தில்லைக்கூத்தன் சன்னதியில் ‘பீமரத சாந்தி’!/ஜெ.பாஸ்கரன்

இந்து தர்மத்தில் வயதிற்கேற்ப சாந்தி ஹோமங்களும், வேத பாராயணங்களும், கலசாபிஷேகங்களும் செய்ய வேண்டிய தர்மம் சொல்லப்பட்டுள்ளது. ஒருவரது ஆயுட்காலத்தில் குழந்தை பிறந்தது முதல் ஒரு வயது பூர்த்தியாகும் வரை ‘ஆயுர்தேவதா’ – அக்னி பகவான் கட்டுப்பாட்டில் வருகின்றது. ஆகவேதான் ஒரு வருடம் பூர்த்தியானவுடன் ‘ஆயுஷ்ய ஹோமம்’ செய்யப்படுகின்றது. ஒன்று முதல் இருபது வயது வரை பிரம்மாவின் கட்டுப்பாட்டில் வருகிறது. அதனால்தான் ‘பிரம்மோபதேசம்’ செய்யப்படுகின்றது. அவர்களும் ‘பிரம்மச்சாரிகள்’ என்றழைக்கப்படுகின்றனர்.
இருபது முதல், நாற்பது வயது வரை மஹா விஷ்ணுவின் கட்டுப்பாட்டில் இருப்பதனால், திருமணங்களில் மாப்பிள்ளையை மஹா விஷ்ணுவின் ஸ்வரூபமாக – நாராயணனாக நினைத்து, பாத பூஜை செய்து வரவேற்கிறார்கள்.
நாற்பது முதல் அறுபது வரை ‘ருத்திரனின்’ கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறோம். ருத்ரனுக்குப் பல ஸ்வரூபங்கள் – அதில் உக்கிரரத ருத்ரனுக்கு சாந்தி செய்வது ஐம்பத்தி ஒன்பதாவது வயதில்! அறுபதில் ‘சஷ்டி அப்த பூர்த்தி’ சாந்தி, அமிர்த ம்ருத்யுஞ்ச ஸ்வாமிக்கு செய்யப்படுகின்றது.
அறுபத்தி ஒன்பது முடிந்து, எழுபது தொடங்கும்போது, செய்யப்படும் சாந்தி ‘பீமரத சாந்தி’ – அன்று பீமரத ருத்ரனை கலசங்களில் நீரில் ஆவாஹனம் செய்து, ஹோமங்கள் வளர்த்து, வேத பாராயணங்கள் ஜபித்து, தம்பதிக்கு அந்த நீரில் அபிஷேகம் செய்யப்படும்! ஒருவருக்கு அதிபெளதீகம் (இயற்கை), அதிதைவீகம் (தெய்வங்கள்), அத்யாத்மீகம் (தன் செயல்கள்)ஆகியவைகளால் தனக்கு ஏற்படும் தீய பலன்களிலிருந்து காத்துக்கொள்ளவும், 70 ஆம் ஆண்டு துவங்கும்போது, பீமன் என்னும் ருத்திரனை அமைதிப்படுத்தும் நோக்கில் ‘பீமரத சாந்தி’ நடத்தப்படுகின்றது.
“செளனகரால் கூறப்பட்டது – ஒரு மனிதனுக்கு 69 வயது முடிந்து, 70 வயது ஆரம்பிக்கும் சமயத்தில் மனிதனுக்கு பலவிதமான ரோகங்கள் உண்டாகும். தனத்ரவ்ய பத்னி புத்ர நாசம் சம்பவிக்கும். ஆறு மாதத்திற்குள் அபம்ருத்யு ஸம்பவிப்பதற்கும் வாய்ப்புண்டு. ஆகையால் ருத்ர ஆராதன ரூபமான இந்த சாந்தியை செய்ய வேண்டும்” – (கல்யாண்புரி வைதீக சபா வெளியுட்டுள்ள ‘ஷாந்தி சுதாகர:’ முதல் பாகம்).
77 வருடம் 7 மாதம் 7வது நாள் செய்யப்படுவது ‘விஜயரத சாந்தி’ – விஜயரத ருத்ரனுக்கு! எண்பது வயது பூர்த்தியாகும்போது, ‘ஆயிரம் பிறைக் கண்ட’ தம்பதிகளுக்கு செய்யப்படுவது “சதாபிஷேக” சாந்தி. எண்பது வயது முதல், மீண்டும் பிரம்மாவின் கட்டுப்பாட்டுக்குள் மனிதன் வந்துவிடுகிறான் என்கிறது இந்து தர்மம். எண்பது வயது முதல் சதா ‘பரப் பிரம்மத்தை’யே நினைத்துக்கொண்டிருக்க வேண்டும்; சக மனிதரிலும் பிரம்மத்தையே காண வேண்டும். சதாபிஷேகத்தில் பிரம்மாவை ஆவாஹனம் செய்து, பூஜித்து, கலசத்தில் அபிஷேகம் செய்யப்படுகிறது.
பொதுவாகக் கணவன் மனைவி இருவரும் உயிருடன் இருந்து,(நட்சத்திரக் கணக்குப்படி), கணவனின் 70 ஆவது பிறந்த நாளில் அனைவரின் நலனுக்காக செய்யப்படுவது பீமரத சாந்தி.


அறுபதில் ஐம்புலன்களின் ஆசைகளை வென்று, உற்றார் உறவினர் அனைவரையும் அரவணைத்து, யாரிடமும் பேதம் பாராமல் வாழத்தொடங்குவது. எழுபதில், காமத்தை முற்றும் துறந்த நிலையில் வாழ்வது. இறைவனைக் காண சதா அவனது நினைவுகளில் ஒன்றியிருப்பது – ஆயிரம் பிறை கண்டவர்கள் – சதாபிஷேகத்தில்! 96 ல் கனகாபிஷேகம் என வயதுக்கேற்ற வாழ்க்கை தர்மத்தைப் போதிக்கிறது இந்துமதம்.
சமீபத்தில் தில்லையில் பீமரத சாந்தி செய்துகொள்ளும் பாக்கியம் கிடைக்கப் பெற்றேன் (11.07.2023). சிதம்பரம் என்னும் தில்லைத் தலம் நான் பிறந்த ஊர். நடராஜர் கோயிலில் சிறுவயது முதலே சிற்சபையில் கூத்தனைத் தரிசித்து ஆனந்தப்பட்டவன். தில்லை வாழ் அந்தணர்களுக்கு வேதம் கற்பித்தவர் என் தாய் வழிப் பாட்டனார். அதனாலேயே, இந்த சிவத்தலத்தில் என்னுடைய சஷ்டி அப்த பூர்த்தியைக் கொண்டாடினேன். இப்போது பீமரத சாந்தி ஹோமத்துடன் சிதம்பரத்திலேயே, கோயிலில் கொண்டாடும் பாக்கியம் கிடைத்தது.
கொடிமரத்திற்குக் கிழக்கே உள்ள காலசம்ஹார மூர்த்தி, சோமாஸ்கந்தர், நடனசபையில் உள்ள சரபேஸ்வரர், கனகசபையில் ஸ்படிக லிங்கம் – எல்லா மூர்த்திகளுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடத்தினோம். என் மூதாதையர்களை நினைந்து, அவர்களின் ஆசிகளைப் பெற, ‘நாந்தி’ எனப்படும் சடங்கை நிறைவேற்றினோம். கலசங்கள் வைத்து, கணபதி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், நவக்கிரக ஹோமம், மிருத்தியுஞ்ச ஹோமம், தன்வந்தரி ஹோமம் அனைத்தும் செய்யப்பட்டன. செவ்வாய்க்கிழமையில் வந்த அஸ்வனி – பெளமாஸ்வனி – ஆதலால் சிறப்பு ஜபங்கள் ஜெபிக்கப்பட்டன. ஜெபிக்கப்பட்ட புண்ணிய தீர்த்தத்தில் கோயிலிலேயே, எங்களுக்கு அபிஷேகமும் செய்யப்பட்டது, எங்கள் பூர்வ ஜென்ம பயனே! அனைத்தையும் மிக்க சிரத்தையுடன் ஏற்பாடு செய்து, நடத்திக்கொடுத்த சிதம்பரம் தீட்சதர்களுக்கு எங்கள் வந்தனங்களும், அன்பும் – அந்த நடராஜ மூர்த்தியே பூமிக்கு வந்து செய்து கொடுத்து, ஆசீர்வதித்தற்கு இணையாகும் அன்று அவர்கள் செய்த அந்த பீமரத சாந்தி!
சிறப்பாக “குழித் தளிகை அன்னப்பாவாடை” ஆனந்த நடராஜ மூர்த்திக்கு முன்னால் சபையில் படைக்கப்பட்டது. (சுமார் ஆயிரம் பேருக்கான உணவு – வடை பாயசத்துடன் முழு சாப்பாடு – மடைப்பள்ளியில் தயாரிக்கப்பட்டது). தில்லை வாழ் அந்தணர்களுக்கும், அன்று கோயிலுக்கு வருபவர்களுக்கும் அந்த உணவு, பிரசாதமாக வழங்கப்பட்டது. அன்னதானமே பிரதானமாக கருதப்பட்டது அன்றைய நிகழ்வில்!
அறுபது தேவதைகள், அக்னி, வாயு, சூரியன், சந்திரன், வருணன், அமிர்தகடேஸ்வரர், பாலாம்பிகை ஆகியோரின் அருட்கடாட்சம் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்தனை செய்துகொண்டோம்.
மனதிற்கு மிகவும் சாந்தியை அளித்த புனித நிகழ்வாக ‘பீமரத சாந்தி’ அமைந்தது.
திருச்சிற்றம்பலம்!