நட்புக்கு வயது நாற்பத்தெட்டு!/எஸ் வி வேணுகோபாலன் 

நிறப்பிரிகை19

னது கைக்கு வந்து சேர்ந்த அஞ்சல் உறை மீது, ‘இந்தியன் வங்கி உங்கள் அதிருஷ்டத்தை உருவாக்க உதவி செய்யும்’ என்று ஆங்கிலத்தில் முத்திரை வாசகமும் இலச்சினையும்  பொறிக்கப்பட்டிருந்தது. உறையைப் பிரித்துப் பார்க்கையில், ‘வங்கியில் எழுத்தராகச் சேருமாறு உங்களுக்கு வழங்கியிருந்த பணி நியமன உத்தரவை ரத்து செய்திருக்கிறோம்’ என்று பேசியது ஒரு கடிதம். அது பிப்ரவரி 1981.  

39 ஆண்டுகள் இந்தியன் வங்கியில் பணியாற்றியது, பிறகு எப்படி சாத்தியமானது!

சென்னையில் 1975இல் புகுமுக வகுப்பில் சேர்ந்த புதிதில், வேதியியல் புத்தகம் ஒன்றைத் தன்னிடம் திருப்பித் தருவதற்கு வந்த கல்லூரி மாணவரை ஏபிவிபி அமைப்பாளர் சி கோபாலன் எனக்கு அறிமுகம் செய்வித்தார், ‘உனக்கு ஏத்த இலக்கியவாதிப்பா’ என்று ! அன்று நடக்க ஆரம்பித்தேன் அவரோடு. 

“வண்ணதாசன் படிச்சிருக்கியா சுகந்தன்?” என்றார் ஒரு நாள். சுகந்தன், கவிதைக்காக நான் வைத்துக் கொண்ட புனைபெயர்.  

கோடை விடுமுறையில் வேலூர் நூலகத்தில் வண்ணதாசன் தொகுப்பு ஒன்றைப் படிக்க ஆரம்பித்தது அப்படித்தான். ‘மௌனியைப் படி முதலில்’ என்று மற்றொரு நாள் புத்தகம் கொடுத்தார்.   பிரமிள் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார் இன்னொரு நாள்.  இதற்கிடையே ஒரு ஜோல்னாப் பை அவரைப் போலவே என் தோள்களிலும்!  

சென்னை எல்டாம்ஸ் சாலையில் மாதாந்திர இலக்கியச் சிந்தனை கூட்டத்திற்கு அழைத்துப் போனது அவர் தான். இன்னொரு நாள் அடையாறு  தியசாஃபிகல் சொசைட்டி வளாகத்தின் அடர்ந்த இயற்கைச் சூழலுக்கு நடுவே அசாத்திய எளிமையோடு தத்துவ ஞானி ஜே கிருஷ்ணமூர்த்தி உரையாற்றிக் கொண்டிருந்த கூட்டத்தில் கொண்டு அமர்த்தினார். 

வாசிப்பின் தளங்கள் விரிவடைய அவரோடு பயணம் தொடர்ந்தது.  மேற்கு மாம்பலத்தில் இலக்கியக்  கூட்டங்கள், ஒரு கையெழுத்து பத்திரிகை, பிறகு அவரது முழு தயாரிப்பில் அச்சில் வந்த மலர்த்தும்பி, பின்னாளில் பரந்து விரிந்து பேசப்படும் ஒரு சிற்றிதழைத் தொடங்கும் கட்டத்திற்கு அவரை நகர்த்தியது. அவரது இலக்கிய வட்டம் பெரிதானது. 

நான் இதே காலத்தில் வேறு தளத்தில் தொழிற்சங்கப் பொறுப்பில் இயங்கிக் கொண்டிருந்தாலும், நட்பு மேலும் நெருக்கமானது – இத்தனைக்கும் அவருக்கு நேரெதிர் தொழிற்சங்கத்தில் நான் ! 

சில ஆண்டுகளுக்குமுன், அவரது சிற்றிதழின் நூறாவது இதழ் சிறப்பாக வெளியிடப்பட்ட தருணத்தில்,  அசோகமித்திரன் போன்ற பிரபல படைப்பாளிகளோடு எனது எழுத்தும் இடம் பெறச் செய்திருந்தார்; விழாவில் என்னையும் பேச அழைத்தார். 

புத்தகக் கண்காட்சியில் எத்தனையோ சிரமங்களுக்கு இடையில் சளைக்காமல் ஸ்டால் போட்டு, வருகை தரும் இலக்கியவாதிகள், வாசகர்கள் சந்திப்பின் இன்பத்தில் திளைப்பார். பணி நிறைவுக்குப் பிறகு மேலும் தீவிரமாகப் புத்தக உலகத்தில் இயங்க ஆரம்பித்துவிட்டார்.  இணையவழியில் கொரோனா காலம் தொட்டுத் தொடரும் இலக்கிய பயணத்தில் அன்பர்கள் பலரை ஈர்த்து வருகிறார்.  ‘நவீன விருட்சம்’ ஆசிரியரான அழகியசிங்கர் எனும் சந்திரமௌலி தான் அவர்!

ஏன் அவரோடு இத்தனை நெருக்கம் என்று திடீர் என்று ஒரு நாள் உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால், இருவருமே இளமையில் தாயைப் பறிகொடுத்தவர்கள். பாட்டியின் வளர்ப்பு. இருவரும் வேதியியல் படித்தோம். ஒரே வங்கியில் பணியாற்றினோம். எழுத்து, வாசிப்பு என்று பித்துப் பிடித்துத் திரிவதிலும் ஒற்றுமை. இதெல்லாம் இல்லாவிட்டாலும் நண்பர்களாகத் தான் இருந்திருப்போம் என்று தோன்றுகிறது. 

தெல்லாம் சரி, ரத்து ஆன வங்கி வேலை நியமனம் எப்படி மீண்டும் கைக்கு வந்தது, முதலில், ஏன் ரத்து செய்யப்பட்டது?  

1979இல் பி எஸ் ஆர் பியின் முதல் தேர்வில் தேர்ச்சி பெற்று, அந்த ஆண்டு டிசம்பரில் நேர்முகத் தேர்வுக்குச் செல்கையில், கோயமுத்தூரில்  எம் எஸ் சி சேர்ந்து விட்டிருந்தேன்.  டெபுடி கலெக்டராக இருந்த என் தந்தை அடுத்த சில மாதங்களில் தருமபுரிக்குப் பணி மாற்றலில் சென்றுவிடவே குவார்ட்டர்ஸ் காலி செய்துவிட்டு, நான் வேறோர் இடத்தில் தங்கியிருந்தேன்.  

பதிவு அஞ்சலில் வந்த பணி நியமன உத்தரவு குவார்ட்டர்ஸ் முகவரிக்குப் போய், ஆள் இல்லை என்று வங்கிக்கே திருப்பி அனுப்பப்பட்டு விட, உத்தரவு ரத்தானது.  அந்தத் தகவல் தான் சாதாரண அஞ்சலில் குவார்ட்டர்ஸ் முகவரிக்குப் போய் அங்கிருந்து எப்படியோ என் தந்தையின் பியூன்  நாச்சிமுத்து அய்யா மூலம் என்னை வந்தடைந்தது.  

இந்தக் கதையறிந்ததும், சென்னையிலிருந்த என் அண்ணன் எஸ் வி ரங்கராஜன், நேரே சென்று சந்தித்தது நண்பர் சந்திரமௌலியைத் தான்! மௌலி என்னை சென்னைக்கு வரவழைக்க,  அவருடைய நண்பர் ராஜேந்திரனின் ஆலோசனை பெற்று நிர்வாகத்திற்கு ஒரு கடிதம் தந்ததும், இழந்த வேலை உடனே வழங்கப்பட்டுவிட்டது !  

சந்திரமௌலியால் தான் வேலை வாய்ப்பு மீண்டது என்று சொல்வது மிகவும் சராசரி வாக்கியம்.  அதற்குச் சில மாதங்கள் முன்பு தான், தொழிற்சங்கப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டதற்காக நிர்வாகத்தால் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டிருந்த பலரில் அவரும் ஒருவர். தென்கோடி களியக்காவிளை கிளைக்குத் தண்டனை மாற்றல் தயாராகி இருந்தது அவருக்கு. பின்னர் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டு, சென்னையிலேயே பணியில் சேர அனுமதிக்கப்பட்டார் என்பது வேறு கதை. 

தனது சொந்த வேலையே நிச்சயமற்று இருந்த சிக்கலான நாளொன்றில், அடுத்தவரது வேலை வாய்ப்புக்கு உதவத் துடித்த அவரோடான நட்புக்கு வயது 48!

(நிறங்கள் இன்னும் விரியும் )

கட்டுரையாளர் மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmail.com

நன்றி: புதிய ஆசிரியன் ஆகஸ்ட் 2023