டாக்டர் வள்ளுவர்/டாக்டர் முருகுசுந்தரம்

  1. மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
    சொற்கேட்டல் இன்னும் செவிக்கு

கள்ளமில்லா உள்ளத்தோடு குழந்தைகள் நம் உடல் மீது தவழ்ந்து
ஏறிக் குதித்து, மிதித்து, உதைத்து விளையாடுவதும், அவர்கள் பேசும்
மழலையும், நம் உடல், மனம் இரண்டையும் நெகிழ வைத்து,
மகிழ்விக்கும் அருமருந்து போன்றவை. நம் மனச் சோர்வையும்
உடல் களைப்பையும் போக்கி நோய்களைத் தடுத்து உடலுக்கு
இன்பம் தருவது இதுவே.
பசு தன் கன்றினை நாவால் நக்கி வளர்ப்பது போல, பறவைகள் தம்
குஞ்சுகளை சிறகுகளின் கதகதப்புக்குள் வைத்து அரவணைப்பது
போல, காட்டு விலங்குகளும் தம் குட்டிகளைக் கொஞ்சி மகிழ்வது
போல, நாமும் நம் குழந்தைகளை ஆரத்தழுவிக் கட்டிப் பிடித்து,
உச்சி முகர்ந்து, கொஞ்சி மகிழ்ந்து, அன்பு செலுத்துவது நம் உடல்
மற்றும் மன நலத்துக்கு உகந்தது. வாழ்வின் நுணுக்கங்கள்
அனைத்தையும் நுட்பமாக அறிந்த அறிவுப் பேராசான் வளளுவர்,
மக்கள் என்று இங்கு குறிப்பிடுவது நாம் பெற்ற குழந்தைகள்
மட்டுமல்ல, அன்புக்கு ஏங்கும் அனைத்து மக்களுமே என்பது என் 25
ஆண்டு கால மருத்துவ அனுபவத்தில் நான் உணர்ந்த உண்மை. தன்
வாழ்க்கைத் துணையும், தான் பெற்ற குழந்தைகளும் கூட பல
ஆண்டுகளாகத் தீண்ட அஞ்சிய, அருவருக்கத்தக்க தோற்றம் உடைய
தோல் நோயர்கள், ஒரு மருத்துவராக, நான் தொட்டுத் தீண்டி, இது
ஒன்றும் தொற்று நோயல்ல என்று அவர்களைக் கட்டித் தழுவும்
போது, நெகிழ்ந்து நெக்குருகி, கரைந்து, கதறி அழுது விரைவில்
குணமடைவதைக் கண்கூடாக அறிந்தவன் நான்.

மருந்துகளால் செய்ய முடியாத பிணிதீர்க்கும் மகத்துவம், மக்கள்
மெய் தீண்டல் தரும் மன ஆறுதலால் சாத்தியமாகும், என்பது
மாமேதை வள்ளுவர் அன்றே சொன்ன, இன்றும் மறுக்க முடியாத
மருத்துவ உண்மை…

EMBRACING WITH AFFECTIONATE LOVE
ENCHANTS & HEALS THE BODY, MIND & SOUL

One Comment on “டாக்டர் வள்ளுவர்/டாக்டர் முருகுசுந்தரம்”

Comments are closed.