
சிலப்பதிகாரத்தில் இருந்த நீண்டநாள் சந்தேகத்தை தமிழ் பேராசிரியரிடம் கேட்டேன்
“கோவலனை கொலைக்களத்துக்கு கொன்டு சென்று காவலர் கொன்றுவிடுகிறார்கள். கண்ணகி அவனது சடலத்தை காணச்செல்கிறாள். அவனது சடலத்தை மடியில் போட்டு அழ அவன் உயிர்பெற்று எழுகிறான். “கன்றியது உன் முகம்” என கனிவுடன் பேசுகிறான். உடன்கட்டை ஏறிவிடாமல் இருக்க “நீ இருக்க” என அவளுக்கு கடைசி செய்தியை சொல்லிவிட்டு விண்ணுலகு செல்கிறான்.
கண்ணகி மடியில் கோவலன் உயிர்பெற்று எழுந்தது எப்படி?”
அவர் கூறியதாவது
கோவலன் கொல்லபட்ட முறை பற்றி சிலம்பு அவன் “விலங்கூடு அறுக்கபட்டதாக” குறிப்பிடுகிறது
விலங்கு என்றால் குறுக்கே இருப்பது என பொருள். இரு காலில் நேராக நிற்காது குறுக்காக நாலு நாலில் நிற்பதால் விலங்கு. இடையை குறுக்கு என சொல்வதும் இப்படித்தான். “குறுக்கு சிறுத்தவளே..” என பாடல் உண்டு
“குறுக்கே பேசாதே” என்றால் “இடுப்பில் பேசாதே” என பொருள் அல்ல. “நான் பேசுகையில் நடுவே புகுந்து பேசாதே” என பொருள்
ஆக “விலங்கூடு அறுத்தது” என்பது அவனது இடையை குறுக்கே வெட்டி கொல்வதை குறிப்பிடும் கொலைத்தண்டனை முறை
சில ஆங்கிலபடங்களில் கூட பார்க்கலாம். ஒருவனை கொல்வதிலேயே மிக வலி நிரம்பிய முறை அவனது வயிற்றில் சுடுவதுதான். நெஞ்சு, தலையில் குண்டு பாய்ந்தால் உடனே உயிரிழப்பார்கள். கை,காலில் குண்டு பட்டால் பிழைத்துவிடுவார்கள். அடிவயிற்றில் குண்டு பட்டால் மணிக்கணக்கில் துடித்து உயிர் இறப்பார்கள்.
இத்தகைய கொடூரமான தண்டனை கோவலனுக்கு வழங்கபட்டது. இடையை அறுத்துவிட்டு சென்றுவிட்டார்கள். மணிக்கணக்கில் துடித்தபடி ரத்த இழப்பு ஏற்பட்டு வலியால் மயங்கிக்கிடக்கிறான். கண்ணகி வந்து மடியில் ஏந்தியவுடன் சுய நினைவு பெற்று “கன்றியது உன் முகம்” என கனிவுடன் சொல்கிறான். அதன்பின் உயிர் பிரிகிறது.
ஆக இதன்மூலம் பண்டைய தமிழரின் தண்டனை முறைகள் பற்றியும் தெரிந்துகொள்ள முடிகிறது
கண்ணகி குறித்த பெண்ணிய பார்வை பற்றிய அவரது விளக்கம்
அடுத்த பதிவில்….
~
