சகுனம் யாருக்கு?/புவனா சந்திரசேகரன்

 
“என்னம்மா ரெடியா? கிளம்பலாமா?”

“இதோ வந்து விட்டேன்.”

“ஃபைல் எல்லாம் எடுத்து வைச்சாச்சா?”

“எல்லாம் ஒரு தடவை சரி பார்த்துடறேன் இருங்கோ. ஓகே, எல்லாம் இருக்கு. போலாம்.”

சிவநேசனும் விஜயாவும் மருத்துவமனைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். கால் டாக்ஸியைக் கூப்பிட்டு அவன் வந்து காத்துக் கொண்டிருந்தான்.

விஜயாவிற்கு அறுபது வயது இந்த வருடம் நிரம்புகிறது. போன வாரம் சின்னதாக ஒரு பிரச்சினை. எதற்கும் மருத்துவரிடம் கேட்டு விடலாம் என்று அந்தப் புகழ் பெற்ற மருத்துவமனையின் அந்தப் புகழ் பெற்ற பெண்
மருத்துவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிப் பார்த்து விட்டு வந்தார்கள்.

எதுவும் உதாசீனம் பண்ணக் கூடாது என்று எல்லா டெஸ்ட்டுகளும் எடுத்துப் பார்த்து ஒன்றும் ப்ரச்னை இல்லையென்று வந்து விட்டது. இருந்தாலும் ஒரு நாள் அட்மிட் ஆகி,டி அன்ட் ஸி செய்து யூட்ரஸில் இருந்த சிறிய கட்டி ஒன்றை ஸர்ஜரி மூலம் அகற்றி பயாப்ஸிக்கு அனுப்பி இருந்தார்கள். பயாப்ஸி ரிபோர்ட் மட்டும் ஒரு வாரம் கழித்து வரும் என்று சொன்னதால் அதை வாங்கி டாக்டரிடம் காண்பிக்க இன்று மருத்துவமனை விஜயம்.

பயாப்ஸி என்று சொன்னதிலிருந்து மனதில் ஒரு கலக்கம். பயம். யாராக இருந்தாலும் அப்படித்தான் இருக்கும். கேன்சர் மட்டும் அப்படிப்பட்ட வியாதியாக இருக்கிறது. அதுவும் விஜயாவின் உயிர்த் தோழி ஒருத்தி கேன்ஸரால் பட்ட கஷ்டங்களை எல்லாம் அவள் நேரிலே பார்த்திருப்பதால் இன்னும் கொஞ்சம் பயம்.

தினம் கண்ணை மூடினால் கெட்ட கனவு தான். ஒரு வாரமாகத் தூங்கவேயில்லை.
ஒரு வழியாகக் கடவுளையெல்லாம் வேண்டிக் கொண்டு கிளம்பி விட்டாள். அவர்கள் வீடு முதல் மாடி. படிகளில் இறங்கிக் கீழே வந்தார்கள். சரியாகக் கடைசிப் படியில் இருந்து காலை வெளியே வைக்கும் போது ஒரு கறுப்புப் பூனை “மியாவ் ” என்று கத்திக் கொண்டு குறுக்கே போனது. கலங்கிப் போய் விட்டாள் விஜயா.

“என்னங்க. சகுனமே சரியில்லை. நாளைக்குப் போய்க்கலாம்”.

“அதெல்லாம் ஒன்றும் இல்லை. போகலாம் வா. நாளைக்கு எனக்கு முக்கியமான வேலை இருக்கு.”

“பின்ன கொஞ்சம் நேரம் கழிச்சுப் போலாமா? வீட்டுக்குப் போய்க் கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டுப் போலாமா?”

“அது எப்படிம்மா? கால் டாக்ஸிக் காரன் சும்மா விடமாட்டான். சீக்கிரம் வா. ஏற்கனவே நேரமாச்சு.”

டாக்ஸி டிரைவர் வேறு பொறுமையே
இல்லாமல் திரும்பத் திரும்ப ஹார்ன் அடிக்க விஜயா சுணங்கிய முகத்துடன் டாக்ஸியில் ஏறினாள். மனசுக்குள் கந்தர்
ஷஷ்டி கவசம், அனுமான் சாலிஸா எல்லாம் சொல்லிக் கொண்டே ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தாள்.
டாக்ஸியை அனுப்பி விட்டு உள்ளே சென்று டோக்கன் வாங்கினார்கள்.

“சரி நீ வெயிட்டிங் ஏரியாவில் போய் உட்கார்ந்து இரு. நான் போய் லேபில் ரிப்போர்ட் வாங்கிட்டு வந்துடறேன்.”

விஜயா நல்ல டென்ஷனில் காத்துக் கொண்டு இருந்தாள். ரிப்போர்ட்டை எடுத்துக் கொண்டு டாக்டரைப் பார்க்க வேண்டும்.

  சிவநேசன் ரிப்போர்ட் வாங்கிக் கொண்டு வருவதற்குள் இவளது டோக்கனும் பெயரும் சொல்லிக் கூப்பிடப்பட்டது. விஜயா சென்று வெளியே இருந்த நர்ஸிடம் தனது கணவர் ரிப்போர்ட் வாங்கப் போயிருப்பது பற்றிச் சொன்னாள்.

“அவர் வந்தால் நான் உள்ளே அனுப்புகிறேன். நீங்கள் உள்ளே போங்கம்மா.”

மனசே இல்லாமல் உள்ளே சென்றாள். டாக்டர் கிரண் ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார். இவளைப் பார்த்துக் கை காண்பித்து உட்காரச் சொல்கையில் நல்ல வேளை சிவநேசன் உள்ளே வந்துவிட்டார். ரிப்போர்ட்டை டாக்டரிடம் நீட்ட, டாக்டர் வாங்கிப் பார்த்தார். பொறுமையேயில்லை விஜயாவிற்கு. கறுப்புப் பூனை திரும்பத் திரும்ப மனதில் சடுகுடு ஆடிக் கொண்டு இருந்தது. ஒருவழியாக டாக்டர் தலையைத் தூக்கி அவளைப் பார்த்து ,

“ஸோ  நான் எதிர்பார்த்த படி டெஸ்ட் நெகடிவ் தான். உங்களுக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லை.  சாதாரணமாக இந்த வயதில் வரக்கூடிய ப்ரச்னை தான். எதற்கும் உதாசீனப் படுத்தக் கூடாது என்பதால் இந்த டெஸ்ட் எல்லாம் எடுத்தோம். கொஞ்ச நாட்களுக்கு மல்டி விடமின் மாத்திரை மட்டும் சாப்பிடுங்கள். ஆறு மாதம் கழித்துத் திரும்ப ஒரு தடவை அல்ட்ரா ஸௌண்ட் டெஸ்ட் மட்டும் எடுத்தால் போதும்.”

விஜயாவின் காதில் தேன் வந்து பாய, அந்த டாக்டருக்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்ய மனது துடித்தது. உணர்வுகளை அடக்கிக் கொண்டு முக மலர்ச்சியுடன் வெளியே வந்தாள்.

“என்னங்க. ஒரு வாரமா டென்ஷன். இப்பத்தான் நிம்மதியாக இருக்கிறது.”

“நேற்று இரவே ரிப்போர்ட் ஈ மெயிலில் வந்ததே? ஓ,நான் நான் உன்னிடம் சொல்லவே மறந்து போய்ட்டேனா?”

விறுவிறுவென்று கோபம் தலைக்கு ஏற
விஜயா தன் கணவரைச் சுட்டெரிப்பது போல் பார்த்தாள். ஆண்களைப் பொறுத்தவரை அரசியல், கிரிக்கெட். ஃபுட்பால் போன்ற அதிமுக்கியமான விஷயங்களின் முன்னால் இந்த மாதிரி வீட்டு விஷயங்கள் முக்கியத்துவம் இழந்து விடுகின்றன.

வீடு வந்து சேர்ந்தார்கள். வீட்டுக்கு எதிரே ரோட்டோரமாக அந்தக் கறுப்புப் பூனை காரில் அடிபட்டு இறந்து கிடந்தது. விஜயாவின் மனம் கலங்கி விட்டது. கண்களில் கண்ணீர் பெருகியது.

“அடாடா  இந்தப் பூனை குறுக்கே வந்தது சகுனத்தடை என்று அதிகமாகத் திட்டி விட்டேனோ? இப்படி உயிரை விட்டு சலனமில்லாமல் கிடக்கிறதே? என்னுடைய கெட்ட நேரத்தைத் தான் வாங்கிக் கொண்டு விட்டதோ!”

மனதில் குற்ற உணர்ச்சியுடன் தவித்தாள் விஜயா. அவளை ஆறுதலாகப் பார்த்த சிவநேசன் அவளது கரங்களைப் பிடித்து அங்கிருந்து கூட்டிப் போனார். போவதற்கு முன்னால் தனது சட்டைப் பையிலிருந்து சிறிது பணம் எடுத்து வாட்ச்மேனிடம் கொடுத்து அந்தப் பூனையை சரியான இடமாகப் பார்த்துப் புதைக்கச் சொல்லி விட்டுச் சென்றார்.

           விஜயாவின் மனதை விட்டு அந்தப் பூனையின் பிம்பம் அகல நிறைய நாட்கள் எடுத்தன.

One Comment on “சகுனம் யாருக்கு?/புவனா சந்திரசேகரன்”

Comments are closed.