ஆசாரக் கோவை 41—45/வளவ. துரையன்

பாடல் 41 : செய்வன தவிர்வன சில
கண்ணெச்சில் கண்ணூட்டார்; காலொடு கால்தேயார்;
புண்ணிய மாய தலையோ டுறுப்புறுத்த,
நுண்ணிய நூலறிவி னார்.

பொருள் :
அறநூல்களின் நுணுக்கங்களை அறிந்தவர், பிறர் கண்ணுக்கு மை தீட்டிய கோலை (குச்சியை) சுத்தம் செய்யாமல் தான் பயன்படுத்த மாட்டார். காலோடு கால் தேய்த்துக் கால்கழுவமாட்டார். புனிதமான பொருட்கள் (கோவில் பிரசாதம் போன்றவை) கிடைத்தால் தலையிலும் கண்களிலும் ஒற்றிக்கொள்வார்.

பாடல் 42 : மனைவியைப் பிரியக்கூடாத காலம்

தீண்டாநாள் முந்தாளும் நோக்கார்; நீராடியபின்
ஈராறு நாளும் இகவற்க என்பதே
பேரறி வாளர் துணிவு .

பொருள் :
மனைவிக்கு மாதத்தீட்டு நிகழ்ந்தால் மூன்று நாளளவும் அவரை நெருங்கலாகாது; நீராடியபின் 12 நாட்கள் அவரைவிட்டுப் பிரியலாகாது என்பது இல்லறம் அறிந்த சிறந்த அறிவு படைத்தவர் முடிவு.

பாடல் 43 : கூடக்கூடாத நாட்கள்

உச்சியம் போழ்தோ டிடையாமம் ஈரந்தி
மிக்க இருதேவர் நாளோடு (உ)வாத்திதிநாள்
அட்டமியும் ஏனைப் பிறந்தநாள் இவ்வனைத்தும்
ஒட்டார் உடனுறைவின் கண்.

பொருள் :
நடுப்பகலிலும் நள்ளிரவிலும் காலையிலும் மாலையிலும் திருவாதிரையிலும் திருவோணத்திலும் அமாவாசை பௌர்ணமியிலும் அஷ்டமியிலும் தாம் பிறந்தநாளிலும் தம்துணையோடு உடனுறைதலில் நல்லார் உடன்படார்.

பாடல் 44 : தவிர்வன சில

நாழி மணைமேல் இரியார் மணைகவிழார்
கோடி கடையுள் விரியார் கடைத்தலை
ஓராது கட்டிற் படாஅர். அறியாதார்
தந்தலைக்கண் நில்லா விடல்.

பொருள் :
அளக்கின்ற படியை அமர்கின்ற மணை மேல் வைக்க மாட்டார்; மணையை கவிழ்த்து வைக்க மாட்டார்; புதுத்துணியை தலைக்கடையில் (வீட்டின் வரவேற்பறையில்) விரிக்க மாட்டார்; (பலரும் வந்து செல்லும்) வரவேற்பறையில் கட்டிலிட்டு படுக்க மாட்டார் தம்மை அறியார் முன் (அதிக நேரம்) நிற்கமாட்டார்.

பாடல் 45 : திருமணப் பந்தலின் கீழ் பரப்பலாகாதவை

துடைப்பம் துகட்காடு புல்லிதழ்ச் செத்தற்
கருங்கலம் கட்டில் கிழிந்ததனோ டைந்தும்
பரப்பற்க பந்த ரகத்து.

பொருள் :
துடைப்பம், குப்பை, பூவின் தனித்தஇதழ்கள், பழைய கரிப்பானை, கிழிந்தகட்டில்(பாய்) இவைகளை மணப்பந்தலில் பரப்பலாகாது.