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது கண்ணாயிரம் அவனிடம் “உங்க மாமா காமேசையும்தான் பாத்தாரு.ஆனா அவனை…” என்று ஆரம்பித்து நிறுத்திக் கொண்டான்.
அதற்குப் பிறகு கண்ணாயிரம் அவனை எங்காவது சந்தித்தால் ஒரு புன்னகையுடன் ஒதுங்கிக் கொள்வான். யாரும் அவனோடு உறவை முறித்துக் கொண்டதில்லை. ஒருவேளை அவன் எட்மாஸ்டரின் மருமகன் என்பதால் இருக்கலாம். அவனது மாமாவின் இம்மாதிரி நடவடிக்கைகளை அவன் விரும்பவில்லை. ஆனால் அவனால் என்ன செய்ய முடியும்? காமேசை அவர் விட்டது எந்த விதத்தில் நியாயம்? என்று அவனுக்கும் தோன்றியது.
அவருடைய பிறந்த நாள் அன்று அவர் நடந்து கொண்டது அவனுக்குப் பிடிக்கவேயில்லை.அவனது மாமி அன்று காம்பவுண்டில் உள்ள எல்லோர் வீட்டிற்கும் இனிப்பையும் காரத்தையும் கொடுத்து அனுப்பிய வேலையை அவன் முடித்து விட்டு வரும் போது ஆண்டாளைப் பார்த்தான். ஆண்டாள் அவனை விட நாலைந்து வயது பெரியவனாக இருப்பான். கட்டுமஸ்தான உடம்பு . ஒரு தடவை தனது வலது கையை இறுக்க மடித்து இவனிடம் புஜ பலத்தைக் காட்டினான். முழங்கைக்கும் தோளுக்கும் நடுவே ஒரு பெரிய பந்து புடைத்து நின்றது.
” தொட்டு அமுக்க முடியுமான்னு நீ பாத்தே உன் கைதான் வலிக்கும். பந்து அப்பிடியே இருக்கும்” என்று ஆண்டாள் சிரித்தான். ஆசையில் இவன் தன் கையை நீட்டி அவனது தோளைத் தொடப் போனான். ஆண்டாள் வேகமாகத் தன்னைப் பின்னே நகர்த்திக் கொண்டு “அட சாமி நீயெல்லாம் தொடப் புடாது ” என்று தடுத்தான். பிறகு சுற்றுமுற்றும் பார்த்தான் யாராவது பார்த்து விட்டார்களோ என்று. அவன் ஆண்டாளிடம் “ஏன் தொடக்க கூடாது? யாரெப் பாத்து பயப்படுறே?” என்று கேட்டான். ஆண்டாள் அவசரமாக வேலை இருப்பது போல் வெளியே போனான். காம்பவுண்டுக்குள் வேலை செய்யும் சமயத்தில் கூனிக் குறுகி நடமாடுவது போல இருந்தாலும், கட்டிடத்தைத் தாண்டி வெளியில் கால் வைத்ததும் ஒரு திமிறலும் வீச்சுமாக ஆண்டாளின் நடை போகும்.
ஆண்டாள் காலையில் எட்டு மணி போல வேலைக்கு வந்து விடுவான். அவன் வேலைக்கு வராத நாட்களை விர ல் விட்டு எண்ணி விடலாம். அப்படி வராத இரண்டொரு சந்தர்ப்பத்திலும் அவனது தாயோ தம்பியோ வந்து வேலை செய்து விட்டுப் போவார்கள். முன்னால் நாலு பெரிய வீடுகளும் அவற்றுக்குப் பின்னால் இடது பக்கம் வரிசையாக நாலு சிறிய வீடுகளும் அந்தக் கட்டிடத்தில் இருந்தன. இடது பக்கக் கட்டிட வரிசைக்கு நேர் எதிரே . வலது பக்கம் ஒரு பெரிய கிணறு. ராட்டினம் போட்டு வாளி கட்டி தண்ணீர் எடுப்பார்கள்.குடியிருப்பவர்கள் குளிக்க குடிக்க எல்லாம் அந்தத் தண்ணீர்தான். கிணற்றைத் தாண்டி இடப் பக்க வீடு வரிசை போல வலப் பக்கத்தில் ஐந்து ரூம்புகள் இருந்தன.
முதல் இரண்டு ரூம்புகள் குளிப்பதற்காகக் கட்டப்பட்டவை. அதை அடுத்து இருந்த மூன்று ரூம்புகள் கழிவறைகளாக உபயோகப்படுத்தப்பட்டன. தினமும் வந்து அந்தக் கக்கூஸ்களை கழுவி சுத்தப்படுத்திவிட்டுச் செல்லும் வேலை ஆண்டாளுடையது. எவ்வளவோ முன்னேற்றம் வந்தும் பாண்டிச்சேரியில் பல இடங்களில் உள்ள வீடுகளில் இருப்பது போல இந்தக் காம்பவுண்டிலும் உள்ள கழிப்பறைகள் செப்டிக்டாங்கு இணைப்பு இல்லாதவையாக இருந்தன.
மலம் கழித்த பிறகு கழிவறையில் ஊற்றப் படும் நீரில் அவை கலந்து சிமின்ட் பாத்தி வழிகள் மூலம் பெரிய தொட்டி மாதிரி கட்டப் பட்ட இடத்தை அடையும். பிறகு அந்தக் கழிவுகள் அங்கிருந்து கட்டிட வாசல் வரைக்கும் தரை அடியில் இருந்த பெரிய குழாய்கள் மூலம் வெளியேறி தெருவில் உள்ள நகரசபையின் கழிவுநீர் அமைப்பில் போய்ச் சேரும்.
ஆண்டாள் கழிப்பறையில் ஆரம்பித்து தொட்டி வரை செல்லும் பாதையைச் சுத்தம் செய்து பிறகு தொட்டிக்குள் மலம் தங்கி விடாமல் இருக்க அதற்குள் இறங்கி சுத்தம் செய்வான். ஆண்டாள் அவன் வேலையை ஆரம்பிக்கும் போது ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் வந்து கிணற்றில் இருந்து வாளி வாளியாக நீரை மொண்டு கொட்டிக் கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் இதில் பங்கேற்கும். அவ்வாறு சுத்தம் செய்யப்படும் போது தண்ணீர் இறைத்துக் கொட்டுபவர்மூக்கின் மீது துவாலையைச் சுற்றிக் கொண்டு வேலை பார்ப்பார். எல்லா வீடுகளின் கதவுகளும் அடைக்கப் பட்டிருக்கும். குழந்தைகள்பெரியவர்கள் என்று பெரும்பாலும் யார் நடமாட்டமும் இராது. ஆண்டாள் எதோ தனிக் காட்டு ராஜா போல அவன் வேலையைச் செய்து கொண்டிருப்பான். சில சமயம் சினிமாப் பாட்டுக்கள் வேறே அவன் கூட வந்து உலவும். இவன் காலையில் ஸ்கூலுக்குப் போவதற்கு முன் டிபன் சாப்பிட்டு விட்டு தட்டில் இருக்கும் மிச்சத்தைக் கொல்லைப் புறம் ஓடும் சாக்கடையில் கொட்ட கதவைத் திறந்து கொண்டு வெளியே வரும் போது எம்.ஜி.யார் பாட்டுக்கள்காதில் விழும். கதவு திறக்கும் சத்தம் கேட்டு ஆண்டாள் திரும்பி இவனைப் பார்த்தால் சிரிப்பைச் சிந்துவான். அப்போது இவனுக்கு ஆண்டாளைப் பார்த்து பரிதாப உணர்ச்சி வரும்.
அன்று மாமி கொடுத்த தின்பண்டங்களைக் கொடுத்து விட்டுத் திரும்பி வரும் போது ஆண்டாளைப் பார்த்தான். வேலையை முடித்து விட்டு ஆண்டாள் கிளம்பிக் கொண்டிருந்தான்.
“ஏய் ஆண்டாள். ஒரு நிமிஷம் நில்லு” என்று அவனிடம் சொல்லிவிட்டு இவன் மாமியிடம் சென்றான்.
“மாமி ஆண்டாளுக்கு கொஞ்சம் பொங்கலும் வடையும் குடுங்க” என்றான்.
மாமி அவனைப் பார்த்து விட்டு மேடையில் இருந்து ஒரு இலையை எடுத்தாள் . அதில் பொங்கலையும் இரண்டு வடையையும் வைத்து பொட்டலமாக மடித்தாள்.
அப்போது அங்கு வந்த மாமா “யாருக்கு இது?” என்று கேட்டார்.
மாமி “ஆண்டாளுக்கு குடுங்கன்னு இவன் வந்து கேட்டான். அதான்” என்றாள்.
அவர் ” சரி என்கிட்டே குடு” என்று வாங்கிக் கொண்டு தான் வந்த வழியே சென்றார். இவனும் அவரைத் தொடர்ந்தான்.
வாசலில் அவரைப் பார்ப்பதற்காக வந்திருந்த ஸ்கூல் வாச்சுமேனிடம் “இத அங்க கறுப்பு டிராயர்போட்டுக்கிட்டு நிக்கிறான் பாரு. அவன்ட்ட குடு” என்று தன் கையில் இருந்ததைக் கொடுத்தார்.
இவன் “மாமா நான் கொடுக்கிறேன் மாமா” என்றான்.
அவர் அவனுக்குப் பதில் அளிக்காமல் வாச்சுமேனைப் பார்த்துக் கொண்டிருந்தார். வாச்சுமேன் ஆண்டாளின் அருகே போய் “டேய் இத பிடிச்சுக்கடா” என்று ஆண்டாளின் கையைப் பார்த்து மேலிருந்து தூக்கிப் போட்டான். ஆண்டாள் பொட்டலத்தைப் பிடித்தான். ஒரு வடை நழுவி கீழே மண்ணில் விழுந்தது. ஆண்டாள் அதைக் கையில் எடுத்து வடையில் ஒட்டியிருந்த மண்ணை ஊதித் தள்ளினான். பிறகு கையால் இருமுறை தடவி மிச்சமிருந்த மண்ணை உதிர்த்தான்.
“நான் கொண்டு போய் குடுத்திருந்தா வடை கீழே விழாம குடுத்திருப்பேன்ல” என்று குற்றம் சாட்டும் குரலில் அவன் மாமாவிடம் பேசினான்.
“உனக்கெல்லாம் எப்பிடி அவன்ட்ட கொடுக்கணும்னு தெரியாது” என்றார் மாமா.
அவன் அவரை எரிச்சலுடன் பார்த்தான்.
“நீ அவனையெல்லாம் தொடக் கூடாது” என்றார் மாமா.
“ஏன்?”
“அதெல்லாம் அப்படித்தான். நீ ஸ்கூலுக்கு கிளம்பு” என்றார்.
ஆண்டாள் வேலைக்காரன் என்பதாலா அல்லது அவன் கக்கூஸ் கழுவும் வேலை செய்கிறான் என்பதாலா எதற்காக அவர் அப்படிச் சொன்னார் என்று அவனுக்குக் குழப்பமாக இருந்தது. ஆனால் காம்பவுண்டிலிருக்கும் எல்லோரும் அதே மாதிரிதான் ஆண்டாளிடம் நடந்துகொள்கிறார்கள் என்று அவனுக்குத் தோன்றியது.
திடீரென்று ஒரு நாள் ஆண்டாள் வரவில்லை.
அன்று ஞாயிற்றுக்கிழமை. அவனுக்குப் பதிலாக வரும் அவன் அம்மாவோ தம்பியோ கூட தலை காட்டவில்லை. மாமா டென்ஷனாகி விட்டார். ஒன்பது மணி வரை யாரும் வரவில்லையே என்று. மற்ற குடித்தனக்காரர்களும் ஒருவருக்கொருவர் விசாரித்துக் கொண்டு வந்தனர். பத்து மணிக்கு ஆண்டாளின் எதிர் வீட்டுக்காரன் என்று சொல்லிக் கொண்டு ஒருவன் வேலை செய்ய வந்தான்.
“ஆண்டாளு எங்கடே ?’ என்று மாமா கேட்டார்.
“அவெனுக்கு கல்லாணம்” என்றான் வந்தவன். “நானும் வேகமா வேலய முடிச்சிட்டு போகோணும். விருந்து இருக்கில்லே?” என்று சிரித்தான்.
மாமாவுக்கும் அவருடன் நின்று கொண்டிருந்த பலருக்கும் ஆச்சரியம் தாங்கவில்லை.
“எங்கடே கல்யாணம்?” என்று மாமா கேட்டார்.
“ஐயனார் கோயில்ல வெச்சுதான்” என்றான்.
அங்கிருந்த எல்லோரும் பரபரப்பாக இருந்தார்கள்.
“யார்ரா பொண்ணு?” என்று மாமா கேட்டார்..
“அவென் அக்கா மகதான்.”
“அடி சக்கை” என்று சிரித்தார் இவனது பக்கத்து வீட்டில் இருந்த வேலு மாமா.
“நாளைக்கும் நீதான் வருவியா?” என்று மாமா கேட்டார்.
“இல்ல சாமி. அவென் வருவேன்னிருக்கான்” என்றான் வந்தவன். பிறகு வேலையைப் பார்க்கச் சென்றான். எல்லோரும் சற்று நேரம் ஆண்டாளின் கல்யாணத்தைப் பற்றி பேசிச் சிரித்து கொண்டிருந்து விட்டுக் கலைந்து போனார்கள்.
மறுநாள் ஆண்டாள் வந்த போது அவன் மனைவியையும் கூட்டிக் கொண்டு வந்தான். அன்று குடியரசு தினம் என்று விடுமுறை நாளாயிருந்ததால் முக்கால்வாசிப் பேர் வீட்டில்தான் இருந்தார்கள். அவன் ஒவ்வொரு வீட்டுக்கும் போன போது பணம் வைத்துக் கொடுத்தார்கள். இவன் வீட்டுக்கு வந்த போது மாமாதான் கதவைத் திறந்தார். ஆண்டாளையும் அவன் மனைவியையும் பார்த்து ” வாங்க புது ஜோடி. என்னடா யாருக்கும் சொல்லாம கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டே?” என்று கேட்டார். இருவரும் வெட்கத்தில் கோணி நாணினார்கள்.மாமியும் வந்த போது இருவரும் வணங்கினார்கள். மாமா ஜேபியிலிருந்து இரண்டு அம்பது ரூபாய் நோட்டை எடுத்து ஆண்டாள் கையிலும் அவன் மனைவி கையிலும் தூக்கிப் போட்டதை இவன் பார்த்தான்.
ஆண்டாள் மனைவி ரொம்ப அழகாய் இருந்தாள் என்று இவன் நினைத்தான். ஆண்டாளின் கறுப்பு நிறத்துக்கு நேர் எதிராக அவள் சிவப்பாய் இருந்தாள். அவர்கள் போன பின்பு மாமா மாமியிடம்” சினிமா ஸ்டார் மாதிரி இருக்கால்ல?’ என்று சிரித்தார். மாமி சிரிக்கவில்லை.
சற்றுக் கழித்து இவன் கட்டுரை எழுத வெள்ளைப் பேப்பரைத் தேடி மாமாவின் அறைக்குப் போனான். ஒரு சமயம் அவர் படுத்து ரெஸ்ட் எடுத்துக் கொண்டு இருக்கலாம் என்று கதவைச் சத்தமில்லாமல் திறந்து உள்ளே நுழைந்தான். மாமா ஜன்னல் அருகே நின்று வெளியே பார்த்துக் கொண்டிருந்தார். அவன் இரண்டு நிமிஷங்கள் தயங்கி நின்றான். மாமா அவன் வந்ததைக் கவனிக்கவில்லை. அவனுக்கு
அவர் அப்படி என்ன பார்க்கிறார் என்று ஆச்சரியமாக இருந்தது.மாமாவின் அறைக்கு அடுத்ததுதான் அவனது அறை. அவன் அங்கிருந்து தன்னறைக்குச்சென்று ஜன்னல் வழியே வெளியே பார்த்தான்.
காம்பவுண்டுக்குள் இருந்த வேப்ப மரத்தின் அடியில் தனது வலது கையைத் தலைக்கு அணையாக வைத்துக் கொண்டு ஆண்டாளின் மனைவி படுத்திருந்தாள்.
அவன் அறையிலிருந்து வெளியே வந்து மாமாவின் அறையைக் கடக்கும் போது உள்ளே எட்டிப் பார்த்தான். அவர் இன்னும் அங்கேயே நின்று கொண்டிருந்தார்.
அவன் மறுபடியும் தன் அறைக்குச் சென்றான். மேஜை டிராயரைத் திறந்து உள்ளே இருந்த பர்ஸிலிருந்து ஒரு பத்து ரூபாய்த் தாளை எடுத்தான். பிறகு வாசலை நோக்கிச்சென்றான். அப்போது ஆண்டாள் அவன் மனைவியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தான்.
அவன் “ஆண்டாளு!” என்று கூப்பிட்டுக் கொண்டே வேப்ப மரத்தை அடைந்தான்.
“என்னா சாமி?” என்று ஆண்டாள் திரும்பி நின்று அவனைப் பார்த்தான்.
அவன் ஆண்டாள் அருகே சென்றான். ஓரக் கண்ணால் பார்த்த போது மாமா ஜன்னல் அருகே இன்னும் நின்று கொண்டே இருப்பது தெரிந்தது.
அவன் ஆண்டாளின் கையைப் பிடித்து அதன் மேல் பத்து ரூபாயை வைத்து “உன் கல்யாணத்துக்கு என்னோட பரிசு” என்று சிரித்தான்.
ஆண்டாள் பதறிப் போய்க் கையை இழுத்துக் கொள்ள முயன்றான். இவன் பிடியை விடாது ஆண்டாளின் கை மீது பணத்தை அழுத்திக் கொண்டு தன் வீட்டுப் பக்கம் முழு உடம்பையும் திருப்பி மாமாவைப் பார்த்தான்.
ஜன்னல் கதவு படீரென்று சார்த்திக்கொண்டது.

விருட்சம் 102 – வது இதழ் – மே 2017

2 Comments on “மரத்தை வணங்காத செடி/ஸிந்துஜா”

  1. இப்படி்பட்ட செடிகள் மரமானால் எல்லோரும் வணங்குவார்கள். அருமை அருமை

Comments are closed.