மூழ்கிப் போனவன்/நாகேந்திர பாரதி

‘ஆண் பிள்ளைங்க அழக்கூடாதுன்னு சொன்னவங்க காதலிக்காதவங்களாகத்தான் இருக்கணும்’ ரவியின் கண்களில் வழியும் கண்ணீர் அவன் காதலுக்குச் சாட்சி .

அவன் அலுவலகத்தில் ரமா வந்து சேர்ந்த நாள் , அழியாத புகைப்படம் போல் பதிந்திருக்கிறது. அவனிடம் தான் முதலில் வந்து கேட்டாள் . ‘திருநெல்வேலியில் இருந்து மாறுதலாகி வந்திருக்கேன். அக்கௌன்ட் செக்சன் இதுதானே’ . அந்த மாறுதல் லெட்டரைக் கொடுத்த அந்த மென்மையான விரல்கள் அவன் மனதில் உடனே இறங்கின. நிமிர்ந்த போது நீல நிறக் கண்கள். அதற்கேற்றாற் போல் முகத்திற்குமேல் படர்ந்திருந்த நீல நிறத் துப்பட்டா செதுக்கிய மூக்கு. செவ்விதழ்கள். ஜிவ்வென்று இறங்கியது அவள் முகம் அவன் இதயத்திற்குள்.

அதற்குப் பின், அவள் வேலை செய்த விதம் ,அனைவரிடமும் பழகிய விதம், அந்தப் பண்பான சிரிப்பு. பைத்தியமாகிப் போனான். அவள் விடுமுறை எடுக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாகக் கழியும். அவள் திரும்பும் நாள் ஒரு வசந்த நாளாக மாறும். பேசினான் .பழகினான். காதலைச் சொல்லத் தயங்கினான் .மறுத்துவிட்டால் என்ன செய்வது.

அவள் வீட்டு முகவரி தெரிந்துகொண்டு அந்த வீதிகளில் விடுமுறை நாட்களில் அலைந்தான். அவள் கடைத்தெரு செல்லும் போதும் கம்ப்யூட்டர் வகுப்புக்குச் செல்லும் போதும் அவள் பின்னாலயே சுற்றினான் . அவளுக்குத் தெரிந்து போனது.

ஒரு நாள் மதிய நேரம் உணவு இடைவெளியின் போது சொன்னாள் .
‘ எனக்குப் பிடிக்கல.’
‘ ஏன்’
‘ உங்களுக்குப் பொறுப்பு இருக்கு. பதவி உயர்வு வரும் நேரம். நேரத்தை வீணடிக்காதீர்கள். உங்கள் தம்பி தங்கை வாழ்வு உங்கள் கையில் தான் இருக்கு .மறந்துடாதீங்க ‘.

அவள் நாசுக்காகப் பேசிய விதம் அவள் மேல் அதிகம் காதல் கொள்ள வைத்தது.
‘ உங்க துணை எனக்குக் கிடைக்காதா’ என்று கேட்டான்.
‘ கஷ்டம்’
‘ஏன்’
‘ சொல்லத் தெரியல’
‘ என்னைப் பிடிக்கலையா’
‘ அப்படி இல்லை’
‘ வேறு எப்படி’
‘கொஞ்ச நாள் போகட்டும் ‘
‘எவ்வளவு நாள்
‘ ஒரு வருடம் ‘
‘ஜாஸ்தி ‘
‘தேவை அவ்வளவு நாள். நீங்க படியுங்கள் படிக்கிறதோடு நிறுத்திக்கங்க . ஆபீஸ்ல என்னை அடிக்கடி பார்க்கிறது எல்லாம் வேணாம். . நீங்க படிப்பிலே வேலையிலே மூழ்கிப் போய் சீக்கிரம் மேனேஜர் ஆகணும். ‘
இது அனுமதியா அறிவுரையா நாகரிக மறுதலிப்பா .

புரியாமல் தவித்தான். ஆனால் அதன் பின் அவள் வீட்டுப் பக்கம் போவதைத் தவிர்த்து விட்டான்
படிப்பு ,படிப்பு ,பதவி உயர்வு, மாறுதல் ,பம்பாய் .
‘ போயிட்டு வாங்க’ புன்முறுவல் முகம்.
புரியாமல் போனான்.

பம்பாய் போனபின் வேலைப்பளு. வாழ்க்கை மாறியது. தம்பி, தங்கை, படிப்பு ,வேலை என்று நாட்கள் பறந்தன .இரண்டு வருடங்கள் கடுமையான உழைப்பு. வேலையிலேயே மூழ்கிப் போனான். . மேனேஜர் ஆகியாச்சு. இப்போது தங்கை திருமணத்திற்குப் பத்திரிக்கை வைக்க வந்திருக்கிறான். மறுபடி அந்த அலுவலகத்தில். உள்ளே நுழைந்து பழைய நண்பர்களைப் பார்த்துப் பேசும்போது கண்கள் ரமாவைத் தேடின .

புரிந்து கொண்ட நண்பன் சொன்னான். ரமாவுக்குப் போன மாதம் கல்யாணம் ஆயிடுச்சு. திரும்பத் திருநெல்வேலிக்கு மாறுதல் வாங்கிட்டுப் போயிட்டாங்க. உன்னப் பத்தி அடிக்கடி கேட்பாங்க. நீ தான் நாங்க போட்ட மெசேஜ் எதுக்குமே பதிலே போடலை . வேலையிலேயே மூழ்கிப் போயிட்ட போலிருக்கு. . அத்தோட குடும்பப் பொறுப்பிலேயேயும் மூழ்கிட்டேன்னு நாங்க பேசிக்கிட்டோம், ரமாவும் தான். ‘

ஆண்பிள்ளைங்க அழக்கூடாதுன்னு காதலிக்காதவங்க தான் சொல்லுவாங்க.

————-