ஒரு துப்பறியும் கதையை…./வாசுதேவன்

ஒரு துப்பறியும் கதையை கலையாக மாற்றியவர் உம்பர்ட்டோ ஈகோ. அவருடைய Magnum Opus நாவல் The Name of the Rose பலமுறை வாசித்தாலும் அலுக்காது. 13ம் நூற்றாண்டில் இத்தாலியின் ஒரு ஒதுக்குப்புறமான கிராமத்தில் அமைந்திருக்கும் கிறிஸ்துவ மடாலயத்தில் அடிக்கடி கொலை விழுகிறது. இதை கண்டுபிடிக்க கிறிஸ்துவ துறவி (ஷான் கான்ரே) வருகிறார். கொலைகள் நிற்கவில்லை. மடாலய நூலகத்தில் குறிப்பிட்ட நூலை தேடி வாசிக்கிறவர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். அரிஸ்டாட்டலின் Poetics மூத்த துறவிக்கு விருப்பமில்லை. மிகவும் கட்டுக்கோப்பான கிறிஸ்துவ சடங்குகளை பின்பற்றும் மூத்த துறவிக்கு அரிஸ்டாட்டில் முன் வைக்கும் அழகியல், நகைச்சுவை கசக்கிறது. கெட்டியான காகித ஓரத்தில் விஷத்தை தடவி வைக்கிறார். வாசிக்கிறவர்கள் அடுத்தப் பக்கத்தை புரட்டும்போது கை விரலில் விஷம் பட்டு இறக்கிறார்கள். ஈகோவுக்கு விருப்பமான எழுத்தாளர் போர்ஹெஸ் பெயரை வில்லன் மூத்த துறவிக்கு சூட்டினார். ஆனால் இந்த நாவலில் ஈகோ பயின்ற 13ம் நூற்றாண்டு கிறிஸ்துவ சடங்குகள் (Apostolic Brethren , Dulcinians, Seven Trumpets ) மந்திரங்கள், பழக்கவழக்கங்கள், மொழி, வாழ்வியல் பிரமிக்க வைக்கும். இந்த நாவலை எழுத ஏறத்தாழ 10 வருடங்கள் உழைத்து நூற்றுக்கணக்கான மத்திய கால ஐரோப்பிய கிறிஸ்துவ வரலாற்று நூல்களை வாசித்துள்ளார். இவ்வளவு கடுமையாக உழைத்தும் சில இடங்களில் சறுக்கியுள்ளார். பல விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். நாவலில் மடாலயத்தில் பகிரப்படும் உணவில் Pepper இருப்பதை குறிப்பிட்டுள்ளார். Pepper 16ம் நூற்றாண்டுக்கு பிறகுதான் ஐரோப்பாவில் அறிமுகமானது. நேரத்தை குறிப்பிட Seconds என்ற அளவை பயின்றதும் தவறு. பின்னாளில்தான் அறிமுகமானது. இது திரைப்படமாகவும் வெளிவந்தது. ழாக் அனாட் இயக்கத்தில் வெளிவந்தது. அபாரமான படம். எவ்வாறாயினும் இருபதாம் நூற்றாண்டின் அதிமுக்கிய நாவல்.