
தேநீர்க் கோப்பையை எடுத்தபின்
தயங்கி நின்ற பாண்டியை
சிறிது நேரம் சென்றே பார்த்தேன்.
அழகான ஓவியத்துடன்
வாழ்த்தட்டை கொடுத்து
புத்தாண்டு வாழ்த்து வரிகள்
எழுதித் தரச் சொன்னான்.
கேட்கவும் சொல்லவும்
சுகமாயிருக்கிற
சந்தச் சொற்கள் கோர்த்து
சில வரிகள் எழுதித் தந்தேன்.
பதினாறு வயதிருக்கும் பாண்டிக்கு.
யாருக்கு வாழ்த்தட்டையென
நாவின் நுனி வரை வந்த
கேள்வியை முழுங்கி
வேலையில் மூழ்கினேன்.
புத்தாண்டு விடுமுறை கழிந்து
மறுநாள், முகம் பூரா மகிழ்வோடு
தேநீர் கொணர்ந்த பாண்டியைப்
பார்த்தேன்.
அரை டிரவுசரில் பார்த்த பாண்டி
இப்போ, முழுக்கால் டிரவுசரில்
வித்யாசமாய்.
வாழ்த்துக்கள் சொன்ன பாண்டியிடம்
கேட்டேன், சேதியென்னவென.
அரை டிரவுசரில் வருவது
வெட்கமாயிருப்பதாக
பத்திரிகை ஆசிரியரிடம் சொன்னதையும்,
புது வருஷம் பிறக்கட்டும்
புது முழுக்கால் டிரவுசர் உனக்கென
அவர் சொன்னதையும்
வெட்கமும் சிரிப்புமாய்ச் சொன்னான்.
அதனால், அவருக்கெனத் தனியாய்
புத்தாண்டு வாழ்த்தட்டை தர
ஆசைப்பட்டு தந்ததையும் சொன்னான்.
சின்னச் சின்னதாய்க் காரியங்கள்
எத்தனை மகிழ்வையும்
எத்தனை நிறைவையும்
கொடுக்க முடியுமென
ஆச்சரியமாயிருந்தது.
ஆண்டு அதேதான்,
புதிதாய் மாற்றுவது
நம் கையில்தான்
எனத் தோன்றியது.

ஆண்டோ பதினாறு!
எல்லாமே புதுசுதான்!
பிறர் ஆசை எல்லாம் நமக்கும் புதுசோ!
ஆஹா