மேதகு ஆளுநர் மாளிகையில் கலைமகள் விழா/ஜெ.பாஸ்கரன்

ஜூலை 29, 2023 காலை 11 மணிக்குத் தமிழ்நாடு மேதகு ஆளுநர் மாளிகையில் 1100 வது கலைமகள் இதழ் மற்றும் ‘சுதந்திரமும் முத்தமிழும்’ -ஆசிரியர் திரு கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் – புத்தகமும் வெளியிடப்பட்டன. புத்தகம் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கியவர் தமிழ்நாடு மேதகு ஆளுநர் திரு R.N.Ravi அவர்கள். ஆளுநர் மாளிகையின் எழில்மிகு ‘தர்பார்’ அரங்கில், அமைதியாகவும், நேரப்படியும், அழகாகவும் சிறப்பாக நடந்தேறியது புத்தக வெளியீட்டு விழா.

நான் ஆளுநர் மாளிகைக்குள் சென்றதில்லை. முதல் முறையாக இந்த விழாவிற்காகச் சென்றபொழுது, அங்கு இருந்த செக்யூரிடி மற்றும் அலுவலக ஊழியர்கள் வருகின்ற விருந்தினர்களை வரவேற்ற விதமும், அரங்கத்திற்குள் அழைத்துச் சென்ற விதமும் வியக்க வைத்தன. அவ்வளவு மரியாதையும், அன்பும் கூடிய வரவேற்பு. மெலிதான நாதஸ்வர இசையுடன் குளிருட்டப்பட்ட அரங்கில் இரண்டு பக்கமும் இருக்கைகள். அலங்கரிக்கப்பட்ட மேடையில் மூன்று இருக்கைகள். விழா குறித்த வெண்மை நிற போஸ்டரில், கருநீல வண்ண எழுத்துக்கள் அன்றைய விழாவினைத் தெரிவித்துக் கொண்டிருந்தன.

கீழாம்பூர் அவர்களும், பதிப்பாளர் ராஜன் அவர்களும், இரு கரம் கூப்பி வந்தவர்களை வரவேற்ற வண்ணம் இருந்தனர். ஒரு மங்களகரமான நிகழ்ச்சியின் துவக்கமாக வந்திருந்தவர்களின் மகிழ்ச்சியும், உரையாடல்களும் அமைந்திருந்தன. சரியாக 11.05 மணிக்கு, ஆளுநர் அரங்கத்துக்குள் நுழைய, அரங்கம் ஆவலுடன், அமைதியானது!

இணைப்புரைத் திலகம், கலைமாமணி சந்திரமோகன் தனது இயல்பான நடையில் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். அரசு விழாக்களின் ப்ரோட்டகால் – வரைமுறை – படி, முதலில் தேசீய கீதமும், பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டன, பாடியவர் வைஷ்ணவி ராம்தாஸ் அவர்களும், அரங்கில் இருந்த விருந்தினர்கள் அனைவரும்! அடுத்து திரு அநிருத் அவர்கள் ‘பாருக்குள்ளே நல்ல நாடு’ மகாகவியின் பாடலை ஜோன்புரி ராகத்தில், தேசப்பற்று பொங்கி வழியப் பாடியது சிறப்பு. பாரதி என்னும் தீர்க்கதரிசியின் பாடலில்தான் எவ்வளவு நம்பிக்கையும் நாட்டுப்பற்றும்!

விழாவின் தொடக்கமாக ஆளுயரக் குத்துவிளக்கினை ஏற்றியவர்கள், மேதக ஆளுநர், திருமதி சரசா சங்கரசுப்ரமணியன், திருமதி லலிதா சுரேஷ்குமார், டாக்டர் திருமதி ஜாய்ஸ் திலகம் மற்றும் கீழாம்பூர். விழா மேடை விளக்கொளியுடன் மங்களகரமான மேடையாக மாறி ஒளிர்ந்தது.

வரவேற்புரை வழங்கியவர் பேராசிரியர் ரகுநாதன் அவர்கள். ஆளுநர், கலைமகள் ஆசிரியர், பதிப்பாளர், வந்திருந்த விருந்தினர் அனைவரையும் மிகச் சிறப்பாக வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து கலைமகள் சார்பில் மேதகு ஆளுநர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. அடுத்து, திரு கீழாம்பூர் எழுதியுள்ள ‘சுதந்திரமும் முத்தமிழும்’ புத்தகத்தை மேதகு ஆளுநர் வெளியிட, கீழாம்பூர், ராஜன் மற்றும் ஆர் சங்கரநாராயணன், பேரா.சுந்தரம், என் விஜயராகவன், ஆர் சிவக்குமார், ஆடிட்டர் ஜெ.பாலசுப்ரமணியன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அதனையடுத்து, பாரம்பரியம் மிக்க கலைமகளின் 1100 வது இதழை மேதகு ஆளுநர் வெளியிட, நீதி அரசர் ராமநாதன், ஜெ.குமார், டாக்டர் ஜெ.பாஸ்கரன், ஏ.மோகன், சுதர்சன் ராமபத்ரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

மேதகு ஆளுநர் தன் உரையில் சுதந்திரத்திற்கு முன்பும், அதற்குப் பின்பும் இருந்த இந்தியாவைப் பற்றிக் குறிப்பிட்டார். இந்தியாவின் ஒரு மூலையில் நடக்கும் எந்தப் பிரிவினை வாதமோ, கலவரங்களோ எதுவானாலும், இந்தியா முழுவதும் அதற்கு எதிர்வினையற்றும் தேசப்பற்றும், ஒற்றுமையும் இருந்ததைக் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள், பாடுபட்டவர்கள் பலரை மக்கள் அறியவில்லை. சரித்திரத்தில் அவர்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளார்கள் என்றவர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒத்துழைப்பில், மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். தன் உயிரையும் கொடுத்து சுதந்திரம் வாங்கித் தந்தவர்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ளாதது வருந்தத்தக்கது. 1905ல் வங்கப் பிரிவினை போது, வ.உ.சி. அவர்கள் இங்கிருந்து குரல் கொடுத்ததைக் குறிப்பிட்டவர், சுதந்திரத்திற்குப் பிறகு அத்தகைய தேசீய சிந்தனையுடன் குரல்கள் எழுப்பப்படாதமைக்கு வருந்தினார். வியாபாரம் செய்ய வந்தவர்கள், நம் மொழி, கலாச்சாரம், கல்வி அனைத்தையும் மாற்றி, வரலாற்றையும் மாற்றி எழுதிவிட்டனர். ஆங்கிலம் மட்டுமே சிறந்த மொழி என்ற பிம்பத்தை ஏற்படுத்திவிட்டனர். அந்தக் காலக் கட்டத்திலிருந்து, தமிழுக்காகவே ஒரு பத்திரிகையாக கலைமகள் இருந்ததைப் பாராட்டினார். தேசீய விடுதலை, பாரத தேசக் கலாச்சாரம் மற்றும் தமிழ் இலக்கியம் ஆகியவற்றுக்குக் கலைமகள் ஆற்றிய பணியைப் பாராட்டினார். இந்தியா என்பது ஒரு பாரம்பரியம், என்றும் நிலைத்திருப்பது – இன்றைய இளைஞன் இந்தியாவின் உண்மை வரலாற்றினைத் தெரிந்துகொள்ள வேண்டும், அதன் ஒற்றுமைக்குத் தன்னை அர்ப்பணிக்க வேண்டும். அதுவே இன்றைய தேவை என்றார். மேதகு ஆளுநர் உரையில் தொனித்த நாட்டுப்பற்றும், நம் ஒற்றுமைக்கான அவசியமும் மிகவும் எழுச்சி அளிப்பதாக இருந்தது.

ஏற்புரை வழங்க வந்த கலைமகள் ஆசிரியர், மூன்று முறை கலைமகள் பதிப்பகப் புத்தகங்கள் ஆளுநர் மாளிகையில் வெளியிடப்பட்டதைப் பெருமையுடன் நினைவு கூர்ந்தார். கலைமகள் தனது பாதையில் சிறிதும் வழுவாமல், திரு உ.வே.சா., திரு கி.வா.ஜ. ஆகியோர் அமைத்துக்கொடுத்த பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது. அதற்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் நன்றி கூறினார். வழக்கம்போல, குறிப்பொன்றுமில்லாத சுவாரஸ்யமான உரை!

மேதகு ஆளுநருக்கும், வந்திருந்த அனைவருக்கும் மற்றும் ஆளுநர் மாளிகை சிப்பந்திகள் அனைவருக்கும் நன்றி கூறினார் திரு சந்திரமோகன் (முதலில் தமிழிலும், உடனே அதன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் கூறி விழாவை நடத்திச் சென்ற சந்திரமோகன் பாராட்டுக்குரியவர்!).

தேசீய கீதம் பாடிய பிறகு, சிற்றுண்டி வழங்கப்பட்டது.

1100 இதழ்கள் – நூற்றாண்டை நோக்கிப் பயனிக்கும் கலைமகளின் மணிமகுடத்தில் மற்றுமோர் வைரக்கல் இந்த விழா என்றால் அது சற்றும் மிகையில்லை!

.