ஆஸ்பிரின் மாத்திரைகளை../செந்தூரம் ஜெகதீஷ்

.

ஒரு ஆங்கில கிரைம் நாவலைப் படித்துக் கொண்டிருந்த போது, நாயகன் தலைவலி தாங்காமல் வழக்கைத் துப்பறிய தவித்துக் கொண்டிருக்கும் போது இரண்டு ஆஸ்பிரின் மாத்திரைகளை விழுங்கியதாகப் படித்து நானும் ஆஸ்பிரின் எடுக்க ஆரம்பித்து விட்டேன்.

ASPIRIN என்ற மாத்திரை எளிதாக எல்லா மருந்துக் கடைகளிலும் கிடைக்கக்கூடியது.விலையும் மலிவு. இந்த மாத்திரை பற்றி இணையத்தில் படித்த போது, மாரடைப்பை தவிர்க்கக்கூடியது, ரத்தம் கட்டியாவதைத் தடுக்கும் பக்கவாதத்தைத் தவிர்க்கும் எலும்பு முறிவு வலிகளைத் தீர்க்கும் என்று பல வித நன்மைகள் இருப்பதாக அறிந்தேன். ஆனால் இந்த மாத்திரையைப் பயன்படுத்தத் தொடங்கினால் நிறுத்தக்கூடாது என்றும் பயன்படுத்தும் முன்பும் நிறுத்தும் முன்பும் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்பதும் எனக்குத் தெரியாது. நான் பாட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் போட்டுக் கொண்டு எப்போது வேண்டுமானாலும் நிறுத்திவிடுவேன்.
ஆஸ்பிரினால் பல நல்ல பலன்கள் இருந்தாலும் சில பக்க விளைவுகளும் உண்டு. மூளையில் ரத்த நாளங்கள் வெடிக்கச் செய்யும் என்றெல்லாம் பயமுறுத்துகிறார்கள். சுவாசப் பிரச்சினை இருப்பவர்கள் இந்த மாத்திரையைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள் . எனக்கு சுவாசப் பிரச்சினை உள்ளது.
இந்த மாத்திரையின் பக்க விளைவுகளைப் பற்றி படித்த போது பயந்து விட்டேன். எந்த மாத்திரையும் மருத்துவரைக் கேட்காமல் போடக்கூடாது தான். ஆனால் எந்த மருத்துவரிடம் போனாலும் ஆறேழு டெஸ்ட் எழுதி பல ஆயிரம் ரூபாயை வீணடித்து உங்களுக்கு ஒன்றும் இல்லை என்பார்கள். அல்லது சுகர் அதிகமாக இருக்கு பிபி ஹையாக இருக்கு என்று விலை உயர்ந்த மாத்திரையைப் பரிந்துரைப்பார்கள். அப்போது கூட கடைகளில் கிடைக்கும் ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகளைப் பயன்படுத்தலாமா கூடாதா என்று எந்த மருத்துவரும் கூற மாட்டார்கள். தற்போது ஆஸ்பிரினால் மாரடைப்பையோ பக்கவாதத்தையோ தவிர்க்க முடியாது என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. நான் மருத்துவம் அறிவியலில் ஜீரோ தான். எந்த மாத்திரையைக் கண்டாலும் பயமாகவே இருக்கிறது. வீட்டில் காலாவதி ஆன, மருத்துவர் பரிந்துரையால் பலநூறு ரூபாய் கொடுத்து வாங்கி வந்த மாத்திரைகள் ஏராளமாக டப்பா நிறையக் கிடக்கின்றன. எந்த மாத்திரை எதற்கு என்று தெரியவில்லை .பல்வலிக்கும் பேதி நிற்பதுக்குமான மாத்திரைகள் மட்டும்தான் தெரிகிறது.அவற்றைத் தனியாக கவரில் போட்டு மேலே எழுதி வைத்து இருப்பேன். வீட்டில் மனைவி சொன்னாள் எதற்கு இத்தனை மாத்திரைகள் தூக்கி குப்பையில் வீசுங்கள். நீங்க நல்லாதானே இருக்கீங்க என்று. அவள் சொன்ன நல்ல நேரமோ என்னவோ இரண்டு நாளாக கால்வலி. அதற்கு என்ன மாத்திரை போடுவது என்று தெரியாமல் அமிர்தாஞ்சனும் Moove வும் தடவிக் கொண்டு நடக்கிறேன். பழனி முருகன் படிக்கட்டுகள் செய்த வினை. கோவையிலும் நடந்து நடந்து கால்கள் வீங்கி விட்டன. சென்னை தான் எனக்கு நல்லது பைக்கில் பறக்கலாம். நடக்கவே மாட்டேன்.

One Comment on “ஆஸ்பிரின் மாத்திரைகளை../செந்தூரம் ஜெகதீஷ்”

Comments are closed.