காக்கைச் சிறகினிலே!!/?லதா ஸ்ரீனி

(மத்யமர் குழுவிலிருந்து எடுத்தது)

ஒரு 3 வயது இருக்கும். என் சித்தி ஒரு ட்ரெயினிங்க்காக திருச்சியிலிருந்து எங்கள் வீட்டில் தங்க ஊரிலிருந்து வந்திருந்தார். எனக்கு ஒரு பிஸ்கட் பாக்கெட் பரிசு.
ஆசையாய் இரண்டு பிஸ்கட் கையில் வைத்து வேடிக்கைப் பார்த்து சாப்பிடுகையில் எங்கிருந்தோ வந்து என் கையில் இருந்ததை பிடுங்கி சென்றது.பிடுங்கிய வேகத்தில் கையில் அலகு பட்டு எரிச்சல். அதிலிருந்து எனக்கு எதிரியானது காக்கா.

நான் எப்பொழுதும் தோட்டத்திலேயே இருப்பேன். எப்பொழுது பார்த்தாலும் என்னை அது அட்டாக் பண்ணுவது போலவே பறக்கும்.

இதில் அம்மா வடாம் போடும் காலக் கட்டங்களில் நான் தான் காவலாளி.
கையில் குச்சியும்,கம்பில் செருகிய கருப்புத் துணியும் என் ஆயுதங்கள்.

அண்டங்காக்காப் பார்த்தால்- one for sorrow, two for joy, three for letterஎன்று நம்பியது ஒரு வயதில்.அது என்னவோ
எப்பவும் ஒன்று மட்டும் கண்ணில் பட்டு நாளெல்லாம் மனம் சஞ்சலப்படும்.

எங்காவது போகையில் கூட எங்கேயோ சண்டையிடும் இரண்டு காகங்கள் என் மேலேயே விழுந்து எருமை மாடு என்று திட்டு வாங்கும்.
நாளுக்கு நாள் எனக்கும் அதற்குமான பகைமை வளர்ந்து கையில் குச்சியில்லாமல் போவதில்லை.

ஆனால் எனக்கும் அதற்குமான இந்த பகையுணர்வு எந்த கணத்தில் மாற ஆரம்பித்தது என்று தெரியவில்லை.

வெறும் விருந்தினர் வருகை அறிவிப்பாளராகவும், பித்ருக்களாகவும் இருந்த ஒன்று எனக்கு வழிகாட்டியாக மாறியது எப்போது என்று தெரியவில்லை.

நான் படித்த “As the Crow Flies” ஒரு காரணமோ என்னமோ. எனக்கும், அதற்குமான உறவில் ஏதோ புரிதல் நிகழ்ந்தது.

அதற்கு பிறகு என் எண்ணங்களில் குழப்பத்துடன் நான் செல்கையில் எனக்கு பைலட் போல் நெடுதூரம் காகங்கள் வந்த நிகழ்வு, எனக்கு அவற்றை அத்யந்தம் ஆக்கியதா தெரியவில்லை. அது எனக்கு ஏதோ சூசகமாக கூறுவது போல் ஒரு உணர்வு.

ஒருதரம் நானும் என் கணவரும் ஒரு உறவினரை வழியனுப்ப விமான நிலையம் சென்றிருந்தோம். காரில் இருந்து இறங்கி நெடுதூரம் கட்டிடத்தின் உள்ளே சென்று விட்டோம். நல்ல பரபரப்பான வேளை.
திடீரென்று நான் பார்த்திருக்கும் போதே வெட்டவெளியிலிருந்து கட்டிடத்துள் நூழைந்த காகம், நெடு தூரம் உள்ளே பறந்து என் கணவர் தலையில் கொத்தியது. அந்த சில நிமிட அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு உறவினருக்கு டாடா காட்ட இடம் மாறினால் அங்கும் வந்து எல்லாரையும் விட்டு விட்டு இவர் தலையில் அடித்தது. மிக ஆச்சரியம் மற்றும் அச்சம். நான் அவர் மனதை மாற்ற அவர் தலையை கண்ணாடியாக நினைத்ததோ என்று சிரித்தாலும் என் மன சஞ்சலம் விலகவில்லை. அவருக்கு இதிலெல்லாம் அவ்வளவு நம்பிக்கையில்லை. ஆனால் அன்று
இது நிகழ்ந்து 4 மணி நேரத்தில், நெருங்கிய ரத்த பந்த உறவினரின்
இறந்த செய்தி கிடைத்தது.

சில பல வருடங்கள் கழித்து ஒரு திருமணத்திற்கு குடும்பமாகச் சென்றோம். எதேச்சையாக வெளியில் சென்றால் காகபுஜண்டர் கோவில் இருந்தது.அதுவரை நான் கேள்விபட்டிராத செய்தி. மனதில் ஏதோவிதமான ஆச்சர்யத்துடன் தரிசித்து வந்தேன்.

ஒரு நாள் எதேச்சையாக ஏதோ பொட்டலம் கட்டி வந்த வார இதழின் பக்கத்தில் யாரோ ஒருவர் எழுதிய செய்தி கண்ணில் பட்டது. இத்தனை வருடங்களுக்கு பிறகு காகபுஜண்டர் சித்தர் உயிர்ப்பார் எனவும்,அந்த சமயத்தில் சைதாப்பேட்டை ரோடுகளில் படகுகள் செல்லும் என்றும் ஒரு செய்தி துணுக்கு. மனதில் ஒரு கற்பனை எழுந்து visualiseபண்ணியது மனது. படித்தேன்.மூளையில் பதிந்து போயிற்று. மறந்தேன்.

3-4 வருடங்களுக்குப்பின் வெள்ளம்.
சைதாப்பேட்டையில் நிஜமாகவே ரோடுகளில் வெள்ளம் வந்து படகு சென்றது. இது என்னில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

காக்கைகள் எனக்கு ஏதோ சூசகமாக உணர்த்துவது போல் இருந்தது.
இப்பொழுதெல்லாம் கரையும் விதத்தில் காக்கையை அடையாளம்
கண்டு கொள்ள பழகினேன்.

ஒரு நாள் எங்கள் கொல்லையில் வித்யாசமான காக்கைச் சத்தம்.
பார்த்தால் வெள்ளை நிற காக்கை. ஆனால் நான் பார்த்தவுடன் பறந்து விட்டது.
எனக்கு ஆச்சரியம். என் மாமியிடம் கூறினால் நம்பவில்லை.என் பெண்ணிடம் கூறினால் எனக்கு ஏதோ
ஆகிவிட்டது போல் பார்த்தாள்
வாயை மூடிக் கொண்டேன். இரண்டு நாட்களில் என் கணவர் ஒரு பெரிய தொகை அலுவலகம் இவருக்கு கொடுப்பதாக கடிதத்துடன் வந்தார்.
இப்பவும் நான் யாரிடமும் எதுவும் கூறவில்லை. ஆனால் எனக்கு மனதில் ஒரு நம்பிக்கை.

ஒரு மாதம் கழித்து நானும் என்சிறிய பெண்ணும் ஸ்கூட்டரில் செல்கையில் வெள்ளை காக்கை கண்ணில் பட்டது.
அவளிடமும் காண்பித்து விட்டேன்.
இந்த தடவை அறிவியல் மனது இது Albino வகை என்று பகுத்தறிந்தது.ஆனால் அவளிடம் காட்டியதில் மன சமாதானம்.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு காக்கைகள் கூடு கட்டும் நேரம். ஒரு காலை நேரம் நான் தோட்டத்தில் சில குச்சிகளுடன் நின்றிருந்தேன்.அந்த காக்கா என்னையே பார்த்திருந்தது.
குச்சியை போட்டு விட்டு நகர்ந்தால்,அதை எடுத்துக் கொண்டு போய் கூடு கட்டியது. ஒரு வாரத்தில் கூடு ரெடி. நானும் ஏதோ யோசனையில் கவனிக்கவில்லை.

திடீரென்று ஒருநாள் தரையில் நிறைய குச்சி,கம்பி வயர் இருந்தது. பார்த்தால் கூடு கலைந்துவிட்டது. எனக்கு மிகவும் மனம் கஷ்டமாகிவிட்டது. கம்பி வயர் எடுத்து கேட்டில் சொருகி வைத்தேன்.
பார்த்துக் கொண்டே இருந்துவிட்டு
எடுத்துச் சென்று வேறு இடத்தில் கூடு ரெடி.

தினம் சாதம் போட்டால் சாப்பிடுவதே இல்லை. ஆனால் காலை 3 தரம் ,மாலை 3 தரம் என்னை மிரட்டி கழுத்தை இப்படியும் அப்படியும் மாய பார்வை பார்த்து மயக்கி பிஸ்கட் வாங்க தெரிந்து கொண்டது.
ஒன்று கதவில் அமர்ந்து கத்தி, கத்தி
குரல் கம்மியதால் எரிச்சலாய் இந்தா என்று நீட்டினால் கையில் இருந்ததை
லாவகமாக எடுத்து கழுத்தை வளைத்து ஒரு அன்பு பார்வையுடன் பறந்து சென்றது. போட்டதை சாப்பிடாமல் படுத்தியதால் அதற்கு என் பெரிய பெண்ணின் பெயர் வைத்தேன்.

வருடாவருடம் காகம்,குயில் போடும் சண்டையில் குயிலை காப்பாற்றி பாதுகாத்து பத்திரமாய் வெளியில் அனுப்புவது வழக்கமாய் போனதில்
காக்கையை சக மனிதர்கள் குணாதிசய ஒப்புமையுடன் கவனிக்க ஆரம்பித்தேன்.

பொறுமை,பதவுசு,நளினம் என்று சிலவும்,ஆர்ப்பாட்டம்,அதிரடி, அடம்,அதட்டல் என்று சிலவும் அமைதி,வாயாடித்தனம் என சிலவும்
புரிந்தது.

அமெரிக்கா சென்ற பொழுது, மனது வெறுமையாய் இருக்கையில் காதில் தேன் பாய்ந்தது போல் தூரத்தில் கேட்டது காக்கையின் கரைதல்.சட்டென்று அந்த ஊருடன் ஒரு தோழமை உணர்வு ஏற்பட்டதென்னவோ உண்மை. பிறகு வெளியில் சென்றால் கண்கள் ஆகாயத்தில் தேடும். என் பெண்ணைக் கேட்டதில் ஒரு இடத்தில் அழைத்துச் சென்று காண்பித்தாள்.ரேவன் எனும் மிகப் பெரிய அண்டம் காக்கை. இதற்கு நம் சாதாரண காக்கையின் குணாதிசயங்கள் இருக்குமாத் தெரியவில்லை.

இப்பொழுதெல்லாம் எனக்கு பேச்சுத் துணையாய், என்னவோ காலில் கடிகாரம் கட்டியது போல் நேரம் தவறாமல் ஆஜராகி அளவளவாவி
Breakfast,Lunch,tea சாப்பிட தினம் வந்தாகிறது. வீட்டிலுள்ளோருக்கு இல்லையென்றாலும் மளிகை லிஸ்ட்டில் முதல் சாமான் ஒரு டஜன் பிஸ்கட் பாக்கெட் தான். எந்த ஊருக்கும் போகப் பிடிக்கவில்லை.
என்னை பார்க்காமல் அவர்கள் திண்டாடுவார்களே எனும் பயம் தான்.
இதுதான் “Universe Conspires” என்பதின் ஒரு பரிணாமமோ?

2 Comments on “காக்கைச் சிறகினிலே!!/?லதா ஸ்ரீனி”

Comments are closed.