
அண்மையில் காலமான மிலன் குந்தேரா வாழ்நாள் முழுவதும் பத்திரிக்கையாளர்களை தவிர்த்தார். நேர்காணல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், புத்தக வெளியீட்டு விழா என அனைத்தையும் உதறி பொது வெளிக்கு வராமல் அமைதியாக இலக்கியத்தில் செயல்பட்டவர். செக்கஸ்லோவிக்கியாவில் 1929ல் பிறந்து, 1975லிருந்து ஃபிரான்சில் வாழ்ந்தவர்.
இவருடைய அனைத்து படைப்புகளிலும் இவரை பற்றி இந்த ஒரு வரி தகவல் மட்டுமே உண்டு.
.இவரின் கதை தொகுப்பு மற்றும் அ_புனைவுகள்
நூல்களிலும் இன்றளவளிலும் இவரைப்பற்றிய நாம் தெரிந்து கொள்வது இவ்வளவுதான். தனிப்பட்ட வாழ்க்கை தகவல்களை முற்றிலும் ஒதுக்கி தன்
படைப்பை மட்டுமே முன்னிருத்தியவர் இருபதாம் நூற்றாண்டின் அதிமுக்கிய எழுத்தாளர்.
பின்னாளில்(80களில்) இவரின் பின் புலன்களை ஆராய்ந்து வெளிக்கொணர்ந்தவர்களும் உண்டு. இதைப்பற்றி அவர் விவரிக்கையில் நாம்
வியாபார நிறுவனங்கள் மற்றும் அரசாங்க அலுவலங்களுக்கு விண்ணப்பிக்கும்போது
நம்முடைய தனிநபர் தகவல்களை கொடுக்கிறோம்.இந்த பழக்கம்தான் நமக்கு
அனைத்து துறையிலும் பிரயோகிக்கும் உந்துதல் வருகிறது.கலை,இலக்கியத்திற்கு
இது தேவையில்லை என்கிறார். கவிதை,நாடகம்,சிறுகதை,விமர்சனக் கட்டுரை, நாவல் என எழுதிய அவருக்கு பன்முகங்கள் உண்டு.இளம் வயதில் கம்யூனிஸ்ட் இயக்கத்தோடு தன்னை
ஈடுபடுத்திக்கொண்டவர்.ஆனால் கட்சி விரோத நடவடிக்கையால் இயக்கத்திலிருந்து
வெளியற்றப்பட்டவர். ஸ்டாலின் கொடுங்கோல் ஆட்சி பற்றியும், செக் நாட்டில் ருஷ்யாவின் ஆக்கிரமிப்பின் பின்புலத்தில் The Joke என்ற காதல் கதையை
தன்னுடைய முதல் நாவலாக அங்கத நடையில் எழுதி வெளியிட்டார். தன்னுடைய மற்றொரு நாவலான Book of laughter and forgetting ல் பல கதாபாத்திரங்களை உரையாட வைக்கிறார். ஆனால் எந்த கதாபாத்திரமும் நேருக்கு நேர் சந்திப்பதில்லை. ஏழு அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ள இந்நாவல்
வாசகர்மேல் எந்த உண்மையையும் திணிக்காமல் பல கேள்விகளை முன் வைக்கிறது.
தன்னுடைய அடுத்த நாவலான The Unbearable Lightness of Being ல் கிரேக்க தத்துவஞானி Parmenides தத்துவப்படி, வாழ்க்கையை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல்,
ஒரு வகையான அபத்த விளையாட்டாக இரு தம்பந்தியர்களின் கதைகளின்
வாயிலாக வாழ்வின் இரட்டைத் தன்மையை அபாரமாக எழுதிச் செல்கிறார். உலகில்
எல்லாமே இரட்டைத் தன்மைகளாக இருக்கின்றன. மொத்த வாழ்வும் கணம் மற்றும்
கணமற்ற தன்மை என்ற இருமை எதிர்வில் ஊசலாடுவதை இந்நாவலில்
விவரிக்கிறார். விவிலியம். அரசியல், தத்துவம், இதிகாசம், அறிவியல் போன்ற பல
அறிவார்த்த துறைகளின் இழைகளை இந்நாவலில் கோர்த்துள்ளார். 1990 வரை செக் மொழியில் எழுதியவர் அதற்குப்பிறகு ஃபிரென்ச்
மொழியில்தான் தன் நூல்களை எழுதி வெளியிட்டார்.. நாவல் மட்டுமின்றி பல விமர்சனக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இசை, காஃப்கா, ஐரோப்பிய நாவல்,
ருஷ்ய இலக்கியம் என பல தலைப்புகளில் விரிவாக எழுதியுள்ளார். மத்திய ஐரோப்பாவில் பிறந்த காஃப்கா, ஃப்ராய்டு பற்றி விரிவாக ஆய்வு பூர்வமான
கட்டுரைகளை எழுதியுள்ளார்.
மிலன் குந்தேரா பிறந்த செக் நாட்டை 1968ல் ருஷ்யா ஆக்கிரமிக்கிறது.
குந்தேராவுக்கு போர் காலத்தில் வாழ்வதற்கு பல சிக்கல். அப்போது ஒரு நாடக
இயக்குநர் குந்தேராவிடம் தாஸ்தேயவஸ்கியின் ’இடியட்’ நாவலை நாடகமாக
எழுதித் தர கேட்கிறார். குந்தேரா மறுத்து, பட்டினியால் சாவேனே ஒழிய இதை எழுதி தரமுடியாது என்கிறார். ருஷ்யாவின் ஆக்கிரமிப்பால் அவர்
தாஸ்தேயவஸ்கியை நிராகரிக்கவில்லை. மாறாக ருஷ்யாவின் செக்காவை
போற்றுகிறார். ஆனால் அவர் குறிப்பிடுவது தாஸ்தேயவஸ்கி முக்கியத்துவம்
கொடுக்கும் அதிக மிகை உணர்ச்சிகள்,உண்மை மற்றும் Sentiments. வாழ்வின் விழுமியங்களை அதீத உணர்ச்சிகரமாக அணுகி வரலாறு முழுவதும் போரும்
வன்முறையும் மனிதன் முன்னிருத்தியுள்ளான் என்கிறார். இதற்கு கிருஸ்துவ மதத்தின் முக்கிய சொற்றொடரை மேற்கோள் காட்டி விளாசுகிறார்.
Love God and do as you will… said Saint Augustine. அதாவது கடவுளை நேசித்து எதை வேண்டுமானலும் மனிதன் செய்யலாம் கொலை உட்பட என அக்ஸ்டினனின்
மேற்கோளை சுட்டிக்காட்டுகிறார். மேலும் வரலாறு முழுவதிலும் சிலுவையில் அறையப்பட்ட ஏசுவின் துன்பத்தையும்,வலியையும், தியாகத்தையும் வியந்து
போற்றப்படுகிறது. ஆக வரலாறு முழுவதும் மிகை உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அறிவின் பாற்பட்ட எழுத்தை புறந்தள்ளியுள்ளார்கள் என்கிறார்.
இதற்கு மாறாக ஐரோப்பாவின் மறுமலர்ச்சி (Renaissance) காலத்தை சிலாகிக்கிறார்.அதாவது பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் அளித்ததை குறிப்பிட்டு
ஐரோப்பாவுக்கும், ருஷ்யாவுக்கும் உள்ள இந்த வித்தியாசத்தை முக்கிய காரணியாக
முன்வைக்கிறார். நாவலுக்கு பல சாத்தியப்பாடுகள் உண்டு எனக்கூறி 18ம் நூற்றாண்டு லாரண்ஸ் ஸ்டேர்ன் எழுதிய டிரிஷ்ட்ராம் ஷாண்டி நாவல்
முக்கியமானது என்கிறார். இந்நாவலில் உண்மை இல்லை, வாசகர்களை மயக்கவில்லை, உணர்ச்சி கொந்தளிப்பில் ஆழ்த்தாமல் வாசகர்களின் பங்களிப்பை கோருகிறது என்கிறார். ஐரிஷ் நாட்டில் பிறந்த ஸ்டெய்னை பின்பற்றியவர் அதே 18ம்
நூற்றாண்டில் பிறந்த பிரெஞ்சு எழுத்தாளர் டெனிஸ் திதெராத்தை போற்றுகிறார். ஐரோப்பிய நாவல் வரலாற்றின் தொடக்கம் செர்வான்டிசிலிருந்து தான்
தொடங்குகிறது என குறிப்பிடுகிறார்.
ஆக குந்தேரா பொறுத்தமட்டில் வாசகர்களை
பார்வையாளராக (spectator) ஆக்காமல் பங்கேற்பாளராக (Participator) மாற்றும் நாவலுக்கு
அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்கிறார்.
இருபதாம் நூற்றாண்டில் கருத்துகள், பண்டங்கள் உட்பட எளிமையாகவும்,சுருங்கியும்
உள்ளது. நுகர்வு கலாச்சாரத்தினால் உருவத்திலும்,உள்ளடகத்திலும் இம்மாற்றம்
வந்துள்ளதை மாற்றவேண்டும் என்கிறார்.இதை நாவல் என்ற வடிவம் தான்
முறியடிக்கும் என்கிறார். மற்றும் நாவல்களில் கதாபாத்திரங்களின் புறத்தோற்ற
விவரிப்புகளை புறந்தள்ளி, புறநிகழ்வால் கதாபாத்திரங்களுக்கு நடக்கும்
மாற்றங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என The Art of the Novel கட்டுரை
தொகுப்பில் குறிப்பிடுகிறார்.
உலகம் முழுவதிலும் அவருக்கு பல விருதுகள்
வழங்கப்பட்டுள்ளது. 2010ம் வருடம், செக் நாட்டு குடியுரிமை வழங்கப்பட்டது. 1983ம்
வருடம் ஒரு துருவ நட்சத்திரத்திற்கு அவரை கவுரவிக்கும் பொருட்டு அவர் பெயர்
சூட்டப்பட்டது. செக் குடியுரிமையை அவரிடமிருந்து பறித்தப்பிறகு 1975ம் ஆண்டு
முதல் ஃபிரான்சு குடியுரிமை பெற்று பாரிசில் காலமான மிலன் குந்தேரா நோபல்
பரிசுக்கு பலமுறை பரிந்துரைக்கப்பட்ட அதிமுக்கிய எழுத்தாளர்.
(10 வருடங்களுக்கு முன் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி
