ரத்னாவெங்கட் கவிதை

நடைபாதையின்
நீள் வட்ட அளவு
கூடவும் குறைந்தும் போகிறது
காணும் காட்சியில்
எடுக்கிற பெருமூச்சில்

கண்ணுக்குப் புலப்படாது
ஒற்றைக் கேவலாய் ஒலித்து
மனதை அறுக்கிற
‘குக்கூ ‘..

பூத்துக் காய்க்காத
மாமரக் கிளையசைவில்
சட்டென இடம் மாறுகிற கிளிக்கூட்டம்..

ஈரித்திருக்கிற சிமென்ட் பெஞ்சில்
வரிசை தப்பி அலைபாய்கிற எறும்பு..

கவனக்குறைவாய்
எதிர்ப்பட்டு
அவஸ்தையாய் புன்னகைக்கிற
கண்ணாடியணிந்த
எதிர் வீட்டுக்காரர்..

என்றோ கூடியதை
இன்றே கரைக்கிற
மும்முர வேகத்தில்
நடை பயில்கிற அந்த
நடுத்தர வயது பெண்மணி..

சறுக்கு மரத்தில்
ஏறி இறங்குகையில்
அத்தனை குதூகலத்துடன்
கை தட்டுகிற
அந்தக் குழந்தையைத் தவிர

அனைவரிடமும்
என்னிடமிருக்கிற
அதே அளவு துயரத்தின்
நிழல் படிந்த
வாழ்வின் சாயல்…