ராகவேனியம் 277 -சுஜாதா

அறிவுஜீவி சுஜாதா வாசகர்கள் குழுRam Sridhar  

ஒருநாள் சுத்தமாகக் குளித்துவிட்டுத் தலைசீவத் தொடங்கியபோது, நான் ஒரு எம்.எஸ்.ஸி. ‘டாக்டரேட்க்காக “ஸாலிட் ஸ்டேட் ஃபிஸிக்ஸி’ல் ஆராய்ச்சி செய்யும் மாணவன். ஸாலிட் ஸ்டேட் ஃபிஸிக்ஸ்’ என்பது ஏதோ ஒரு சாப்பிடும் பண்டம் என்று நினைப்பவர்கள் கதையைவிட்டு விலகுங்கள். மற்றவர்கள் பயப்பட வேண்டாம் இந்த மாதிரி வார்த்தைகளை வைத்து பயங்காட்டப் போகிறேன் என்று……. அந்த வார்த்தைகள் இல்லாமலேயே!

என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்? தலை சீவிக் கொண்டிருந்தேனா? …..டிருந்தபோது வாயிற்கதவு தட்டப்படத் திறந்தால்…. மாலதி.

இந்த மாலதி எல்லா மாலதியையும் போல ஒரு மாலதி இல்லை. உச்சந்தலை வகிட்டிலிருந்து கால் நகங்களின் க்யூடெக்ஸ்வரை அழகாக இருக்கும் என் ஸ்பெஷல் மாலதி, ஆர். மாலதி.

இவளிடம் இருந்த ஒரே குறை இவள் இனிஷியல். அதற்குரிய தந்தையான ராகவானந்தம் அவரைப் பற்றிய மேல்விவரங்கள் இங்கிருந்து 18 வார்த்தைகளில் வெளியாகும்.

மாலதி என் சக மாணவி கடற்காற்றில் யூனிவர்ஸிடியின் வேப்பமர நிழலில் நாங்கள் மணிக்கணக்காக டெப்ளீஷன் லேயர் பற்றியும் அவ்லான்ச் எஃபெக்ட் பற்றியும் பேசியிருக்கிறோம்.

“என்ன?” என்றேன்.

“உடனே என்னுடன் வா. அப்பா கூப்பிடுகிறார் உன்னை…… ரொம்ப சீரியஸ். என்னைக் கன்னாபின்னா என்று திட்டுகிறார். ஏதோ ஒரு பிளாஸ்டிக் துண்டைத் தொலைத்து விட்டேனாம். போச்சு, குடி முழுகிப் போச்சு என்று குதிக்கிறார். உயிர் போகிற அவசரம் என்கிறார்”

“கார் கொண்டு வந்திருக்கிறாயா?”

“ஆமாம்” என்று காரை நோக்கி ஓடினாள்

நான் பின்னால் ஓடினேன். ஒரு செருப்பைக் கையிலே தூக்கிக் கொண்டு

உட்கார்ந்து நான் கதவைச் சாத்துவதற்குள் தெருமுனைவரை வந்துட்டோம் மாலதியின் அப்பா டாக்டர் ராகவானந்தம் ஒரு இன்ஃப்ளூயென்ஸா டாக்டரல்ல. அவர் டாக்டர் பட்டம் வாங்கியது நியூக்ளியர் ஃபிஸிக்ஸில்.

“நாய்… நாய்…. நாய் போச்சு….. ஏன் இப்படிப் பிசாசு மாதிரி ஓட்டுகிறாய்?” என்றேன்.

“பிசாசு மாதிரித்தான் ஓட்டச் சொன்னார்,” என்றாள்

“உன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லையா?” என்றேன்.

“அதெல்லாம் இல்லை, ஏதோ தொலைந்து போய்விட்டது என்று குதிக்கிறார். ஏதோ தயார் செய்து வைத்திருந்தாராம். நீதான் அவரைப் பார்க்கப் போகிறாயே, கேட்டுக்கொள். கிட்டே போனால் சுடுகிறார்”

90 கிலோ மீட்டரில் காரை ஓட்டி, என் இரண்டு முக்கியமான நரம்புகளை ஒடித்து, ரப்பரை எரித்துக் காரை நிறுத்தினாள்.

வாசலிலேயே டாக்டர் ராகவானந்தம் நின்றுகொண்டிருந்தார்

“வா பையா (இப்படித்தான் என்னைக் கூப்பிடுவார்) வேகமாக மாடிக்கு வா. மாலதி! யூ ஸில்லி ஸ்டுபிட் கர்ல்! நீயும் வா” என்றார்

டாக்டர் ராகவானந்தத்தைப் பார்த்தால் யாரும் 68 வயது என்று மதிப்பிட முடியாது 67 தான் மதிப்பிடலாம் அவர் நோபெல் பரிசைப் பதினைந்து நாட்களில் தப்பவிட்டுவிட்டார் என்பது அவருடைய மகத்தான குறை.

அவர் பதிப்பித்திருந்த பேப்பரைப் பதினைந்து தினங்களுக்கு முன் மேற்கே அதே விஷயத்தைப் பற்றி ஸ்வீடன் ஆசாமி ஒருவன் பதிப்பித்துவிட்டானாம். அவனுக்கு நோபெல் பரிசு கிடைத்துவிட்டது. இவருக்கு ஒரு சோப்பு டப்பாகூடக் கிடைக்கவில்லை. ஆறு வருஷம் வாதாடிப் பார்த்தார். பிரயோசனமில்லை. வெறுப்பில் ரிடையராகிவிட்டார்

மேலும் டாக்டர் ராகவானந்தத்தின் பரிசோதனைகளையும் தத்துவங்களையும் புரிந்துகொள்ள இந்தியாவிலேயே மூன்று ஆசாமிகள்தான் இருக்கிறார்களாம் (அவரையும் சேர்த்து), அதில் டாக்டர் பானர்ஜி என்பவர் சமீபத்தில் காலமாகிவிட்டார் மற்றொருவருடன் ஒரு தத்துவத்தைப் பற்றி வெட்டுப்பழி குத்துப்பழி

டாக்டர் அவர்களின் பிரசங்கம் ஒன்றில் ஒரு தடவை நான் புத்திசாலித்தனமாகக் கேள்வி கேட்விட்டேன் என்று என்னைப் பிடித்துக்கொண்டுவிட்டார்.

சத்தியமாக அவருடைய ஃபிஸிக்ஸ் எனக்குப் புரியவில்லை. அவருடன் நான் சகவாசம் வைத்துக்கொள்வதற்கு ஒரே காரணம் :

மாலதி!!

டாக்டர் மாடிப்படிகளை நான்கு நான்காகத் தாவி ஏறியதிலிருந்து விஷயம் தீவிரமானது என்று தெரிந்துகொண்டேன். மாடியில் அவருடைய பரிசோதனைச் சாலை லாபரட்டரியில் தன் சேமிப்பு முழுவதையும் கொட்டியிருக்கிறார். கரும்பலகை இருந்தது. அதில் சாக்பீஸில் பூச்சிகள் போலக் கணக்கு புத்தகங்கள். லாபரட்டரியில் எழுதியிருந்தன. மற்றும் புத்தகங்கள். ஸ்பெக்ட்ரோகிராப், வான்-டி-கிராஃப், ஜெனரேட்டர் என்று பட்டியலிட்டால் அடிக்க வருவீர்கள். சுருங்கச் சொன்னால் விஞ்ஞான காரேமூரே.

“என்ன ஆச்சு டாக்டர்?” என்றேன்

“டிஸாஸ்டர்” என்றார்

“டி?”

“ஸாஸ்டர்”

“ஏன்?”

“பையா, ஜாஸ்தி பேசாதே. நீ இன்னும் ஒன்றரை மணி நேரத்துக்குள் இந்த வீட்டில் அல்லது இந்த நகரத்தில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு வஸ்துவைக் கண்டுபிடிக்க வேண்டும். பிளாஸ்டிக் போல அழுக்குச் சிவப்பில் நீண்ட சதுர வடிவத்தில் இருக்கும். போ, போய்க் கொண்டுவா. இந்த முட்டாள் பெண் தொலைத்து விட்டாள்”

“பிளாஸ்டிக் நீண்ட சதுரம்தானே? எவ்வளவு வேண்டும் உங்களுக்கு? பாண்டி பஜாரில்….. “

“சே சே… அது பிளாஸ்டிக் இல்லை. நான் புதிதாக ஸின்தஸைஸ் பண்ணித் தயாரித்த ராகவேனியம் 277 என்கிற எலிமெண்ட் அது. பிளாஸ்டிக் மாதிரி இருக்கும் பார்வைக்கு…”

“ஏதோ ஊறுகாய்ப் பெயர் மாதிரி இருக்கிறதே?”

“விளையாடாதே. அது எவ்வளவு அபாயகரமான பொருள் தெரியுமா?”

“எவ்வளவு அபாயகரமான பொருள்?”

“உங்கள் மர மண்டைக்கு விளக்கமாகச் சொல்லித்தான் ஆக வேண்டும். நான் பதினாறு வருஷமா ஆராய்ச்சி பண்ணிக் கணக்குப் போட்டுக் கழித்துத் திரும்பப் போட்டுக் கண்டுபிடித்தேன். ஒரு சூபர் ரேடியோ ஆக்டிவ் எலிமெண்ட் இதுவரை என் மனசிலேயே இருந்தது. யுரேனியம் , ப்ளூடோனியம் எல்லாவற்றிற்கும் தாத்தாவாக ஓர் எலிமெண்ட் இருக்கிறது என்று எட்டு வருஷத்துக்கு முன்னால் ஒரு வியாசத்தில் எழுதினேன். எல்லோரும் பரிகாசம் செய்தார்கள். முனைந்து ஆராய்ச்சி பண்ணி இன்று காலை அதை உண்டாக்கினேன்”.

“சந்தோஷம்”

“அதில் ஒரு தகராறு, நான் எதிர்பார்த்ததுதான். இந்த ராகவேனியம் 277 க்கு என் கணக்குப்படி ஆயுள் ஆறு மணி நேரம். அந்த ஆறு மணி நேரத்துக்குப் பிறகு க்ரிடிக்கலாகி விடுகிறது”.

“க்ரிடிக்கலானால் என்ன ஆகும்?”

“வெடிக்கும்”

“கொஞ்சம் ஓதுங்கிக்கொண்டால் போகிறது”.

“பெரிசாக வெடிக்கும்”

“எவ்வளவு பெரிசாக?”

ராகவானந்தம் (டாக்டர்) நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டார்.

“யூ ஸீ.. அது வெடித்தால், இந்த வீடு போய்விடும். இந்தச் சென்னை நகரம் போய்விடும். இந் மாநிலம் போய்விடும். இந்தத் தேசம், என் கணக்கில் தப்பவில்லை என்றால் உலகமே….”

“டாக்டர்! எங்கே அந்த ராகவேனியம் ?”

“மாலதி தொலைத்துவிட்டாள்”.

எனக்கு ஜிலீர் என்றது.

“எனக்கு ஜிலீர் என்கிறது டாக்டர். அதற்கு அவ்வளவு சக்தி என்றால் ஏன் அதைத் தயாரித்தீர்கள்?”

“இந்தக் கேள்வி கேட்பாய் நான் அதைத் தயாரித்தபோது அது இந்த லாபரட்டரியைவிட்டு வெளியே போகும் என்று கனவிலும் எண்ணவில்லை. பார் பையா…. அதற்கு ஆறு மணி நேரம் கெடு. அதற்கு முன் அதை லிக்விட் நைட்ரஜனி நனைத்தால் அது புஸ் என்று காற்றாகிவிடும். ஆறுமணி நேரம் வரை அப்பிராணி அதற்குள் மாடரேட்டரில் நனைத்துவிட்டால் ஒன்றும் ஆகாது”

“ஆறு மணி ஆகிவிட்டால்?”

“ச், மறுபடி சொல்ல வேண்டுமா? அமெரிக்காக்காரன் பிக்கினியில் வெடித்தானே மெகாடன் ஹைட்ரஜன் பாம், அதை இதனுடன் ஒப்பிட்டால் அது ஒரு முணு முணுப்பிற்குச் சமானம்”

நான் மண்டி போட்டுக்கொண்டு,

“மாலதி! என் கண்ணே, எங்கே வைத்தாய் அந்தத் துண்டை? சொல்லிவிடு” என்றேன்

“எங்கே என்று தெரிந்தால் சொல்லமாட்டேனா முட்டாள்..”

“நீ தொலைத்துவிட்டு அவனை முட்டாள் என்கிறாய்”

“டாக்டர் ஸார். எத்தனை மணிக்கு நீங்கள் அதை உற்பத்தி செய்தீர்கள்?”

“காலை எட்டரை மணி இருக்கும்”

“இப்பொழுது மணி ஒண்ணு .”

“இன்னும் ஒன்றரை மணிக்குள் அதைக் கண்டுபிடித்தாக வேண்டும். உலுக்கு இந்த பெண்ணை.”

அவள் சொன்னாள், “இன்றைக்கு மார்னிங் ஷோ உண்டு என்று அந்த முட்டாள் ரேணுகா சொன்னாள். அவசர அவசரமாக அப்பாவிடம் சொல்லிவிட்டுப் போகலாம் என்று மாடிக்கு வந்தேன். மாடியில் அப்பா இல்லை”

“கீழேதான் போயிருந்தேன்…” – இது டாக்டர்

“மேஜை மேல் ப்ளாஸ்டிக் போல ஏதோ அழகாகக் கண்ணைப் பறித்தது, ஏதாவது உபயோகமாக இருக்கும் என்று என் ஹாண்ட் பாகில் போட்டுக்கொண்டு அப்பாவுக்குப் போன் செய்துகொள்ளலாம் என்று கிளம்பிவிட்டேன்”

“இரு இரு. அதை எடுத்தாய். உன் கைப் பையில் போட்டுக் கொண்டாய். கவனமாக ஞாபகப்படுத்திக் கொள்…”

இன்னும் ஒரு மணி இருபத்து ஏழு நிமிஷம் இருக்கிறது

“நேராகக் காரை எடுத்துக்கொண்டு தியேட்டருக்குப் போனேன்”

“பை எங்கே இருந்தது?”

“காரில் இருந்தது. என் பக்கத்தில்”.

“காரில் தேடிப் பார்த்தாயா?”

“எல்லா இடத்திலும் தேடியாகிவிட்டது. காணோம்”

“காண வேண்டும். கட்டாயம். ஈஸி. ஈஸி. சினிமா தியேட்டருக்குப் போனாய்…”

“போனேனா? அங்கே சனிக்கிழமை ஷோ கிடையாது என்று தெரிந்ததும் ஏமாந்துபோய் வெளியே வந்தேன்”.

“பை? பை?”

“பை கையில் இருந்தது”.

“திறந்தாயா?”

“திறக்க அவசியம் ஏற்படவில்லை. அப்புறம் தியேட்டருக்கு எதிரே இருந்த கெமிஸ்ட் ஷாப்புக்குப் போய் பாட்டில் ஷாம்பு வாங்கிக்கொண்டேன் அதனுடன் ஊமத்தங்காயைச் சேர்த்துத் தேய்த்துக்கொண்டால் தலைமயிர் ஸில்க் மாதிரி ஸாஃப்டாக ஆகும் என்று ஃபெமினாவில்…”..

“ஊமத்தங்காய் தேய்க்கிறாளாம். இந்த உலகமே அழியப் போகிறது… ஊமத்தங்காய்…”

“ஐ ஸே மாலதி. இந்த உப கதைகளை எல்லாம் கொஞ்சம் எடிட் பண்ணிவிடலாமே எங்கே அந்த ப்ளாஸ்டிக் துண்டு கெமிஸ்ட் ஷாப்பில் பணம் கொடுக்கப் பையை திறந்தாயா?”

ஒரு மணி இருபது நிமிஷம்….

“திறக்கவில்லை. பணம் என் உடம்பிலேயே வைத்திருந்தேன் நோட்டு”

“சரி புரிகிறது. அப்புறம் என்ன செய்தாய்?”

“வெளியே வந்து கெமிஸ்ட் ஷாப் பக்கத்தில்.. அப்பா! அப்பா! அப்பா! ஞாபகம் வந்துவிட்டது”

“சொல்லு, சொல்லு, என்ன?”

“அந்த கெமிஸ்ட் ஷாப் பக்கத்தில் ப்ளாஸ்டிக்கிலே பெயர் வெட்டும் ஒரு என்க்ரேவர் – engraver – கடை இருந்தது… தெரியாது? அண்ணா வாழ்க. நல்வரவு இன்று ரொக்கம் நாளை கடன் இப்படி…”

“மாலதி! ப்ளாஸ்டிக் துண்டு எங்கே?”

“அந்தக் கடைக்காரனிடம் கொடுத்திருக்கிறேன் என் பெயரை வெட்டித் தர!”

டாக்டர் கண்ணீருடன் சிரித்தார் “உலகத்திலேயே ஒரே ‘ராகவேனியம் 277’ கடைக்காரனிடம் கொடுத்திருக்கிறாள்? பையா சீக்கிரம். ஒன்றே கால் மணி நேரம் தான் இருக்கிறது”

“அப்பா, நான் ஓட்டுகிறேன். வேகமாக ஓட்டுவேன்”

“கிளம்பு! கிளம்பு”

“டாக்டர் ஸார். கொஞ்சம் இருங்கள். அது ஏதோ சொன்னீர்களே, லிக்விட் நைட்ரஜன் அதையும் கொண்டு வாருங்கள் அந்தக் கடையிலேயே அந்தப் பிசாசை நனைத்துவிடலாம்”

“துரதிருஷ்டவசமாக அது முடியாது க்ரையோ ஜெனிக்ஸ் உனக்குத் தெரியாது மைனஸ் 250 டிகிரியில் இருக்கிறது. ஸெண்டரிஃப்யூகல் பம்ப்பையும்…..”

“இப்ப என்ன சொல்லுகிறீர்கள்? அந்தத் துண்டத்தைக் கடையிலிருந்து வீட் கொண்டுவர வேண்டும் என்றுதானே?”

“ஆமாம்!” மாலதி காரைக் கிளம்பித் தயாராக

நாங்கள் பதினைந்து நிமிஷத்தில் அங்கே போனபோது கடை பூட்டியிருந்தத. பக்கத்துப் பெட்டிக் கடையில் விசாரித்தபோது சாப்பிடப் போயிருக்கிறான் என்று தெரிந்தது

“சாப்பிட எங்கே?”

“வீட்டுக்கு?”

“வீடு எங்கே?”

“கொலைகாரன் பேட்டையில்”

“பெயரே சகுனமா இல்லையா டாக்டர்?”

“எப்ப வருவார்?”

“அரை அவர் முக்கால் அவர் ஆகும்.”

கடிகாரத்தைப் பார்த்தேன். சரியாக ஐம்பத்தைந்து நிமிஷம் இருந்தது, நாம் எல்லோரும் அழிவதற்கு…

“டாக்டர் என்ன செய்வது?”

“பூட்டை உடைக்கலாமா?”

“போலீஸ் வந்து…”

“போலீஸாவது ஒன்றாவது. எல்லோருமே கூண்டோடு கைலாசம் போகப் போகிறோம் அவன் வருவதற்கு ஒரு மணி நேரமானால் காத்திருக்க முடியுமா? போ, காருக்குப் போய் டூல் பையை எடுத்துக் கொண்டு வா…”

நான் காரை அடைந்து கான்வாஸ் பைக்குள் இருந்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு வருவதற்குள் கடைக்காரன் வந்துவிட்டான்.

‘வணக்கங்க” என்றான். “என்ன வேணும்?

“கடையைத் திறக்க வேண்டும்”.

“என்ன விஷயம்?”

“இந்தப் பொண்ணு ஒரு இரண்டு அவருக்கு முன்னாலே ஒரு பிளாஸ்டிக் துண்டு கொடுத்ததே பேர் எழுத? அது வேண்டும்…..”

“வேலை இன்னும் முடியல்லியே.”

“பரவாயில்லை. அந்தத் துண்டுதான் வேணும்.”

“ரசீது இருக்குதா?”

“இதோ பார், உன் பேரென்ன?”

“ஆறுமுகம்… அன்பரசுன்னு நண்பர்களெல்லாம் மாத்திக்கச் சொன்னாங்க.”

“அன்பரசு, ஆறுமுகம், இது என்ன?”

“நூறு ரூபா நோட்டு”

“திற” –

“இதை முன்னமேயே சொல்லியிருக்கலாமே. கடையே உங்களுதுதான். என்ன வர்ணம் இந்தத் துண்டு?”

“அழுக்குச் சிவப்பு”

“இதிலே பார்த்து எடுத்துங்க” என்று ஒரு டிராயரைத் திறந்தான்

டிராயர் நிறைய அழுக்குச் சிவப்பில் முப்பது நாற்பது பிளாஸ்டிக் துண்டங்கள்.

“இவ்வளவுதானே? சிவப்பில் வேறு கிடையாதே?”

“கிடையாது”

“எல்லாவற்றையும் எடுத்துக்கொள். டயம் இல்லை.” என்றார் டாக்டர்

“அன்பரசு, நூறு ரூபாய் வைத்துக்கொள். இதை அப்படியே எடுத்துப்போகிறோம்.” என்று வாயகன்ற, விந்தை நிறைந்த அன்பரசை விட்டுவிட்டுக் காரை நோக்கி ஓடினோம்

சரியாக இருபத்தைந்து நிமிஷம் இருந்தது

மாலதி, பதினைந்து நிமிஷத்துக்குள் வீடு சேர வேண்டும். ஒரு பத்து நிமிஷமாவது மார்ஜின் இருக்கும்

மாலதி சில சிவப்பு விளக்குகளை அனாயாசமாகக் கடந்து பிரமித்த ப்ரேக்கு. க்றீச்சுகளின் ஊடே தூள் பறந்தாள். அந்த ரெயில்வே கேட் மூட இருந்தவன், நாங்கள் வருகிற அலறலைப் பார்த்து அவசர அவசரமாகத் திறந்து விலக முயன்றதும் நீலச்சட்டை சற்றே இழுபட்டுக் கிழிந்துவிட்டது வீட்டை அடைந்தபோது பதினைந்து நிமிஷம் சுத்தமாகப் பாக்கி இருந்தது

“ஃப்யூ! வி மேட் இட்! டாக்டர், சீக்கிரம் அந்தச் சனியனை அழியுங்கள். போதும் உங்கள் விளையாட்டு….”

“பையா, நீயும் வா” என்றார்

மாடிக்கு ஓடினோம்.

“எங்கே உங்கள் லிக்விட் நைட்ரஜன் ப்ளாண்ட்?”

“அதோ பார், அந்த ரூமில் இருக்கிறது, திற.”

“எந்த ரூம்?”

“இடது பக்கம்….”

“பூட்டியிருக்கிறதே?”

“திற -“

“சாவி?”

“தருகிறேன்”

டாக்டர் தன் வலது பாண்ட் பைக்குள் கை விட்டார். வெளியில் எடுத்தார். இடது பாண்ட் பைக்குள் கை விட்டார். வெளியே எடுத்தார். அப்புறம் சட்டைப் பை. அப்புறம் கைக்குட்டையை எடுத்தார். உதறினார்.. இங்கே பார்த்தார். அங்கே பார்த்தார்

நெஞ்சைப் பிடித்துக்கொண்டார்.

“சாவி எங்கே?”

“சாவி எங்கே?” – இது நான்

“பையில்தான் வைத்திருந்தேன்”

“டாக்டர், டாக்டர், ஈஸி? ஈஸி இந்த அறைக்குள் லிக்விட் நைட்ரஜன் இருக்கிறது. ரூம் பூட்டியிருக்கிறது, சாவியைக் காணோம்!”

“இன்னும் அஞ்சு நிமிஷம்..”

“அப்பா பயமாக இருக்கிறதப்பா, சாவி எங்கே?”

“பையா, இனித் தேடி உபயோகமில்லை, பூட்டை உடை. பூட்டை உடை. நாலு நிமிஷம்தான்.. . உடை”

மூன்று பேரும் சேர்ந்து இடி இடி என்ற கதவை இடித்தோம்.

இடித்துக்கொண்டே இருந்தோம். உயிர் மேல் ஆசை, எங்கள் உயிர் மேல், உங்கள் உயிர் மேல்….

ம்ஹூம். கதவு பழங்காலத்துக் கதவு. அசையவில்லை

அந்தப் பிளாஸ்டிக் துண்டம் வைத்திருந்த பெட்டி அதோ… இன்னும் ஒரு நிமிஷமா! இடித்து இடித்து இடித்துத் தோள்கள் வலித்தன

முப்பது செகண்ட்

“பையா பிரயோசனமில்லை. இன்னும் முப்பது செகண்ட்தான் இருக்கிறது. இனி, திறந்தால்கூட ப்ளாண்டைத் திறப்பதற்கு ஒரு நிமிஷம் ஆகும். அப்புறம் அதை நனைக்க இன்னும் அரை நிமிஷம் ஆகும். பையா வெடிக்கப்போகிறது… வெடிக்கப் போகிறது.. இதோ”

“டாக்டர்! முப்பது செகண்ட் ஆகிவிட்டது போலிருக்கிறதே!”

“அதானே? இன்னும் வெடிக்கவில்லையே!”

“உங்கள் வாட்ச் ஃபாஸ்ட்டா ?”

“இல்லையே…”

“இன்னும் கொஞ்சம் நேரம் ஆகுமா? எனக்கு ஒரு சிகரெட் பிடிக்க டயம் இருக்குமா?”

ஒரு நிமிஷம்

ஒன்றரை நிமிஷம்…..

ஐந்து நிமிஷம்

பத்து / பதினைந்து….

டாக்டர் ராகவானந்தம், “பையா, என் கால்குலேஷனில் ஏதோ தப்பு ஏற்பட்டுவிட என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் அது இந்த நேரத்துக்குள் வெடித்திருக்க வேண்டும். ஒரு இடத்தில் எப்ஸிலான் டு தி பவர் ஆஃப் ஆஃல்பா ப்ளஸ் – க்கு பதிலாக ஆல்ஃபா மைனஸ் எக்ஸ் என்று எடுத்துக்கொண்டுவிட்டேன் போலிருக்கிறது. அதன்படி தயாரித்ததில் தப்பு ஏற்பட்டுவிட்டது. மறுபடி செக் பண்ணிக் கால்கும் பண்ண வேண்டும்… சே சே சே! திருப்பி எல்லாக் கணக்கையும் போட 15 வருஷம் ஆகும்” என்றார் டாக்டர் ராகவானந்தம் (வயது 68).

எது எப்படியோ டாக்டரின் கணக்கில் ஒரு கூட்டல் குறியோ கழித்தல் குறியோ தப்பாக இருந்தது. இல்லாவிட்டால் நீங்கள் இந்தக் கதையைப் படித்திருக்க முடியாது.

All reactions:

106You, ராம்கி and 104 others