ஆடிப் பெருக்கு வெண்பாக்கள்”/மீ. விசுவநாதன்

ஆடிப் பெருக்கன்றே ஆற்றங் கரைசென்று
கூடி உணவருந்திக் கொண்டாட்ட மாடி
ஓடிப் பிடித்து விளையாடும் நெஞ்செல்லாம்
நாடி இருந்ததோ நட்பு.

கலந்துவைத்த சாதம் கனிவாகத் தந்தே
அலைந்தோடும் மீனுக்குக் கொஞ்சம் அளித்திடென்பாள்
அம்மா! சுவையுணவைத் துள்ளிப் பிடிக்கும்
அம்மீன் அழகே அழகு.

சக்கரைப் பொங்கல் புளிசாதம் எள்சாதம்
அக்கறையாய்ச் செய்த அமுதென்றே அக்கணமே
நீருக்குள் நின்றபடி நீள்சொந்தச் சுற்றமுடன்
ஊரே சுவைதல் உயர்வு.

தாமி ரபரணித் தாயவளின் தாய்ப்பாலாய்
நீரதனை நித்தம் சுவைக்கின்ற பேறதனை
ஈசன் அளித்த தனால்தான் மனத்துள்ளே
மாசு படிவதில் லை.

                (03.08.2023 14.41 pm)