மௌனம் என்பது சம்மதம்/புவனா சந்திரசேகரன்

     நந்தகோபால நவநீத கிருஷ்ணன் என்கிற நந்தா தான் நமது கதையின் நாயகன். சரியான அம்மா தாசன். பயந்தாங் கொள்ளிப் பக்காவடை. அப்பிராணிக்குச் சப்பிராணி. வாயில் விரலை வைத்தால் கூட அம்மாவைக் கேட்டுத் தான் கடிப்பான்.

அவனுடைய அம்மா கோதை ஒரு செல்ல ராக்ஷஸி. நல்லவள் தான் பாவம். ஆனால் வீட்டின் சர்வாதிகாரி என்று தனக்குத் தானே முடிசூட்டிக் கொண்டவள். தான் நினைத்ததை நடத்தியே விடுவாள்.தான் நினைக்காததை மற்றவர்கள் நினைக்கவே கூடாது. அந்த அளவு அராஜகம் வீட்டில்.

நந்தா ஒரே பையன். அதனால் பாவம் அம்மாவின் ராக்ஷஸத் தனமான செல்லமும் கொஞ்சலும் எல்லாமே அவன் மேல் தான் இறங்கும். நந்தாவின் அப்பா வாசுதேவனாகிய வாசு ஆஃபிஸ் போகும் சாக்கில் நழுவி விடுவார். வீட்டில் இருக்கும் நேரங்களில் வாயைத் திறப்பதில்லை. திறந்தாலும் வாய்க்குள்ளேயே முனகிக் கொண்டு ஓடியே  போய் விடுவார்.

நந்தா குழந்தையாக இருக்கும் போது வெளியே கூட்டிக் கொண்டு போகும் சமயம் இரண்டு மூன்று ஃபீடிங் பாட்டில் கை வசம் கொண்டு போவாள் கோதை. தெருவில் ஏதாவது சாமானைப் பார்த்துக் கேட்டு அழும் முன்னரே வாயில் ஏதாவது ஒரு பாட்டில் திணிக்கப் படும்.

கொஞ்சம் பெரியவன் ஆனதும் சாப்பிட இட்லி, தோசை, சப்பாத்தி எல்லாம் கொண்டு போய் அவன் பேச ஆரம்பிக்கும் சமயம் பெரிய பெரிய இட்லித் துண்டுகள் திணிக்கப் பட்டு புஸ் புஸ்ஸென்று குழந்தை திணறும் சத்தம் தான் கேட்கும்.

படித்த போது ஸ்கூலில் எந்த க்ரூப் படிக்கணும் ! எல்லாமே கோதை செய்யும் முடிவு தான்.நந்தா யோசித்து முடிவு சொல்வதற்குள்

“மௌனம் சம்மதம்”

என்று தானே சொல்லி விடுவாள்.

ஊர் உலகமே இஞ்சினியரிங் பக்கம் ஓடி
ஓடிப் போய் ஆட்டு மந்தை மாதிரி விழுந்த போது இவன் மட்டும் பி.எஸ்.சி., எம்.எஸ்.சி., பி.எச்டி என்று முடித்து இன்று காலேஜில் புரஃபசர்.எல்லாம் கோதை சொல்லி நந்தா தலையாட்டி வைத்ததால் தான்.

நல்லது தான் நடந்திருக்கிறது இது வரை நந்தாவிற்கு. அம்மா சொல்லி இவன் தலையாட்டி இதுவரை எல்லாமே நல்லது தான் கண்டிப்பாக நடந்திருக்கிறது. இருந்தாலும் எதையும் தானே முடிவு செய்ய முடியாமல் போய் விடுகிறது என்று அவனுக்கு பயங்கர ஆதங்கம். வாசுவிற்கும் புரிந்தது.

அதனால் நந்தா முடிவு செய்து விட்டான். கல்யாண விஷயத்தில் மட்டும் அம்மா சொல்வதைக் கேட்டுத் தலையாட்டி விடக் கூடாது. மௌனியாக நிற்கவும் கூடாது என்று மனதிற்குள் சபதம் எடுத்துக் கொண்டான். வாசுவும் இந்த விஷயத்தில் மகனுக்கு நூறு சதவீதம் உதவி செய்வதாக உறுதி அளித்தார்.

வாசுவின் பழைய காலப் பள்ளி நண்பரை ஒரு நாள் வாசுவும் நந்தாவும் கோயிலில் சந்தித்தார்கள். அவருடைய மகள் சுபாவைக் கண்டு க்ளீன் போல்ட் ஆனான் நந்தா. அன்று யதேச்சையாக கோதை அவர்களுடன் கோயிலுக்கு வரவில்லை.
அவளுடைய ஃபேவரைட் ஆக்டரின் படம்
டி.வி.யில் வந்து கொண்டிருந்ததால்
அதை மிஸ் பண்ணி விட்டு வர அவளுக்கு
இஷ்டமில்லை. அதனால் அவர்களுக்கு அடித்தது ஒரு ஜாக்பாட் சான்ஸ்.

வாசுவிற்கும் இந்த சம்பந்தத்தில் பயங்கர இண்ட்ரஸ்ட் வந்து விட்டது. மஞ்சள் ரோஜாவுடன் எளிமையான முகத்துடன் அழகான சுபா, நந்தாவின் உள்ளத்தில் உட்கார்ந்து விட்டாள். சுபாவும் நந்தாவும் கண்ணும் கண்ணும் நோக்கியாவாகி உடனே காஷ்மீர், ஸ்விட்சர்லாந்து வரை போய் டூயட்டெல்லாம் மனதிற்குள் பாடி அசடு வழிந்து கொண்டு நிற்க, வாசுவும் அவருடைய நண்பர் சரவணனும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிக் கொண்டு கண்ணீர் மல்க ,”வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்கடா” என்று டயலாக் அடித்து  உணர்ச்சி மல்கி நின்றார்கள்.

“அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே! நண்பனே!”

என்று பாடி மகிழ்ந்தார்கள்.

உடனே வாசுவும் சரவணனும் எப்படியாவது கோதையை மயக்கி சுபாவிற்கும் நந்தாவிற்கும் திருமணம் செய்து முடிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டு காரியத்தில் இறங்கினார்கள்.

அப்போது தான் கோதை நந்தாவிற்குத் திருமணத்திற்குப் பார்க்கலாம் என்று மனதிற்குள் யோசிக்க ஆரம்பித்தாள். வாசு தனது முதல் காயை நகர்த்தினார். தரகரிடம் பேசி தன்னுடைய திட்டத்திற்கு அவரை உடன்பட வைத்தார்.

சுபாவின் ஜாதகத்தை அவருடைய ஜாதகக் கட்டுக்களுக்குள் நுழைத்து அந்த ஜாதகம் பிரமாதமாகப் பொருந்துகிறது என்று சொல்ல வைத்து விட்டார்.

அடுத்து பெண் பார்க்கும் படலம்.இந்தக் காலத்தில் பெண் பார்க்கும் படலம் இல்லை என்று சொல்லிப் பார்த்தார் வாசு. இல்லை இல்லை மென்மையாக முணுமுணுத்துப் பார்த்தார். ம்ஹும்.ஒத்துக் கொள்வதாக இல்லை கோதை.

சரியென்று வழக்கம் போலக் கோதையின் விருப்பம் ஏற்றுக் கொள்ளப் பட, ஒரு நல்ல நாளில் சுபாவின் வீட்டிற்கு நந்தா குடும்பத்தினர்  விஜயம் செய்தனர்.

சுபாவின் பெற்றோர் தடபுடலாக அங்கு
கோதையை உபசரிக்க, அவளும் மனமகிழ்ந்துபோனாள்.

வாசுவும் சரவணனும் தெரிந்தவர்களாகக் காட்டிக் கொள்ளாமல் என்னவோ
அன்று தான் முதன் முதலில் பார்ப்பது போல நடித்துக் கொண்டிருந்தார்கள். சுபாவும் அடக்க ஒடுக்கமாக கோதையிடம் நடந்து கொள்ள கோதை மனமகிழ்ந்து போனாள்.

அடுத்து சுபா நன்றாக சமைப்பாள் என்று அவளுடைய அம்மா சொல்லி இன்றைய சிற்றுண்டி எல்லாம் சுபா தான் செய்தாள் என்று அவளிடம் கண்ணைக் காண்பித்தாள்.

சுபா உள்ளே சென்று சின்னச் சின்னத் தட்டுகளில் அல்வாவும் போண்டாவும் போட்டு எடுத்து வர உச்சி குளிர்ந்து போனாள் கோதை. அல்வா என்றால் அவ்வளவு உயிர் அவளுக்கு.

அழகான ப்ரவுன் கலந்த கண்கவர் மஞ்சள் நிறத்தில் நெய் வடியத் தோற்றமளித்த அல்வாவில் தாராளமாகப் போடப் பட்டிருந்த முந்திரிப்பருப்புத் துண்டுகள் கோதையைப் பார்த்து ஆசையுடன் கண் சிமிட்டின.

கோதை ஆர்வத்துடன் ஒரு ஸ்பூன் அல்வாவை வாயில் வைத்தாள். அவ்வளவு தான் மேலண்ணத்திற்கும் கீழண்ணத்திற்கும் நடுவில் நாக்கு நன்றாக ஒட்டிக் கொண்டு விட்டது கோதைக்கு.

நகர மறுத்தது நாக்கு. கோதுமை மாவில் செய்த அல்வாவா இல்லை ஃபெவிகாலில் செய்த அல்வாவா தெரியவில்லை.

வாய் ஒட்டிக்கொண்டு இருந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் செயற்கையான புன்னகையுடன் எல்லோரையும் பார்த்துக் கொண்டிருந்தாள் கோதை. உடனே வாசு மனைவியைப் பார்த்து உரக்கக் கேட்டார்.

” என்னம்மா பொண்ணு  பிடிச்சிருக்கா ஒனக்கு. நந்தா ஓகே சொல்லி விட்டான்.”

கோதை வாயைத் திறந்து பேச முயற்சி செய்தாள். நாக்கைச் சுழற்றிப் பேச முடியவேயில்லை.

“மௌனம் சம்மதம் தானேப்பா.”

என்று நந்தா சொல்லி விட, மடமடவென்று வெற்றிலை பாக்கு மாற்றிக் கல்யாணத் தேதி முடிவு செய்து பத்திரிகையும் எழுதி விட்டார்கள்.

கோதையால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. வீட்டிற்கு வந்து நீண்ட நேரத்திற்குப்  பின் அவள் கஷ்டப்பட்டு ‌அல்வாவை ஒருவழியாக விழுங்கிப் பேசத் தயாராவதற்குள் உறவினர் அனைவருக்கும் செய்தி போய் விடக் கோதையால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

கல்யாண வைபோகமும் சிறப்பாக நிறைவேற இன்று வரை கோதை யார் வீட்டிலும் அல்வா மட்டும் எவ்வளவு கெஞ்சினாலும் சாப்பிடவே மாட்டாள்.

ஆனால் மாமியார், மருமகளின் ஒற்றுமையைப் பார்த்து ஊரே அதிசயிக்கிறது.

செல்ல ராக்ஷஸி இன்று பிரிய தேவதையாக மாறிவிட்டாள் வீட்டில். எல்லாம் அல்வாவின் மகிமை!