வே.கல்யாணகுமார்

இருட்டு வானத்தில் ஔிரும் நட்சத்திரப் பூக்ளாய்..
இறுக்கமான முகத்துக்குள் புன்னகை மத்தாப்புகளை
ஔிர விடுவோம்!
முகம் தெரியா இரவெல்லாம்.. உழைத்து ஓடாகிப்
போனவரின் இனிப்புகளை விருந்தாக்கி.. அந்த
சட்டையில்லா குழந்தைக்கு ஒரு ஓலைவெடி கையில்
தருவோம்! ஒற்றையாடை புத்தாடை நாமும் பகிர்வோம்!
வயல் வரப்புகளில் குத்திய முட்களை ஒடித்து எறிந்து
விட்டு.. கஞ்சிக்களையம் சுமக்கும் பெண்களுக்கு
புன்னகை பூக்களை பரிசளிப்போம்.
சாலையோரம் படுத்திருக்கும் சகோதரனுக்கு.
சகோதரிக்கு.. ஒருவேளை வயிறாற உண்டி கொடுத்து
உயிர்த் தரிப்போம்!
பெரியோர்களின் பாதங்களைத் தொட்டு பணிந்து
வணங்கி.. பாதைகாட்ட வேண்டுமென்போம்!
டாஸ்மார்க்கே கதியென்று இருக்கின்ற இளைஞர்களை..
பாஸ்மார்க்கு வாங்க வைத்து பாடம் நாம் எடுப்போம்..
நிலம் திருத்தி.. மனம் திருத்தி நல் விளைச்சல் காண்போம்!
நகைக் கூடாமல்.. நாதியற்ற குடிசைப்புறம் கூடிநின்று..
ஒன்றும் இல்லாதோர்க்கு ஒரு நகைத் தருவோம்..
புன்னகையை மலர வைப்போம்!
இனிப்புகளை வாழ்க்கையிலே காணாத அனாதை
இல்லங்களில்.. முதியோர் இல்லங்களில்.. முழுமனதோடு
கூடி கொண்டாடி அன்புத் தீப ஔி ஏற்றுவோமா!
