
காப்பரிசி,
கதம்ப சாதம்,
பூ,தேங்காய்,
வாழைப்பழம்
இலையில் பரப்பி
ஆற்றிற்குப்
படையலிட்டு
வணங்க சொன்னாள்-
பாட்டி
அன்று!
வீட்டு
போர் வெல் முன்னே
அத்தனையையும் பரப்பி
வணங்கச் சொன்னாள்-
அம்மா
நேற்று!
அடுக்குமாடி குடியிருப்பில்
செம்பு
தண்ணீருக்கு முன்
அத்தனையையும் பரப்பி
வணங்குகின்றேன்-
நான்
இன்று!
நாளை எப்படியோ?
காற்றோடு
சலசலத்துக்
கிடக்கின்றன.
மெதுமெதுவாக
செத்துக்
கொண்டிருக்கும்
புவியின்
நீர்நிலைகள்.
