யோகியுடன் கொஞ்ச நேரம்/பார்த்தசாரதி

1980களின் ஆரம்பத்தில் சுவாமி யோகி ராம்சுரத்குமாரின் சந்நிதித் தெரு வீட்டில் ஆண்களும், பெண்களுமாய் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

சுவாமி தன் இருக்கையில் இருந்தபடியே, தன் பனையோலை விசிறியை உயர்த்திப் பிடித்து அனைவரையும் ஆசீர்வதித்துக் கொண்டிருந்தார்.

“நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?”
சுவாமி ஒரு பக்தரிடம் வினவினார்.

“சுவாமி நாங்கள் பெங்களூரில் இருந்து வருகிறோம்.”
பக்தர் பதிலுரைத்தார்.

“சுவாமி நீங்கள் பெங்களூர் வந்திருக்கிறீர்களா?”
பக்தர் ஆவலுடன் வினவினார்.

சுவாமி சிறிது நேரம் மௌனமாக இருந்தார்.

“பிரபல விஞ்ஞானி சர்.சி.வி.ராமனைப் பார்ப்பதற்காக பெங்களூருக்கு இந்த பிச்சைக்காரன் வந்திருந்தான்.”

“சுவாமி அவரைச் சந்தித்தீர்களா?”
பக்தர் மீண்டும் வினவினார்.

“அவரது பண்ணை வீட்டில் இந்தப் பிச்சைக்காரன் அவரைச் சந்தித்தான். இந்த பிச்சைக்காரனின் பல சந்தேகங்களை அந்த விஞ்ஞானி தீர்த்து வைத்தார். இந்த பிச்சைக்காரனோடு வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார். இந்த பிச்சைக்காரனுக்கு ஆகாரமும் அளித்தார்.”
சுவாமியின் குரல் தழுதழுத்தது. கண்கள் ஈரமாயின.

“உயர்ந்த மனிதர் அவர்.”
சுவாமி பழைய இனிய நினைவுகளில் திளைத்திருந்தார் போலும்.

அங்கு மீண்டும் ஆழ்ந்த அமைதி நிலவியது.

“சுவாமி நீங்கள் கரூர் வந்திருக்கிறீர்களா?”
மற்றொரு பக்தர் ஆர்வத்தோடு கேட்டார்.

“கரூருக்குப் பக்கத்தில் உள்ள நெரூர் என்ற கிராமத்திற்கு இந்த பிச்சைக்காரன் சென்றிருக்கிறான். அங்கே சதாசிவ பிரமேந்திர சுவாமிகளின் சமாதியைத் தரிசிக்கச் சென்றிருந்தான்.”

“சுவாமி எனது ஊர் சிவகாசி. எங்கள் ஊருக்கு வந்திருக்கிறீர்களா?”
மற்றொரு பக்தர் ஆவலோடு கேட்டார்.

“தென்காசி செல்லும் வழியில் இந்தப் பிச்சைக்காரன் சென்ற ரயில் திருத்தங்கல் மற்றும் சிவகாசி ரயில் நிலையங்களில் நின்று சென்றபோது இந்த பிச்சைக்காரன் பார்த்திருக்கிறான்.”

“சுவாமி நீங்கள் தூத்துக்குடி வந்திருக்கிறீர்களா?”
மறறொரு பக்தர் வினவினார்.

“இந்த பிச்சைக்காரன் தூத்துக்குடி வந்திருக்கிறான். அந்த ஊரில் வேப்ப மரங்களும், அரச மரங்களும் மிக அதிகமாகவும், மிகப் பெரியதாகவும் இருந்தது. அந்த ஊருக்கு இன்னொரு பெயர் உண்டு. உங்களுக்குத் தெரியுமா?”
சுவாமி வினவினார்.

தூத்துக்குடி பக்தர் திருதிருவென விழித்தார்.

“திருமந்திர நகர்”. சுவாமி மெதுவாகச் சொல்லிச் சிரித்தார்.

சுவாமியின் சாதனா கால தேச சஞ்சார வாழ்வில், இந்த புண்ணிய பாரத பூமியின் நீள அகலத்தை எத்தனை முறை வலம் வந்தாரோ!?

யோகி ராம்சுரத்குமாரா ஜெய குரு ஜெய குரு ஜெய குரு ராயா